top of page
Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

மலரும் மலர்களின் நாட்கள்…


( வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் பனிக்கால இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.)





’India is larger  than universe’  என ஓரிடத்தில் போர்ஹே குறிப்பிடுகிறார். இந்தியப் பெருநிலத்தை முழுமையாக அறிந்துகொள்ள ஒருவனுக்கு ஒரு முழு ஆயுள் போதாது. ஒரு நிலத்தைப் பார்ப்பதும் அறிந்துகொள்வதும் வெவ்வேறானது.


அறிந்துகொள்வதென்பது அறிவு தொடர்பானது.  சுற்றுலாப் பயணிகள், ஊர் சுற்றிகள், நாடோடிகள் என பயணிக்கிறவர்களை வெவ்வேறாக நாம் வகைப்படுத்த முடியும். தனக்கிருக்கும் நெருக்கடியான வாழ்விலிருந்து சிறிய ஓய்வெடுத்துக்கொண்டு ஒரு சில நாட்களைப் புதிய இடங்களில் செலவிடுகிறவன் சுற்றுலாப் பயணி. அவனுக்கு அந்த நிலத்தின் வரலாறு குறித்தோ வாழ்க்கை குறித்தோ மக்களைக் குறித்தோ எந்தவிதமான அக்கறைகளும் தேவையில்லை. ஒரு புதிய நிலத்தில் சுற்றுகிற கிளர்ச்சி மட்டுமே அவர்களது இலக்கு.  எதையும் கற்றுக்கொள்ள அவர்கள் முயற்சிப்பதில்லை. ஒரு ஊர் சுற்றி சுற்றுலாப் பயணிகளின் இலக்குகளோடு சுற்றுவதில்லை. அவன் தனக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும்  புதிய வானத்தையும் நிலத்தையும் எதிர்கொள்கிற பேரார்வத்தோடு செல்கிறான்.


பறவையின் இறகைப்போல் வாழ்வை  இலகுவாக எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதுதான் ஒரு நல்ல ஊர்சுற்றிக்கு முக்கியம்.  தான் பயணிக்கும் நிலத்தின் குறைந்தபட்ச வரலாறு, மக்களின் வாழ்க்கைமுறை, காலநிலை மாற்றங்கள் இவற்றைக் குறித்தெல்லாம் அக்கறை கொண்டவனே நல்ல ஊர் சுற்றி. கடைசியாக இருக்கக் கூடிய நாடோடி என்பவன்  நிலமற்றவன். இந்தப் பூமிப்பந்தில் நாடோடி என்கிற அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளங்களையும் தனக்குப் பொருத்திக் கொள்ள விரும்பாதவன். அவனே முழுமையான பயணி. வரலாற்றின் நெடும் பக்கங்களைத்  திரும்பிப் பார்க்கையில் பாஹியான், மார்க்கோ போலோ, இஃப்ன் பதூதூ எனப் பெரும் நாடோடிகளே கடந்த காலத்தை நாம் அறிந்துகொள்வதற்கான சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். நாடோடிகள் அழிவற்றவர்கள். இந்த மூன்று நிலைகளில்  நானொரு ஊர்சுற்றி.  





