top of page

எஸ் எல் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது.’

Writer: லக்ஷ்மி சரவணகுமார்லக்ஷ்மி சரவணகுமார்



மகத்தான இந்திய நாவல்கள் எல்லாவற்றிலும் தனித்துத்  தெரிவது அதன் இந்தியத்தன்மை தான். அதென்ன இந்தியத்தன்மை?  லட்சிய இந்து ஓட்டல், நீலகண்ட பறவையைத் தேடி, ஆரோக்கிய நிகேதனம், அக்னி நதி, செம்மீன், சம்ஸ்காரா, கோதானம், மய்யழிக் கரையோரம், என ஒரு  வரிசைப்படுத்தினால் அந்த நாவல்களின் பொதுத்தன்மையாக நாம் பார்க்க முடிவது அழுத்தமாக  அந்த மொழியின்  நிலத்தைப் பற்றியிருப்பதுதான். ஒரு முதிர்ந்த ஆலமரத்தின் வேர்கள் எத்தனை  வலுவாகவும் ஆழமாகவும் நிலத்தைப் பற்றியிருக்குமோ அதேபோலத்தான்  இந்த நாவல்கள் தனது நிலத்தினைப் பற்றியிருக்கிறது. அபத்தம், ஏமாற்றம், துரோகம், வறுமை, பஞ்சம், கொள்ளை நோயில் போன உயிர்களின் நினைவுகளைச் சுமந்து திரியும் அடுத்த தலைமுறையினர் என சில பொதுத்தன்மைகளை நாம் இந்த நாவல்களில் காணமுடியும். வங்காளம், மராத்தி, கன்னடம், மலையாளம் என எந்த மொழியாக இருந்தாலும்   இந்த பொதுத்தன்மைகள் மாறுவதில்லை.  சடங்குகள், வழிபாடுகள் எல்லாவற்றையும் கடந்து தங்களது தோல்வியுற்ற கனவுகளையும் சிதைந்த வாழ்வையும்  சகித்துக்கொண்டு  இந்த நாவல்களின் கதாப்பாத்திரங்கள் அமைதியாக  கடந்துபோவதைத்தான் இந்தியத்தன்மை  என்று பார்க்கிறேன்.   


ஆரோக்கிய நிகேதனம் நாவல் குறித்த ஒரு கட்டுரையில் பி கே பாலகிருஷ்ணன் இவ்வாறு எழுதுகிறார். ‘நுட்பமான  ஒரு அனுபவம் வேண்டுமென்றால் என்றென்றைக்கும் விளங்கிக்கொள்ள முடியாமை’ என்று நாம் அதற்கு பெயரிடலாம். சிறந்த சிற்பமோ ஓவியமோ தன் ஒட்டுமொத்தமான அழகையும் உள்ளார்ந்த அர்த்தங்களையும் முழுமையாக ஒரே காட்சியில் யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை அல்லவா ? நல்ல கலைப்படைப்பு என்பது நுட்பங்களின், அழகுகளின் அர்த்தங்களின் அட்சயப்பாத்திரம். நூற்றாண்டுகளாக கலைப்படைப்பின்  வசீகரம் அதே நுண்மையுடன்  நிலை நிற்கிறது. ஒரே பார்வையாளன் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவன் புத்தம் புதியது என உணர்ச்சியடைவான். ஏறக்குறைய நம்மில் பலருக்கும் உதாரணம் இசை கேட்கும் அனுபவம்.’


கடந்தகாலம் குறித்த பெருமிதங்களையும் ஏக்கங்களையுமே பெரும்பாலான நாவல்கள் பேசுபொருளாகக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம், இந்த நாவல் கடந்த காலத்தின் துயரங்களையும் குரூரங்களையுமே அடையாளப்படுத்துகிறது.  நமது கிராமங்கள் தின்று செரித்த மனிதர்கள் கதைகளாக மாறிவிடுகிறார்கள், வாழும் காலத்தில் சாபமாகவும் தொந்தரவாகவும் பார்க்கப்பட்டவர்கள்  மரணத்திற்குப்பின் தெய்வமாக்கப்படுகிறார்கள், அல்லது பூதமாக்கப்படுகிறார்கள். சமீபத்தில் வாசித்த பூமணியின் அஞ்ஞாடி நாவலில் இதை மிகச் சிறப்பாக  எழுதியிருப்பார். நொண்டி முனியும் கருத்தப்பாண்டியும் அந்த ஊரில் வாழ்ந்தவர்கள். அந்த ஊர் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த அவர்கள் நாளடைவில்  மக்களின் அச்சத்திலும் கதைகளிலும்  நினைக்கப்படுவார்கள். இந்த நம்பிக்கைகளும் அச்சங்களும் இந்திய நிலமெங்கும் நாம் பார்க்கக் கூடியதுதானே. நமது கதைகள் சபிக்கப்பட்டவர்களை திரும்பச் திரும்பச் சொல்கிறது. அவர்கள் தங்களது ஊரோடும் உறவுகளோடும் இணைவதற்காக பன்னெடுங்கலமாகக் காத்திருப்பதைச் சொல்கிறது. கதைகள், கடந்த காலத்தின் நினைவேக்கங்களாக பல சமயங்களில் இருந்தாலும்  அந்தக் கசப்புகளிலிருந்து தப்பிப்பதற்கான சாத்தியங்களையும் உருவாக்கித் தருகிறது.


