இளவரசிகளின் புலி விளையாட்டு ......
மீண்டும் நாங்கள்
விளையாடத் துவங்கினோம்
எப்பொழுதும்போல் நான் கோமாளி
வர்ஷி இளவரசி
இன்னும் சில குட்டி இளவரசர்களும்
இளவரசிகளும் சேர்ந்து கொண்டனர்
வழக்கமான முயல் கதையிலிருந்து
மாறியிருந்தது
புலிகளைப் பற்றின அவளின் புதிய கதை
குழந்தைகளுடன் விளையாடிய கோமாளி
நடனத்தை விரும்பக்கூடுமென
புலியின் முன்னால் ஆடுகிறான்
கொட்டாவியினைத் தவிர்த்து
எதிர்வினைகளற்ற அதனிடம்
வர்ஷியும் வினுவும்
தென்னை நாரால் பின்னப்பட்ட
ரோஜாக்களைக் கொடுக்கிறார்கள்
தன்னை மறந்து இப்பொழுது
புலி நடனமாடுகிறது
காட்டை நோக்கி ஓடும்
பிள்ளைகளின் ரயிலில்
பயணிக்கும் புலி
காட்டின் விளிம்பில் எல்லோரையும் முத்தமிடுகிறது
தொலைவில் மறையும் வரை
அதன் வாலாடிக்கொண்டிருந்ததை
வினு மட்டும்தான் கவனித்திருந்தாள்
இப்பொழுது கோமாளியின் நேரம்
ஒப்பனைகள் துவங்கிய
மூன்றாவது நிமிடத்தில்
அவனுக்கான பிரத்யேக ஆடை வந்தது
அப்படியும்
ஒத்துவராதவனை
தலையில் குட்டி ஒழுங்கு செய்தனர்
மூக்கில் வரையப்பட்ட
சிவப்பு நிறப் புள்ளிக்குப் பின்
கடைசி தென்னைநார் ரோஜாவினை
இவனுக்குப் பரிசளித்தனர்
நாணயங்களை மறைத்து வைக்கும்
கண்கட்டு வித்தைகளை நிகழ்த்திக் காட்டியவனிடம்
நேரங்கழிந்தபின் குதூகலம்
விளையாட்டுகள் வித்தைகளென
இடைவெளியின்றி சுற்றியதில்
களைத்து ஓய்ந்திருந்தவனுக்கு
வியர்த்த முகம் துடைக்க வர்ஷி
தனது கைக்குட்டையினைக் கொடுத்தாள்
விடுபட்ட இடைவெளிக்குப் பின்பாக
புதியதொரு கதை சொல்லத் துவங்கியவளின்
மடியில் ஆழ்ந்து உறங்கிப் போனான் கோமாளி
1 குட்டி இளவரசிகளான ஸ்ரீ வர்ஷினிக்கும், வினுவுக்கும்.......
2
சாம்பல் நிறம் உதிரத்துவங்கியிருந்த
ஆகாயத்தின் ஓர் முனையைப் பற்றி இழுத்தவளாய்
முயலொன்றின் இடது காதென
அதனைக் குறித்து கதையொன்றைத் துவக்கினாய்
மையமின்றி சுழன்ற பெருங்காற்று
உன் அசைவுகளினூடாக ஊடுருவிக்கொண்டிருந்த
சில நொடிகளில்
பாதியாய் வளர்ந்திருந்த உன் சிறு பல்லொன்று
அன்றைய அரைநிலவினை பிரதிபலிப்பதாயிருந்தது
வனமென விரிந்த உன் கதைச் சொற்களில்
உருமாறி, உருமாறி நான்
சென்று கொண்டிருந்தேன் அனேக உயிரினங்களாய்
பறவையொன்றின் உருவத்திலிருந்த பூதத்தினைப் பற்றி
சொல்லி முடித்துவிட்டு சற்றே நிறுத்திய நீ
பூதங்களுக்கிருப்பதைப் போன்ற கொம்புகளிருப்பதாய்
என் தலையில் சுட்டிக் காட்டினாய்
அசந்தர்ப்பமான கனமொன்றில்
உறங்க எத்தனித்தவளாய் கண்களை மூடி
நீ படுத்துக் கொண்டுவிட்ட பின்
பாதியில் விட்டுப்போன கதையின் பூதமாய்
காற்றில் உலவத் துவங்கிவிட்டிருந்தேன்….
ஸ்ரீ வர்ஷினிக்கு…