புதிய நிலங்களுக்குப் பயணிப்பதோடு ஒரே நிலத்திற்கு மீண்டும் மீண்டும் பயணிப்பதும் எனக்கு முக்கியமானது. எங்கெல்லாம் பயணம் செய்கிறேனோ அங்கெல்லாம் வேகமாய் நண்பர்களை உருவாக்கிக் கொள்வது எனது வழக்கம். குஜராத் மாநிலத்திலும் சண்டிகரிலும் உத்திரபிரதேசத்தின் லக்னோவிலும் சில மாதங்கள் வேலை செய்திருக்கிறேன். வேலை செய்த காலத்தில் கிடைத்த நண்பர்களைச் சந்திக்க அவ்வப்போது அங்கு செல்வதுண்டு. நண்பர்களுடன் இணைந்து அந்த மாநிலங்களின் கிராமங்களுக்குள் பயணிப்பதே அந்தப் பயணங்களின் முக்கியமான நோக்கமாக இருக்கும்.  குஜராத்தின் வதோராவில் வேலை செய்த நாட்களில் என்னோடு பணி செய்த ஒரு நண்பரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மீருக்கு அருகில் சிறிய கிராமம். மாதத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். அந்த இரண்டு நாட்கள் விடுமுறையைக் கழிக்க ரயிலிலும் பேருந்திலும் பதினோறு மணிநேரங்கள் பயணம் செய்வார். இரண்டு நாட்களில் பெரும்பகுதி பயணத்தில் முடிந்துவிடும். ஆனாலும் சில மணி நேரங்கள் குடும்பத்தினரோடு இருப்பது அவருக்கு முக்கியம். இது நடந்தகாலம் 2004. இப்பொழுது நண்பர் ஜெய்சால்மீரில் தனியாக தொழில் துவங்கி நல்ல நிலையில் இருக்கிறார். மனிதர்களின் வழியாக நிலத்தை அறிந்துகொள்வதுதான் எனக்கு முக்கியமானது. அந்த வகையில் இந்தியாவில் எந்த மாநிலங்களுக்குப் பயணித்தாலும் அந்த மாநிலங்களின் கிராமங்களை அறிந்துகொள்வது எனது பயணத்தில் ஒரு அங்கமாக இருக்கும்.





மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லோங்கில் ஒவ்வொரு ஆண்டும் blossom festival என்ற பெயரில் கலை திருவிழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த மாநில அரசே முன்னின்று நடத்தும் இந்த கலைத்திருவிழா வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் பிரசித்தபெற்ற ஒன்று. 2021 ம் வருடம்  இந்தக் கலைத்திருவிழாவை முன்னிட்டு பதினைந்து நாட்கள் மேகாலயா மாநிலத்திற்கு பயணிக்க நேர்ந்தது. வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் மேகாலயா தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு அதற்கு முன்பே பயணித்திருக்கிறேன். பார்ப்பதற்கு ஒரே போலிருந்தாலும் அந்த மக்களில் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் தனித்துவமான கலாச்சாரங்கள் உண்டு. காசி, காரோ, குக்கி, போடோ, புட்டியா, நியாஸி, அங்காமி என கணக்கற்ற பழங்குடிகளில்  மேகாலயாவில் வசிப்பது அதிகமும் காசிப் பழங்குடியினர் தான். சொல்லப்போனால் இந்த மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்டவர்களும் இந்த இனக்குழுக்கள்தான்.


 சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் வடகிழக்கு மாநில மக்கள் அரசியல் காரணங்களுக்காக இன்றளவும் வஞ்சிக்கப்படுகிறவையாய் இருக்கிறார்கள். அரசு இயந்திரமும் ஊடகங்களும் இவர்களைப் பற்றி உருவாக்கும் மலினமான சித்திரங்களை பெரும்பான்மையான மக்களும் கடைபிடிக்கிறார்கள் என்பதுதான் கொடுமை. உருவத்திலும் கலாச்சாரத்திலும் பிற இந்திய மாநில மக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் வடகிழக்கு இந்தியர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பழங்குடிகள் பேசக்கூடிய ஏராளமான மொழிகள் இன்றளவும் புழக்கத்திலிருக்கின்றன.  இயல்பாகவே பழங்குடி இனத்தவர்களுக்கு தங்களது கலாச்சார அடையாளங்களின் மீது அதீது பற்று இருப்பதுண்டு.   பலநூறு ஆண்டுகளாய் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்துவரும் பழங்குடிகளின் நீண்ட மருத்துவ அறிவும் சூழலியல் சார்ந்த புரிதல்களும் அவர்கள் மொழிகளில்தான் இன்றளவும் இருக்கின்றன. அந்தக் காடுகளும் மருத்துவமுறைகளும் நிலைத்திருக்க வேண்டுமெனில் அந்த மக்களின் மொழியும் கலாச்சார அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் .


