top of page

எதுவும் கடந்து போகும்

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 1 day ago
  • 4 min read



பிணிகளில் கொடியது பசிப்பிணி என்கிறார் போகர்.  பசி கொண்டலையும் பூதங்கள் போல் காண்பவற்றை எல்லாம்  விழுங்கித் தீர்த்த பின்னரும் இன்னுமின்னும் வேண்டுமென  கொழுந்து விட்டு எரியும் பசியினை நோய்மையாகவே காணத் தோன்றுகிறது 'தனித்திரு பசித்திரு விழுத்திரு' என்கிற கூற்றின் இரு பகுதிகளான தனித்திருத்தலும் பசித்திருத்தலும் அளவை மீறிவிடுகிற பொழுது விழிப்புணர்வு முற்றிலுமாக மழுங்கடிக்கப் படுகிறது. தலைமுறை வேறுபாடில்லாமல் அனைத்துத் தரப்பு வயதினரையும் வெவ்வேறு விதத்தில் இன்று ஆட்கொண்டிருக்கிறது பசியெனும் பெரும்பிணி. எல்லாமே மிகுதியாக கிடைப்பதால் பசியின் அளவும் பெருமடங்கு கூடிவிட்டது.  உணவுத் தேவைக்காக நாகரிகங்களை கட்டமைத்த மனிதனது வேட்கை காலப்போக்கில் பன்மடங்கு பெருகி தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியோடு  இன்று பல்வேறு விதங்களில் கிளைத்துப் பரவத் துவங்கியிருக்கிறது.  


        தெரிவுகள் பெருகி விட்ட காலமிது.  தனிமனித விருப்பம் முக்கியத்துவம் பெற்றிருப்பதால்  எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் தமது விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யும் வசதியை நுகர்வு கலாச்சாரம் நமக்கு வழங்கியிருக்கிறது. முந்தைய தலைமுறையினர் ஆடம்பரமாக கருதிய யாவும் இன்றைய தலைமுறையினருக்கு அத்யாவசியமாகிவிட்டதால்   தட்டிப் பறிக்கும் நிலை என்பது நியாயப்படுத்தப் படுகிறது.


      சமூகம்  ஒரு தலைமுறையினர் மட்டுமே அங்கம் வகிக்கும் தனியறையல்ல,   பல்வேறு தலைமுறையினரும் அங்கம் வகிக்கும் ஒரு கூட்டுப் பெட்டகம். தொழில்நுட்ப வளர்ச்சியின் அசாத்திய வளர்ச்சி அனைத்துத் தலைமுறையினரின் கண்ணோட்டத்தின் அடிப்படையையும் மாற்றியமைத்திருக்கிறது என்கிற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுதுதான் நல்லனவற்றை சீர்தூக்கி பார்க்கவும் நல்லன அல்லாதவற்றை களையும் தெளிவும் நமக்கு வாய்க்கும். அதைவிடுத்து இளைய தலைமுறையினரை மட்டுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பழி சுமத்தும் பார்வை எவ்வகையிலும் நன்மை பயக்க போவதில்லை.


       தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்ட முந்தைய தலைமுறை இன்று தனது பிள்ளைகள் அனைத்தையும் வென்று விடவேண்டுமென்னும்  தமது ஆற்றாமையை அவர்களுக்கு அன்பெனும் பெயரில் புகட்டுவதால்  இளைஞர்கள் செய்வதறியாது  விழி பிதுங்கி நிற்கிறார்கள். அவர்களுக்கு தேர்வு செய்வதில் குழப்பம் தொற்றிக் கொள்கிறது. எது தனக்கு உகந்தது என்கிற தெளிவு பிறக்குமுன்னரே பெற்றோரும் சமூகமும் அவனுக்கு வாய்ப்புகளெனும் பெருங்கதவை திறந்து வைக்கும்பொழுது திசைகளைத் தீர்மானிக்க இயலாதவனாகி விடுகிறான்.  ஒரு கட்டத்தில் அனைத்தையும் முயற்சி செய்து பார்க்கத் துணிந்து எல்லாத் திசையிலும் பயணிக்கத் துவங்குகிறான். தனது பாதையை தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அற்புதமானதுதான் மறுப்பதற்கில்லை. ஆனால்  இலக்கை அடைவதற்குள் எத்தனை பெருங்குழிகள் விழுங்கக் காத்திருக்கின்றன என்பதைக் குறித்த புரிதலை அவனுக்கு வழங்கவேண்டியது மூத்தவர்களின் இன்றியமையாத கடமையாகிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாமல்  துவக்கத்திலேயே களையக்கூடிய சிறு தவறுகளும் காலத்தால் அழிக்க முடியாத பெருங்குற்றங்களாக உருவெடுத்து அவர்களை நிரந்தர குற்றவாளிகளாக மாற்றிவிடுகின்றன.