ஒரு குடும்பம் சிதைகிறது என்னும் இந்த நாவல்   பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தில்  சற்றேறக்குறைய 1925 ம் வருடத்திற்குப்பின் துவங்கி சுதந்திரப் போராட்டம் உச்சத்திலிருந்த காலகட்டம் வரை நீள்கிறது. மைசூர் சமஸ்தான்  தும்கூர் ஜில்லாவில்  உள்ள  ராமச்சந்திராபுரத்திலிருக்கும் ஒரு கணக்கப்பிள்ளையின் குடும்பம் எவ்வாறு சிதைந்து முற்றாக அழிந்தது என்பதை இந்த நாவல் விவரிக்கிறது.   வறுமையை, வளர்ச்சியடையாத கிராமங்களைப் பார்த்திராத இன்றைய தலைமுறையினருக்கு இந்த நாவலில் வரும் சம்பவங்கள்  சலிப்பூட்டக் கூடும். எதற்காக இத்தனை துயரங்களை இவர்கள் சகித்துக் கொள்ள வேண்டும்? கொள்ளை நோயிக்கு எந்த வைத்தியமும் தெரியாத கையாலாகதவர்களாகவா இருந்தார்கள்? அதெப்படி  எல்லா பெண் கதாப்பாத்திரங்களும் ஆண்களால் சுரண்டப்படுகிறவர்களாக இருக்க முடியும்? என ஏராளமான கேள்விகள் எழலாம். ஆனால் இவையெல்லாமே நிதர்சனங்கள்.

சரண்குமார் லிம்பாலேயின் அனார்யா நாவலில்  அந்தச் சிறுவனின் பாட்டி சுவற்றில் தட்டப்பட்டிருக்கும் வறட்டியை எடுத்து அதனை நீரில் உலர்த்தி  நீரில் மிதக்கும் சோளத்தை எடுத்து சாப்பிடுவாள்.   நிலத்தை உடமையாளர்களாகக் கொண்ட பன்னையார்கள் தங்கள் ஊர் மக்களைச்  சுரண்டி ஒருபுறம் பெரும் செல்வந்தர்களாக இருக்க, அவர்களின் நிலங்களில் உழைத்த கூலிகள் ஒரு வேளை உணவுக்கே பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.   


ப்ரேம் சந்தின் கைப்பிடியளவு கோதுமை கதையில் யாசகம் கேட்டு வரும் சன்னியாசிக்கு பசியாற கதை நாயகன் கொஞ்சம் கோதுமை கடன் வாங்குவான். திருப்பியடைக்க முடியாத அந்தக் கடன் நாளடைவில் அவனை பன்னையாரிடம் நீண்டகால அடிமையாக மாற்றும். கிராம வாழ்க்கை குறித்து நமக்கிருக்கும் பெருமிதங்கள் போலியானவை. அமைதியான வாழ்க்கை, ஒற்றுமை எல்லாமே நாம் சொல்லிக்கொள்கிற கதைகள்.    கிராமங்கள் நகரங்கள் என எங்குமே மனிதர்கள் ஒருவரையொருவர் சுரண்டுகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். கிராமங்களில் கூடுதலாக சாதி தனது அகோர முகத்தை எப்போதும் வெளிக்காட்டியபடியே இருக்கிறது. எழுத்தாளர் நக்கீரன் தனது நூலில் ஓரிடத்தில் ‘இந்திய கிராமங்களில் சேரி பெரும்பாலும் கிழக்குப் பகுதியிலேயே அமைந்திருக்கின்றன.’ என்றொரு தரவை நமக்குத் தருகிறார். ஒடுக்குமுறை நாடு முழுக்கவே இருப்பதன் சாட்சியம் இது.