அஸ்ஸாமின் குவாத்தியில் உள்ள காம்க்யா தேவி ஆலயம் எனக்கு விருப்பமான இடங்களில் ஒன்று. ஆகையால் பயணத்தை அங்கிருந்து துவங்க திட்டமிட்டிருந்தேன்.  நதியை தெய்வாக வழிபடும் மரபு தென்னிந்தியர்களை விடவும் வட இந்தியர்களுக்கு அதிகம். குறிப்பாக பிரம்மாபுத்திரா நதி இந்தியாவின் பிரம்மாண்டம். அஸ்ஸாமியர்கள் தங்கள் மரபுகளைக் கொண்டாடுவதைப்  போலவே இயற்கையையும் அதீதமாக நேசிக்கக் கூடியவர்கள். காமாக்யா அஸ்ஸாமியர்களின் அன்னை. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் குவாத்தியில் நடைபெறும் காமாக்யா தேவி திருவிழா இந்தியாவின் அற்புதங்களில் ஒன்று. அந்த மக்களின் நம்பிக்கையின்படி ஷக்தி அசுரனை வதம் செய்தபின்னாலும் அவளது உக்ரம் குறையாமல் ருத்ரதாண்டவமாடிக் கொண்டிருக்க, இறுதியாக சிவனே அவளோடு போரிடும் சூழல் உருவாகிறது. அந்தப் போரில் ஷக்தியின் உடல் துண்டாடப்பட்டு  இமயத்தின் வெவ்வேறு இடங்களில் விழுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு சக்தி வழிபாட்டுத் தலங்களுக்கும் அம்மையின் ஒவ்வொரு உடல் பாகத்தோடு தொடர்புண்டு. அந்த வகையில்  காமாக்யாவில் விழுந்தது அவளது யோனி. இந்த ஆலயத்தின் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாய் சுருங்கி சுருங்கி இறுதியாக ஒரு சின்னஞ்சிறிய குகைக்குள் சென்று வழிபடுவதாக இருக்கும். பெருங்கூட்டத்தைக் கடந்து நீங்கள் உள்ளே செல்கையில் அன்னையின் கருவறைக்குள் மீண்டும் புகுந்து செல்வதுபோன்ற அதிர்வுகளைத் தரக்கூடிய இடம். தெய்வ வழிபாடு இல்லாதவர்கள்கூட ஜூலை மாதத்தில் நடைபெறும் இந்தத் திருவிழாவிற்குச் செல்ல நேர்ந்தால் மக்களுக்கும் இயற்கைக்குமான ஆத்மார்த்தமான அதிர்வுகளை உணர்ந்துகொள்ளமுடியும்.


காமாக்யா தேவி திருவிழா நடைபெறும் அந்த மூன்று நாட்களும் அஸ்ஸாமியர்கள் எந்த வேலைகளும் செய்யமாட்டார்கள். அவர்களின் நம்பிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் பூமியின் புதிய பிறப்பிற்கான நாட்கள் அவை.  எங்கும் சிவப்பு வண்ணம் சூழ அஸ்ஸாமியப் பெண்கள் ஷக்தி வடிவம் பூண்டிருப்பார்கள். நான் முதல்முறையாக  அதுபோன்றதொரு திருவிழாவிற்கு அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்ததால் வடகிழக்குப் பயணங்களில் எனக்கு எப்போதுமே காமாக்யா தேவி ஆலயம் முக்கியமானது.  எனது பயணங்களில் நன் அன்னையை வணங்கச் செல்லும் அந்த ஆலயத்திற்குள் எனக்குள்ளிருந்த பழைய மனிதன் மறைந்து ஒரு புதிய மனிதன் அந்த கருவறைக்குள் பிறப்பதாகவே உணர்வேன்… இந்தப் பயணத்திலும் அப்படியானதொரு நிறைவான உணர்வோடு காமாக்யா தேவியை தரிசித்துவிட்டு ஷில்லோங் நோக்கிப் புறப்பட்டுவிட்டேன்.  எனக்கு வழித்துணைவராக பயணம் முழுக்க உடனிருந்தவர் காசிப் பழங்குடியைச் சேர்ந்தவர். அதனால் மேகலாயா மக்களையும் வாழ்வையும் குறித்து ஏராளமான விவரங்களை அவரோடு உரையாடித் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பயணத்தில் அந்த நிலத்தைச் சார்ந்த ஒரு மனிதனோடு பயணிக்கையில் நமக்கு அவர்களின் வாழ்க்கை நெருக்கமாக அறிமுகமாகிறது. வெவ்வேறான கலாச்சாரங்களைப் புரிந்துகொள்ள முடிந்த ஒருவனுக்கு  பொருட்களைச் சேர்ப்பதை விடுத்து அனுபவங்களைச் சேர்ப்பதில் ஆர்வம் கூடும். வாழ்க்கை  நமக்குத் தரும்  அன்பளிப்பு இந்த அனுபவங்கள்தான்.