      அடுத்த தலைமுறையின் உலகத்தை புரிந்து கொள்ள விரும்பாத முந்தைய தலைமுறையின் புரிதலின்மையால் உருவாக்கப்பட்டதுதான்  தலைமுறை இடைவெளி எனும் பதம்." உனக்கு என்ன இல்லை, எல்லாம் உனக்குக் கிடைத்திருக்கிறது. பின் ஏன் வெற்றிப் பெறுவதில் தயக்கம் காட்டுகிறாய்" என குற்றஞ்சாட்டும் பெரியவர்களின் மனப்பான்மையானது இளைஞர்கள் தங்களையும் மற்றவர்களையும் பந்தய குதிரைகளாக காணத் தூண்டுகிறது. தன் குழந்தை வகுப்பில் முதன்மை மாணவனாக மாணவியாக இருக்க வேண்டும் என்கிற ஆவல் அனைவருக்கும் இருப்பது தவறில்லை. ஆனால் அது அக்குழந்தையின் ஆளுமையை சிதைக்குமளவிற்கு வலியுறுத்தப்படும் பொழுது அவனோ அவளோ அவ்விலக்கினை அடைய தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பிற்காலத்தில் அவர்களுக்கு பாதகமாகிவிடுமென்பதை  முந்தைய தலைமுறையினர் உணரத் தவறுகிறார்கள்.  


       தேவைக்கும் அதிகமாக திணிக்கப்படும் வசதிகளால்  இன்றைய இளைய தலைமுறையினருக்கு பசியின் அளவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. நான்கு வயது சிறுமியொருத்தி தனது தனிமை( space) குறித்து வீட்டில் விவாதம் செய்கிறாள். மற்றொருவருடைய வெற்றியையோ சந்தோஷத்தையோ பகிர்ந்து போற்றிக்  கொள்ள முடியாத அளவிற்கு சுயம் குறித்த சிந்தனை  இளைஞர்களிடம் அதிகரித்திருக்கிறது. அதற்குக் காரணம்" நீ ராஜா, நீ ராணி, உனக்கு நிகர் இங்கு யாருமில்லை"  என்கிற அதீத அன்பு பொழிதல் அவர்களை தனிக்காட்டு இராஜாக்களாகவும் இராணிகளாகவும் உணரச்செய்து தன்னைத் தவிர மற்ற அனைவரின் நிலைப்பாடும் முக்கியத்துவமற்றது என்று முடிவெடுக்கச் செய்கிறது.  ஒரு கட்டத்தில் பெற்றவரிடத்திலும் உடன்பிறந்தவர்களிடத்திலுமே வேற்றுமை காட்டத் தூண்டுகிறது. அதன் விளைவுதான் பெருகி வரும் மனநல காப்பகங்களும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும். மாற்றான் ஒருவனின் வலி என்னை எவ்விதத்திலும் பாதிக்காது என்கிற பரிவற்றத் தன்மையை எளிதில் அடைந்து விடும் இளைஞர்கள் இறுதியில் அதே பரிவை எதிர்பார்த்து மனநல சிகிச்சையாளர்களிடம் தஞ்சம் புகும் அவலத்தை காண நேரும்பொழுது தவறு அவர்களிடம் மட்டுமே இல்லை என்கிற குற்றவுணர்வு நம்மை ஆட்கொள்கிறது. விளைவுகளின் தீவிரம் கடுமையாகும்பொழுதே நாம் காரணங்களை ஆராயத் துவங்குகிறோம்.


என்னிடமிருப்பதை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பாங்கினை வளர்ப்பதை விடுத்து என்னிடம் இல்லாதது எவனிடமும் இருக்கக் கூடாதென்கிற வன்மம் பெருக நம் தலைமுறையின் எதிர்பார்ப்புப் பசிப்பிணிக்கு இளைஞர்களை பலியாக்குகிறோம். இறுதியில் அவர்களை குற்றவாளிகளாக்கி வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