ஒரு கதையை எழுதுகிறவன் முடிந்தவரை அதனோடு தன்னை அதிகம் பிணைத்துக் கொள்ளக்கூடாது. விலகி நின்று இன்னொரு வாழ்வை பார்க்கிற மனநிலை இல்லாதுபோனால் அந்தக் கதையின் மீதும் கதாப்பாத்திரங்களின் மீதும் எழுதுகிறவனின் சாயலும் அவனது சார்புநிலையும் வெளிப்படக்கூடும்.  ஒரு கதாப்பாத்திரம் அதனியல்பில் நன்மையோ தீமையோ செயலாற்றுவது வேறு, எழுதுகிறவனின் மனச்சாய்வில் செயலாற்றத் துவங்கிவிட்டால் அங்கு அதீத நாடகீயத்தன்மை உருவாகிவிடக்கூடும்.   எத்தனை குரூரமான கதாப்பாத்திரமாக இருந்தாலும், நெகிழ்ச்சியூட்டக் கூடிய நிகழ்வாயிருந்தாலும் அவற்றை விலகி நின்று பார்க்கக்கூடிய பக்குவம் பைரப்பாவின் எழுத்துகளில் இருப்பதால் எந்தப் பாத்திரத்தின் மீதும் சார்புநிலையைக் கொண்டிருக்கவில்லை. வலிந்து சொல்லப்படாததாலேயே நாடகீயத்திற்கான சாத்தியங்கள் கொண்ட இடங்கள்கூட இயல்பானவையாக கடந்துவிடுகின்றன.





அசாத்தியமான சூழலை எதிர்கொள்வதன் வழியாக  கதாப்பாத்திரங்களை உருவாக்குவதுதான் பெரும்பான்மையான நாவல்களின் பொதுப்போக்காக அமைந்திருக்கும். மாறாக இந்த நாவலில் கதாப்பாத்திரங்களின் குணநலன்கள் தான் அசாத்தியமான சூழலை உருவாக்குகிறவைகளாக இருக்கின்றன.  கங்கம்மாவையும்  அவளது இரண்டு மகன்களையும் போல் குரூரமிக்க, சோனித்தனமான கதாப்பாத்திரங்களை வேறு எங்குமே நாம் வாசிக்க முடியாது.  அறியாமை உருவாக்கும் அகங்காரத்தினால் தன்னையும் தனது குடும்பத்தையும் விரும்பி அழித்து ஒழிப்பதில் இந்த மூன்று பேருமே போட்டி போட்டுக் கொள்கிறார்கள்.  அப்பண்ணய்யா, சென்னிகராயர் இருவருமே ஒட்டுண்ணிகள். சிறு வயது முதலே  கங்கம்மா அவர்களை அப்படித்தான் வளர்க்கிறாள். ப்ராமணர் என்ற  சாதி கர்வத்தை மட்டும் வைத்துக் கொண்டு வேறு எதற்கும் பயனில்லாத ஒட்டுண்ணிகளாக  வளரும் அவர்கள் தங்கள் சொத்தை ஊர் தலையாரியிடம் இழக்க நேரும் சம்பவத்தை வாசிக்கையில் அவர்களின் மீது எரிச்சலும்  பச்சாதாபமும் நமக்கு உருவாகிறது.  தாயின் மீதிருந்த ஆத்திரத்தில் ஓடி வரும் அப்பண்ணய்யா ஊர் வயலை எரித்துவிட, அதற்கு ஈடாக  தலையாரி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈழப்பீடு கொடுத்துவிட்டு பதிலாக கங்கம்மாவின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்கிறார். 


இந்த நாவலில் வரும் நஞ்சம்மா  பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் அடையாளம். முரட்டுத்தனமான தந்தையால் வளர்க்கப்பட்டு விவரம் தெரிவதற்கு முன்பாகவே ஒருவனுக்கு திருமணம் செய்துகொடுக்கப்பட்டு அவனாலும் அவனது குடும்பத்தாலும்  மரணம் வரையிலும் சுரண்டப்படுகிறாள். அவளது கணவன் அட்டைப்பூச்சியாய் அவளது ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதோடு அது குறித்த குற்றவுணர்வும் இல்லாமலிருக்கிறான். இன்றளவும் பெரும்பான்மையான  கிராமங்களில்  குடும்பத்திற்கான வருமானம் ஈட்டக்கூடியவர்கள் பெண்களாக இருக்க, ஆண்கள் ஊர் மந்தைகளில்  வம்பளப்பவர்களாகவும் குடிகாரர்களாகவும் இருக்கிறார்கள். 