கொரோனா ஊரடங்கு முடிந்து நிபந்தனைகளோடு பயணங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த காலம். அதனால் மாநில எல்லைகளைக் கடப்பதற்கு தனியாக அனுமதி வாங்க வேண்டியது உட்பட ஏராளமானக் கட்டுப்பாடுகள் இருந்தன. இந்த நிலையில் ஒரு கலைத்திருவிழாவிற்கு என்ன  கூட்டம் வந்துவிடப் போகிறதென்று நினைத்திருந்தேன். ஆனால்  அந்த மக்கள் என் எண்ணத்தைப் பொய்யாக்கிவிட்டார்கள். இலக்கியத் திருவிழா நடந்த கல்லூரியில் பெருங்கூட்டம். ஏராளமான அரங்குகள், மிகச்சிறந்த சொற்பொழிவுகள். இன்னொரு புறம் என்னை ஆச்சர்யப்படுத்தியது இசைத்  திருவிழாவிற்குத் திரண்ட கூட்டம். வடகிழக்கு மாநில மக்களின் இசை ரசனை மற்ற இந்திய மக்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் ஒரே நேரத்தில் உலகின் அத்தனை சிறந்த இசைக்குழுக்களையும் ரசிக்கிறவர்களாகவும் தங்களது பழங்குடிப் பாடல்களை நவீனப்படுத்தி புதியனவற்றை உருவாக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அதனாலேயே  நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் நிறைய இசைத் திருவிழாக்கள் நடைபெறுவதைப் பார்க்க முடியும். நாகலாந்தின் ஹார்ன்பில் ஃபெஸ்டிவல், அருணாச்சலப் பிரதேச மலைகளில் நடைபெறும் ராக் இசை திருவிழாக்கள், மேகாலயாவில் நடைபெறும் ப்ளாசம் மலர்த் திருவிழா என பெரும் இசைக் குழுக்களின் அணிவகுப்பை இங்கு காணமுடியும்.