       பெற்றோரின் ஏக்க பெருமூச்சுகளில் வெந்து உழலும் இளைஞன் தன் வசமிருக்கும் தொழில்நுட்பமெனும்   பூதத்தை தனது அடிமையாக்கி காண்பன யாவற்றையும் கபளீகரம் செய்யும் பெரும்பசி கொண்டு அலைகிறான். தன்னைச் சுற்றியுள்ள யாவும்  தனக்காக மட்டுமே படைக்கப்பட்டதென்று ஒருவன் கருதும் பொழுது அவன் முதலில் அழிக்கத் துவங்குவது இயற்கை வளங்களை. இன்று மனிதன் சென்றடைய இயலாத நிலப்பரப்பென  எதுவுமில்லை. தொழில்நுட்பம் துல்லியமாக வரைபடங்கள் இயற்றித் தருகிறது. நாள்கணக்கில் நீண்ட பயண தூரங்கள் இன்று சில மணிப்பொழுதுகளில் கடக்கப் படுகின்றன. காதல் கடிதங்களுக்காக தபால் காரரை எதிர்பார்த்து காத்திருந்த நாட்கள் மலையேறிவிட்டன.ஒரு குறுஞ்செய்திக்கு மறு குறுஞ்செய்தி பதில் வராவிட்டால் காதல் தோல்வி என்று தீர்மானித்து தற்கொலை செய்து கொள்கின்றனர் இளைஞர்கள். காத்திருத்தல் என்பது சுமையல்ல அது நம்பிக்கை வளரும் நேரம், அன்பு ஆழமாகும் நேரம். திராட்சை ரசம் கலயத்தில் ஊறியிருக்கும் காலமே அதன் தரத்தை நிர்ணயிப்பது போல் காலத்தின் சோதனைக்குட்படுத்தப்படும் பொழுதுதான் அன்பு, வெற்றி, தேடல், இலக்கு என அனைத்தும் முழுமை பெறுகிறது. காத்திருத்தலின் சுவையறிந்த நாம் அதை நமது பிள்ளைகளுக்கு ஏன் புகட்டத் தவறினோம். அப்படியென்றால் நாம் காத்திருத்தலை போற்றவில்லை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டோம். அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளை நாம்தான் உருவாக்கினோம். அதை அடுத்தத் தலைமுறையினருக்கு பரிசாக அளித்துவிட்டு இன்று அவன் துரிதங்களின் நிலையாமையில் சிறுபுழுவாக சிக்கித் தவிக்கும் பொழுது அவனையே அந்நிலைக்கு காரணமானவன் போல்  பழிக்கிறோம்.


    நுகர்வு கலாச்சாரம் பணக்காரனை மேலும் பணக்காரனாக்குகிறது, ஏழையை மேலும் ஏழையாக்கி வேடிக்கை பார்க்கிறது. பிறந்த நாள் விழாக்களின் பொழுது அநாதை ஆசிரமங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அக்குழந்தைகளின் முன்னே நம் ஆடம்பரத்தை கேக் வெட்டி கொண்டாடுகிறோம்." நீ எவ்வளவு கொடுத்து வைத்தவள் பார், அநாதைகளுக்கு உதவும் நிலையில் கடவுள் உன்னை வைத்திருக்கிறார்" என்று ஒரு வேளைக்கு மட்டும பாடமெடுத்து விட்டு அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து நமது வள்ளல் தன்மையை சமூக ஊடகங்களிலும் தவறாமல் பதிவேற்றி விடுகிறோம். நமது செய்கையை பார்த்து வளரும் குழந்தைகள் கருணையும் உதவும் மனப்பான்மையும் ஒரு நாள் கொண்டாட்டத்தின் அம்சங்களென புரிந்து கொள்கின்றன.


      காலம் பொன் போன்றது என்பதனாலோ என்னவோ நம்முடைய நேரத்தை மற்றவர்களுடன் செலவிடுவதை நாம் விரும்புவதில்லை. அனைத்திற்கும் மாற்றுமருந்து வைத்திருக்கும் நாம், நம் வீட்டு இளைஞர்களுடன் நாம் செலவிட வேண்டிய நேரத்திற்கு மாற்றாக அவர்களுக்கு பொழுதை போக்கும் சாதனங்களின் துணையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு நம் சுயத்தை போஷிக்கும் வழிகளை வசதியாக தேர்வு செய்து கொள்கிறோம் என்பதுதான் உண்மை.