நெருக்கடிகளின்  போது ஒரு கதாப்பாத்திரம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதன் அடிப்படையில்தான் அந்தக் கதாப்பாத்திரமும் கதையும் வலிமையடைகிறது. சென்னிகராயர் நாவல் முழுக்க எல்லா பிரச்சனைகளையும் வேடிக்கை பார்ப்பவராக மட்டுமே இருக்கிறார். கங்கம்மாவும், அப்பண்ணய்யாவும் வசைச் சொற்களால் எதிர்வினையாற்றுவதைக் கூட இவர் செய்வதில்லை. நாக்கில் எப்போதும் ஏதாவதொரு உணவின் சுவையை தேடுவதைத் தவிர அவரால் செய்ய முடிவது எதுவுமில்லை. இத்தனை சுயநலமாக ஒரு மனிதன் வாழ முடியுமா? இரண்டு பிள்ளைகள் மரணித்தபோதும் கலங்காமல், மனைவியின் மரணத்திற்குப் பின்னால் ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் புதிய மனைவியினைத் தேடத் தோன்றுமா? இறுதிக் காட்சியில் தன் மகனை ஒரு சாமியார் தன்னோடு அழைத்துக் கொண்டு போவதைப் பார்க்கும் போது கூட வாயிலிருக்கும் புகையிலை வீணாகப் போய்விடக் கூடாதென அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அளவிற்கு தன்னைத் தவிர வேறெதையும் சிந்திக்காதவர்களா ஆண்கள்.   அந்தக் கதாப்பாத்திரம் எந்த சாகசத்தையும் செய்யவில்லை, ஆனால் தன்னியல்பிலேயே கையாலாகத்தனம் கொண்டவனாக இருப்பதால் மிக முக்கியமானப் பாத்திரமாக மாறிவிடுகிறது.

பைரப்பாவின் அம்மா ப்ளேக் வந்து இறந்தவர் என்பதால் இந்த நாவலில் அவரது சுயசரிதையைக் காணமுடிகிறதென சிலர் குறிப்பிட்டிருந்ததைக் காணமுடிந்தது. எல்லாக் கதைகளும் வாழ்வின் ஏதாவதொரு தருணத்தின் பிரதிலிபலிப்பிலிருந்து நீள்வதுதானே…. அம்மா, அக்கா, அண்ணன் எல்லோருடைய இறப்பிற்குப் பின்னால் மாதவய்யாவுடன் ஊரைவிட்டு வெளியேறிச் செல்லும் சிறுவன் என்னவானான் என்றொரு கேள்வி இன்னொரு கதையாக எழுதப்படுமானால் அங்கு நமக்கு கதைசொல்லியின் இன்னொரு பருவ வாழ்க்கை சாட்சியமாகக் கிடைக்கலாம். கதைக்காக  இல்லாத ஒரு வாழ்வை உருவாக்கிவிட முடியாது. தான் வாழ்ந்த அல்லது பார்த்த இன்னொருவரின் வாழ்விலிருந்து தான் தீவிரமான கதைகள் உருவாகின்றன. ஒரு நாவல் நாம் வாழும் வாழ்க்கைக்கு இணையான இன்னொரு வாழ்வை அதன் முழுமையோடு நமக்கு வாசிக்கத் தருமானால் அதில் கிடைக்கும் தரிசனங்கள் அசாத்தியமானவை.