மேகலாயா மக்களின் கலையுணர்ச்சி அலாதியானது. பத்து வருடங்களுக்கு முன்னால் என நினைவு பெங்களூரில் உலகப் புகழ்பெற்ற மெட்டாலிகா இசைக்குழுவின் நிகழ்ச்சி நடந்தது.  அந்த நிகழ்வில் கலந்துகொண்ட  நாலாயிரத்தி சொச்சம் பேரில் நானும் ஒருவன்.   பெங்களூரு போன்ற ஒரு பெரும் நகரத்திலேயே இசையார்வத்தோடு வந்தவர்களின் எண்ணிக்கை அவ்வளவுதான். இத்தனைக்கும்  இந்தியாவின்  முன்னோடியான கலாச்சார நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. அதேபோல் சென்னையில் 2015 ம் வருடம்  நடந்த யானியின் இசை நிகழ்விலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன். அங்குமே மூவாயிரத்திற்குக் குறைவான கூட்டம்தான்.  ஆனால் ப்ளாசம் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலை இசை நிகழ்விற்கு குறைந்தது இருபத்தைந்தாயிரம் பேராவது வந்திருப்பார்கள். ஊரடங்கு விதிகளின் காரணமாய்  பயணங்கள் கடுமையாக இருந்த காலகட்டம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு நாட்டு இசைக்குழு. தாய்லாந்து, போர்ச்சுக்கல், கொரியா என எல்லோருமே  புகழ்பெற்ற இசைக்குழுக்கள். நான் கொரியான் ப்ளாக் பிங்க் என்ற குழுவின் இசை நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன்.  நவம்பர் மாதத்தில் பகல் வேளையில் பதினைந்திலிருந்து இருபது டிகிரி குளிரும் இரவில் எட்டு டிகிரி வரையும் குளிர் இருக்கும். மாலை ஆறு மணிக்கு மேல் துவங்கும் இசை நிகழ்ச்சிக்கு பிற்பகலிலேயே மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்.   ஒரு பயணத்தில் இதுபோன்ற அனுபவங்கள் எல்லாம் மகத்தானவை.  ஒரு புதிய நிலத்தில் உங்களுக்கு அறிமுகமே இல்லாத பெரும் மக்கள் கூட்டத்திற்கு நடுவிலிருந்து நீங்கள் ஒரு  இசை நிகழ்வைக் கண்டு களிக்கிறீர்கள். இசைக்கு நடனமாடுகிறீர்கள், அந்தக் குளிரிலும்   திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் வெக்கையில் வியர்க்க உங்கள் குளிர் ஆடையைக் களைந்து கிடைக்கும் உயரமான இடமொன்றில் நின்று கூட்டமே திரும்பிப் பார்க்க நடனாமாடுகிறீர்கள். இந்த விடுதலையுணர்வு எத்தனை பெறுமதியானது?


எனக்கு வழித்துணையாய் இருந்த உள்ளூர் நண்பர் நான்காவது நாள் என்னோடு வரமுடியாமல் போக, அவருக்குப் பதிலாக  அவரது உறவினர் ஒருவர் இணைந்துகொண்டார். அன்றைக்கு நாங்கள் சிரபுஞ்சி சென்று அங்கு தங்கவேண்டும். என்னோடு வந்தவருக்கு மிகச் சுமாராகவே ஆங்கிலம் பேச வரும். எனக்கு அவரை விடவும் மிகச் சுமாராகவே ஆங்கிலம் பேசத் தெரியும் என்று தெரிந்தபிறகுதான் அவருக்கு ஆறுதல். அதிகாலையிலேயே  ஷில்லோலிங்கிலிருந்து கிளம்பிவிட்டோம்.  உலகிலேயே அதிகம் மழை பெய்யுமிடம்  சிரபுஞ்சி என்கிற அடையாளம் கொஞ்சம்  கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. முக்கியமான காரணம் அங்கு அதிகரித்து வரும் நிலக்கரிச் சுரங்கங்கள்.  சுரங்கங்களிலிருந்து வெளியாகும் தூசிகளும்  மலைகளை அளவுக்கு அதிகமாய் அவர்கள் ஆழப்படுத்துவதும் பெரும் சூழலியல் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு சாலைகளை விரிவுபடுத்த வேண்டி பெரும் மலைகளை உடைத்து சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எப்போதும் தூறலும் சாரலுமாய் இருந்த சிரபுஞ்சியின் மழையளவு குறைந்துவிட்டிருக்கிறது. பசுமையான சமவெளிகள், பிரம்மாண்டமான  அருவிகள், மலைகள் என சிரபுஞ்சி பூலோகத்தின் சொர்க்கம். ஆனால் மனிதர்களின் பேராசை அந்த ஊரின் மகத்துவங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கத் துவங்கியிருக்கிறது. முதல்நாள் நாங்கள் சிரபுஞ்சியிலிருந்த ஒரு குகைக்குச் சென்றுவிட்டு   பின் அங்கிருந்து nohkaikai அருவி இருக்கும் மலை உச்சிக்குச் சென்றோம். நான்கு மணிக்குமேல் வெளிச்சம் குறைந்து சூரிய அஸ்தமனமாக மலையுச்சியிலிருந்த கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு மக்களும் கிளம்பிச் செல்லத் துவங்கியிருந்தனர்.