     என் உறவு வட்டத்தில் சிறுமியொருத்தி பெருந்தொற்றுக் காலத்துத் தனிமையின் அழுத்தம் தாளாது தனது மரணத்தை தானே இரசித்து  அரங்கேறிக் கொண்டாள். பெற்றோர் இருவரும் அரசாங்கப்பணியில் உயரதிகாரிகள். பணிச்சுமையால் நேரத்தை நிர்வகிக்க முடியாமல் அவர்கள் ஒருபுறம் திணற, பதின்பருவத்து உளச்சிக்கல்களால் அவதியுற்ற அவள் வெப் சீரிஸ்களின் உலகத்தில் மூழ்கினாள். ஒரு கட்டத்திற்கு மேல் தனிமையின் சுமையை தாள முடியாமல் தனது தற்கொலையை பலநாட்களாக திட்டமிட்டு அதனை ஒவ்வொரு படியாக நிறைவேற்றி அதில் வெற்றியும் கண்டாள். தூக்குக் கயிற்றை பிரிக்க முயன்ற தீயணைப்புத் துறையினர் "இது நொடி நேரத்தில் அரங்கேறிய தற்கொலையன்று. பல நாட்களாக அந்தப் பெண் அவதியுற்ற மன அழற்சியின் விளைவாக அவள் தன்னைத்தானே சிறிது சிறிதாக கொன்றிருக்கிறாள். இது இறுதி அத்தியாயம் மட்டுமே"  என்றனர். பெற்றோருக்கும் உற்றார் உறவினருக்கும் அவள் விட்டுச் சென்ற செய்தியும் அதுவே. "நான் செய்வதறியாது தவிக்கிறேன். எனக்கு உங்கள் நேரத்தை அளியுங்கள், உங்கள் அன்பை பகிருங்கள் என்று மன்றாடினேன். நீங்களோ என் வசதி வாய்ப்புகளை பெருக்கித் தருவதில் மட்டுமே குறியாக இருந்தீர்கள். அவற்றால் என் போதாமை தீரவில்லை, மாறாக அரவணைப்பிற்காக ஏங்கும் பசிதான் பெருகியது. சகிக்கவியலாத  தனிமையை இனி உங்களுக்கு தருவதைத் தவிர தப்பிக்கும் மார்க்கம் வேறு எனக்குத் தெரியவில்லை"என்று தனது தற்கொலைக் குறிப்பில் தெளிவான கையெழுத்தில் அச்சிறுமி எழுதியிருந்தாள். அக்கடிதத்தை படித்து முடித்த பொழுது என் உடல் வியர்த்தது.


      முந்தைய தலைமுறைகள் இதுவரை சந்தித்திராத பெரும் சவாலை நம் இளைஞர்கள் இன்று சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். செயற்கை அறிவின் விரிவான மெய்நிகர் உலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளனர் அவர்கள். நிஜமெது பொய்யெது என்று எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களது வாழ்வியலை ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் புது யுகமெனும் கடலில் முத்துக் குளிக்க ஆயத்தமாகியிருக்கிறார்கள். கரையில் நின்று கைக்கட்டி வேடிக்கை மட்டும் பார்க்கும் செயலை விட்டொழித்து அவர்கள் தரைத்தட்டி விடாமல் பார்த்துக் கொள்ளும் கலங்கரை விளக்கங்களாக நாம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நமது அன்பும், பொறுமையும், அரவணைப்பும் வழிகாட்டுதலும் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு ஏற்படுத்திவிட முடியுமென்று நினைப்பது அறிவீனம் மட்டுமல்ல அது நம் பிள்ளைகள் மேல் நாம் இழைக்கும்  வன்முறையும் கூட.


ஜெர்மானிய திரைப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் on walking the ice என்றொரு சிறு நூலை எழுதியிருக்கிறார். சொல்லப்போனால் அதுவொரு டயரிக்குறிப்பு.




ஐரோப்பாவின் கடுங்குளிர் காலத்தில் பாரிஸிலிருக்கும் ஹெர்சாக்கின் தோழியொருவருக்கு உடல்நலமில்லாமல் போகிறது, இறப்பிற்குமுன் ஒருமுறை ஹெர்சாக்கை சந்திக்கவேண்டுமென விரும்புகிறார். ம்யூனிச்சிலிருக்கும் ஹெர்சாக் செய்தியறிந்து உடனடியாக கிளம்பிவிடுகிறார். ஆனால் விமானமோ ரயிலோ ஏறவில்லை. தான் செல்லும்வரை அவரது உயிர் தங்குமென்றால் அவரது வாழ்நாளை இன்னும் கொஞ்சம் நீட்டிப்போமென முடிவெடுத்து ம்யூனிச்சிலிருந்து பாரிஸிற்கு நடந்தே பயணிக்கத் துவங்குகிறார். ஐரோப்பாவின் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் மூன்று வாரங்கள் நடந்து பாரிஸ் வந்து சேர்கிறார். வழியெங்கும் தனது தோழி மரணிக்க கூடாதென பிரார்த்தித்தபடியே பயணிக்கிறார்.  கடவுளின் ஆசியோ அல்லது அறிவியலோ அவரது தோழி மரணத்திலிருந்து தப்பிவிட்டார்.  ஒரு  உயிரின் மீது அந்தக் கலைஞனுக்கு இருந்த அதீத அன்பும் நேசமும் தான் மூன்றுவாரகால நடைபயணம். இதை வாசிக்கையில் சிலருக்கு முட்டாள்த்தனமாகத் தோன்றலாம், சக மனிதர்களின் மீதான மதிப்புகள் அவ்வளவும் வீரியமிழந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் இந்த தலைமுறையினருக்கு நாம்    கற்றுக்கொடுக்க வேண்டியது வெற்றிக்கான சூத்திரங்களை அல்ல, நீதிக்கதைகளைத்தான்.   

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page