நஞ்சம்மா திருமணமாகி வந்த சில நாட்களிலேயே தன் கணவன்  எதற்கும் லாயக்கற்றவன், அவனது குடும்பம் சபிக்கப்பட்ட குடும்பம் என்பதைக் கண்டுகொள்கிறாள். இருந்தும் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு  தன் வாழ்வைப் பார்த்துக் கொள்ள வேறு இடத்திற்குச் செல்லாமல் அவளைத் தடுத்து நிறுத்தியது எது?  அந்தக் குடும்பம் தரும் எல்லா துயரங்களையும் சகித்துக் கொண்டு அந்தக் குடும்பத்திற்காக மேலும் மேலும் உழைத்து தனது உடலையும் மனதையும் ஏன் அவள் இத்தனை வறுத்திக் கொள்கிறாள்.? இந்தக் கேள்விகளுக்கான எந்தப் பதில்களையும் இந்த நாவல் சொல்லவில்லை. ஒரு வேளை பைரப்பாவின் மனதிலிருக்கும் லட்சியப் பெண்ணிற்கான அடையாளமாக இருக்கலாம். மதர் இந்தியா திரைப்படம் துவங்கி காலம் கடந்து நிற்கும் இந்தியப் பெண்களின் பொதுத்தன்மையானது மற்றவர்களுக்கு எல்லாவற்றையும் தியாகம் செய்யக்கூடிய தாய்மையின் வடிவம்.  பெண்ணின் தியாகம் திரும்ப திரும்ப அவர்களுக்கான நற்சான்றிதழாக பணயம் வைக்கப்படுவதுதான் ஒருவேளை நான் குறிப்பிட விரும்பிய இந்தியத்தன்மையா? ஒரே நேரத்தில் தெய்வமாகவும், தங்கள் விதிகளை மீறும்போது சபிக்கப்பட்டவர்களாகவும் பார்க்கப்படுவது வேறு எந்த நிலத்திலும் இல்லை.  


நிலம் குறித்தும்  கால்நடைகள் குறித்தும் உணவுமுறைகள் குறித்தும் தரப்பட்டிருக்கும் துல்லியமான தகவல்கள் இந்த நாவலின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. ஊருக்கு வெளியே இருக்கும் குளத்தை அவர் எழுதியதை கண்மூடி நாம் நினைத்துக்கொள்ளும் போது நமக்கு விருப்பமான ஒரு பெரிய குளத்தின் முன்னால் நம் கால்கள் நிற்பதை நாம் உணரமுடியும். வெவ்வேறு ஊர்களின் ஓட்டல்களில் சென்னிகராயர் மசால் தோசையை சாப்பிடும் போது சின்ன வெங்காயம் போடப்பட்ட அந்த சாம்பாரின் சுவை நமது நாக்கில் எச்சில் ஊறச் செய்கிறது. எந்தவிதமான அலங்கார மொழியோ வர்ணனைகளோ இல்லாமல் மிக எளிய சொற்களால் கதை சொல்லப்பட்டிருப்பதால்   எல்லாமே நமக்கு நெருக்கமானதாக அமைந்திருக்கின்றன. நான் ஏன் எழுதுகிறேன் என்ற தலைப்பில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பைரப்பாவிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்று  இணையத்தில் இருக்கிறது. அவரது நூல்களை வாசிப்பவர்கள் இந்த நேர்காணலைப் பார்ப்பதன் மூலம் இன்னமும் நெருக்கமாக அவரைப் புரிந்து கொள்ள முடியும்.


2.0 படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் படப்பிடிப்பு இடைவெளியில் நடிகர் திரு ரஜினிகாந்திடம் பேசிக்கொண்டிருந்தபோது பைரப்பாவின் பருவம் நாவல் தனக்கு மிக விருப்பமானதென அவர் குறிப்பிட்டார். அந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு குறித்து எடுத்துக் கூறிய நான் தமிழில் வெளிவந்திருக்கும் வேறுசில முக்கிய இந்திய நாவல்களைப் பற்றியும் குறிப்பிட்டேன்.  மஹாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்திய நாவல்களில் பருவம் எனக்கு மிகப்பிடித்தமான நாவல்.  பீமனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கதை நமக்கு பாரதக் கதை குறித்த வேறு புரிதலைத் தரக்கூடும். பெருங்கதையாடல்களுக்கு இருக்கும் சிறப்பியல்பே அதனை நாம் வெவ்வேறு பார்வையில் வாசிக்கக் கூடிய, புரிந்து கொள்ளக் கூடிய சாத்தியம் இருப்பதுதான். கன்னடத்தில் வாசித்த பர்வாவை தமிழில் வாசிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதற்காக பாவண்ணன் மொழிபெயர்த்த பருவத்தையும் நீலகண்ட பறவையைத் தேடி, அசோகமித்திரனின் மானசரோவர் உட்பட சில முக்கிய நாவல்களை அவருக்கு வாங்கி பரிசளித்தேன். அந்த வரிசையில் நான் பரிசளிக்க நினைத்து முடியாமல் போன புத்தகம் ‘குடும்பம் சிதைகிறது.’ நீண்ட வருடங்களுக்குப்பின் அந்த நாவல் இவ்வாண்டுதான் மறுபதிப்பு கண்டுள்ளது.

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page