நானும் என்னோடு இருந்த பழங்குடி நண்பரும் மலையின் ஒரு எல்லையில்  நானூறு அடி உயரத்திலிருந்து விழும் அருவியையும் இன்னொருபுறம் பிரம்மாண்டமான சூரிய அஸ்தமனத்தையும் பார்த்துக் கொண்டிருந்தோம். வாழ்வில் அதுபோல் இன்னொருநாள் எனக்குத் திரும்பக் கிடைத்துவிடாது என மனம் நிறைந்தது. ‘இந்த அருவிக்கு ஒரு கத இருக்கு..’ என எனது நண்பர் சொல்ல, நான் அவரிடம் கதை கேட்க ஆர்வப்பட்டேன்….. எங்க காசி மக்களோட நம்பிக்க இது. ரொம்ப வருசம் முன்னால இந்தக் காட்டுல இருந்த காசிப் பழங்குடி பொண்ணு ஒருத்தி வேற பழங்குடி இனத்த சேந்த ஒரு பையனக் காதலிச்சிருக்கா.. அவன் ஒரு புல்லாங்குழல் கலைஞன். அவங்க ரெண்டு பேர் காதல் ஊருக்கே தெரியும். ஆனா வேற வேற இனங்கறதால அவங்களால சேரமுடியல… ஒரு நாள் அவன் அவளோட சேரமுடியாத ஏக்கத்துலயே இறந்துடறான்… அந்தப் பெண் அவனுக்காக மனம் உடஞ்சு கண்ணீர் விட்டு அழ ஆரம்பிச்சா… அந்தக் கண்ணீர் தான் இந்த அருவி… இப்பயும் அவளோட அழுகைய எங்க மக்களால கேக்கமுடியும்..’ என அவர் சொல்லி முடித்தபோது இருட்டியிருந்தது. நாங்கள் அறைக்குத் திரும்ப முடிவு செய்தபோது அங்கு மனித நடமாட்டமே இல்லை. குளிர் பெரும் போர்வையாய் எங்களைச் சூழ்ந்திருக்க எதையும் பேசமுடியாத அமைதியில் நான் இறுகியிருந்தேன். ஷில்லோங்கிலிருந்து கிளம்புகையில் எனக்காக எடுத்து வந்திருந்த ‘கியாட்’ என்னும்  அரிசியில் தயாரான பியரை அருந்தக் குடுத்தார். நான் அமைதியாக இரண்டு போத்தல் பியர் அருந்துவிட்டு வேடிக்கை பார்த்தபடியே உறங்கிவிட்டேன்.


அடுத்தநாள் பிற்பகல் வேளையில் டவ்க்கி ஆற்றுக்குச் செல்லும்போதுதான் இவரது உறவினர் (எனது பயணத் துணைவர்) வரமுடியாமல் போனதற்கான காரணத்தை என்னிடம் விளக்கினார். எனது நண்பர் காசிப் பழங்குடி, அவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டபெண் வேறு இனம். காசிப் பழங்குடியினர் தாய்வழிச் சமூகத்தினர். அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு சமூகத்தில் திருமணம் செய்துகொண்டாலும்  அவளின் குழந்தைகளுக்கு தாயின் பெயர் கிடைத்துவிடும், ஆனால் ஆண் திருமணம் செய்துகொள்ளும்போது அப்படி நடப்பதில்லை. சொத்திலும் இயல்பாகவே இளைய மகளுக்குத்தான் உரிமை அதிகம்.  நிறைய காசி இனப் பெண்கள் வேற்று இனங்களோடு திருமணம் செய்கையில் சொத்தில் ஒரு பகுதி வேறு இனங்களுக்குச் செல்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பழங்குடி நிலங்கள் மற்றும் உரிமைகள் தொடர்பாக வடகிழக்கு மாநிலங்களில் நிறைய சிறப்புச் சட்டங்கள் உண்டு. இந்தப் புதிய திருமணங்கள் அந்த விதிகளை மீறுபவையாக இருப்பதால் அதனை தட்டுக்கும் ஒரு மசோதாவைக் கொண்டுவர சில வருடங்களாக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. என் நண்பரின் குடும்பச் சூழலும் அதுபோலொரு சிக்கலில் அமைந்துவிட்டதால்தான் என்னோடு பயணத்தில் தொடரமுடியவில்லை என சொன்னபோது முந்தைய நாள் அவர் அருவியில் வைத்துச் சொன்ன கதையை நினைத்துக் கொண்டேன்.


 இன்றைக்குப் பயணம் செய்ய விரும்புகிறவனுக்கு அவனையொத்த மனிதர்களோடு பயணிக்க ஏராளமான வாய்ப்புகளுண்டு. உலகம் முழுக்க ஏராளமான குழுக்கள் பயணிகளுக்காக இயங்கி வருகின்றன.  கொரோனா பெருந்தொற்று துவங்குவதற்கு முன்னால் woofing என அதுபோன்றதொரு குழுவில் உறுப்பினராகி நாற்பது நாட்கள் நேபாளத்தில் பயணம் செய்ய நேர்ந்தது. வாய்ப்பிருந்தால் அந்தப் பயணம் குறித்து இன்னொருமுறை எழுதுகிறேன். மேகாலயாவில் இருந்த நாட்களில் நான் கவனித்ததும் கற்றுக்கொண்டதும் ஏராளம்.  எத்தனை அரசியல் நெருக்கடிகள் இருந்தாலும் அந்த மக்களின் விடுதலையுணர்ச்சி அதில் முக்கியமானது. தங்கள் அடையாளங்களை அவர்கள் ஒருபோதும் கைவிடுவதில்லை. அதேநேரத்தில் நவீனத்திற்கும் தங்களை  உட்படுத்திக் கொள்கிறார்கள். ஷில்லோங்கில் உள்ள அருங்காட்சியகம் மிக முக்கியமானது, வடகிழக்கில் உள்ள ஏழ மாநிலங்களையும் புரிந்துகொள்வதற்கான பெரும் சேகரிப்புகளைக் கொண்டிருக்கும் அருங்காட்சியகம்.


தங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மிக உயர்வைப் போற்றும் அந்த மக்களை இங்கே தமிழகத்திலோ மராட்டியத்திலோ ஒரு சமவெளி மனிதன் சாதாரணமாக சிங்க்கி என கேலிப்பெயர் கொண்டு அழைப்பதைப் பார்க்கையில் பல சமயங்களில் ஆத்திரமாக இருக்கும். வடகிழக்கு மக்களுக்கு இருக்கும் அரசியல் விழிப்புணர்ச்சி, திறந்த மனம், எல்லோரையும் இன்முகத்தோடு நடத்துவது, முக்கியமாக எந்த நிலையிலும் சகமனிதர்களை நேசிப்பதென கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மேம்பட்ட மக்கள். கடந்த சில மாதங்களுக்குமுன் மணிப்பூரில் துவங்கிய கலவரத்தின் வேரிலிருந்து கவனித்து வந்தவர்களுக்குத் தெரியும் அரசியல் லாபங்களுக்காக அந்த மாநிலத்தின் பழங்குடி மக்கள் வேட்டையாடப் பட்டிருக்கிறார்களென. மணிப்பூர் என்றில்லை, வடகிழக்கில் குவிந்துள்ள இயற்கை வளங்களை சூரையாட இனி இந்திய முதலாளிகள் எந்த வன்முறைகளையும் செய்யத் தயங்கமாட்டார்கள். நீங்கள் சுற்றுலாப் பயணிகள் என்றால் உங்களுக்கு  மேகாலயாவும் மணிப்பூரும் மிஸோரமும் நாகலாந்தும் நீங்கள் பயணிக்கும் இன்னொரு புதிய இடம்…. நீங்கள் ஊர்  சுற்றியென்றால் அந்த மக்களின் வலிகளைப் புரிந்துகொண்டு அரசியல் ரீதியாக அவர்களோடு கைகோர்த்து நிற்கலாம், உங்களால் நாடோடியாக முடியுமென்றால் அந்த மக்களோடு சில காலம் வாழ்ந்து அவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்த முயற்சிக்கலாம்… 

141 views

Recent Posts

See All
bottom of page