கடந்த வாரம் திருமண நிகழ்வுக்காக பெங்களூர் சென்றபோது ஏராளமான திட்டங்கள் இருந்தன. குடும்ப நிகழ்வுகளுக்குச் செல்வதென்பது பெரும்பாலும் சில சுயநலமான காரணங்களுக்குத்தான். முதலில் நானொரு பொறுப்பான குடும்பஸ்தன் என்பதை அழுத்தமாக நிரூபிக்க வேண்டியதன் தேவை. அடுத்ததாக நிகழ்வுக்கு வரும் அழகான பெண்களை ஆறுதலாக சைட் அடிக்க.... முன்பெல்லாம் ஏதாவது நிகழ்வுகளில் அழகான பெண்களைப் பார்த்து ரசித்துப் பேசச் செல்லும் போது சில சமயம் அவர்களோடு நல்ல அலைவரிசை உருவாகி நண்பர்களாக தொடரக்கூடிய வாய்ப்புகள் அமையும். சமயங்களில் அவர்கள் உறவு முறைகளில் சகோதரிகளாக வந்துவிடக்கூடிய துரதிர்ஸ்டமும் நிகழ்வதுண்டு. இந்த குழப்பங்களிலிருந்து விடுபடுவதும் பெருங்கலைதான். இந்தமுறை பழக்க தோசத்தில் ஒரு அழகான பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப்பின் எங்களை நோக்கி ஒரு நடுத்தர வயதுப் பெண் நடந்து வந்தார், நாற்பது வயது என்று வைத்துக் கொள்ளலாம். ’அடேய் அஞ்சு வருசம் முன்ன எங்கிட்ட ஃப்ளர்ட் பண்ண, இப்ப என் பொண்ணு கிட்ட ஃப்ளர்ட் பன்றியா எனக் கேட்க எனக்கு ஒரே மானக்கேடாக போய்விட்டது. இதென்னடா இது, விசேசத்துக்கு வந்த இடத்தில் வேதனை... என அத்தோடு யாரிடமும் பேச வேண்டாமென முடிவு செய்து விட்டேன்.
பிரச்சனை அதுவல்ல, ஞாயிறு நிச்சயதார்த்தம், திங்கள்கிழமை காலை திருமணம். திருமணம் முடிந்து பயணிக்க வேண்டுமென்பது திட்டம். கர்நாடக மாநிலத்தில் நன்றாக சுற்றியிருக்கிறேன் என்றாலும் இந்தமுறை பயணம் எழுத்துப் பணிக்கானது. கொரோனாவின் முதல் அலை காலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் சோலாப்பூரிலிருந்து கால்நடையாக நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆறு பேர் ஊர் திரும்பினார்கள். அரசால் கைவிடப்பட்ட இந்திய மக்கள் இந்த தேசத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கடந்த துயரம் நாம் அறிந்ததுதான். ஆனால் இந்த இளைஞர்களின் பயணத்திலிருந்த உறுதி எனக்கு முக்கியமானதாய்ப் பட்டது. அந்தப் பயணத்தை புனைவாக எழுத விரும்பினேன்.... அதனை முன்னிட்டு அவர்கள் பயணித்த சோலாப்பூர் திருச்சி சாலையில் பயணிக்க விரும்பினேன். பெங்களூரிலிருந்து சோலாப்பூர் சென்று திரும்பியபின் பெங்களூரிலிருந்து திருச்சி பயணிக்க திட்டம். இதனை முன்னிட்டுதான் பெங்களூரில் நடக்கும் விசேச நிகழ்வில் கலந்துகொள்ள முடிவெடுத்திருந்தேன். இந்தப் பயணம் எனக்கு முக்கியமானதென்பதால் என் மீதும் எனது எழுத்துகள் மீதும் நல்ல அபிப்பிராயம் கொண்ட சில நண்பர்களிடம் இது தொடர்பாக பேசியிருந்தேன். காரில் பெங்களூரிலிருந்து சோலாப்பூர் சென்று வரலாமெனக் கேட்டு அவர்களில் சிலர் சம்மதமும் சொல்லியிருந்தனர்.
துரதிர்ஸ்டவசமாக திங்கள்கிழமை பெங்களூர் தனியார் வாகனங்களுக்கு மட்டும் ஸ்ட்ரைக். அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கும் என ஞாயிறு மாலை செய்தி கிடைத்தது. காரணம், தமிழ்நாட்டைப்போல் அங்கும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் வந்து சில நாட்கள் தான் ஆகின்றன. அந்த திட்டத்தால் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு இழப்பு. அதனைத் திரும்பப் பெற கோரிக்கை வைத்துதான் இந்த போராட்டம். முதலில் இந்த ஸ்ட்ரைக் கடுமையாக மனவுளைச்சலை உண்டாக்கியது. ஏதோ பெயருக்கு ஸ்ட்ரைக் செய்வார்கள் என பார்த்தால் அப்படியில்லை, மஞ்சள் போர்ட் வண்டிகளைப் பார்த்தால் கல்லால் அடிக்கிறார்கள். இதனால் சொந்த வாகனம் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியுமென்கிற நிலை. இன்னொரு புறம் பயணம் குறித்துக் கேட்டிருந்த நண்பர்களில் ஒருவர் கூட சரியான பதில் சொல்லவில்லை. போகலாம் அல்லது முடியாது என ஏதாவதொன்றை சொல்லி இருக்கலாம். ஒருவர் நம்மீது அபிமானம் கொண்டிருக்கிறார் என்பதன் அடிப்படையில் மட்டுமே நாம் பயணம் குறித்து கேட்கிறோம், விருப்பம் இல்லாத பட்சத்தில் அல்லது முடியாத பட்சத்தில் நேரடியாக சொல்லிவிடுவதுதானே மரியாதை... ம்ஹூம்... சில எழுத்தாளர்கள் குடித்துக் கூத்தாடவும் சல்லாபிக்கவும் பயணித்தால் கூட்டமாகச் செல்ல ஆட்களுண்டு. ஆனால் நல்ல உரையாடலுக்கோ ஒன்றைக் கற்றுக்கொள்ளவோ ஒரு எழுத்தாளன் பயணிக்க அழைக்கையில் அவன் மதித்து அழைக்கிற அத்தனை பேருமே அமைதி காப்பார்களெனில் இழப்பு யாருக்கு.?
பயணங்களைத் திட்டமிடுவதில் பொதுவாக எனக்கு உடன்பாடில்லை. எழுத்தாள நண்பர்களை கவனிக்கிறேன், அவர்கள் எல்லாவற்றையும் திட்டமிடுகிறார்கள். அவர்களுக்கு எல்லாக் கட்சியிலும் நண்பர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு எல்லா ஊரிலும் நண்பர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு எல்லோருடனும் இணக்கம் தான், எல்லோருக்கும் நல்லவனாய் இருக்கக்கூடிய இந்தக் கலையை எப்படிக் கற்கிறார்கள் என்பது இன்றுவரையிலும் புரியவில்லை. காலை அமர்வில் இடதுசாரியாகவும் பிற்பகல் அமர்வில் வலதுசாரியாகவும் இருப்பதெற்கெல்லாம் ஒரு தனித்திறமை வேண்டும். கூடுதலாக இலக்கியத்தில் தூய்மைவாதம் குறித்தெல்லாம் கூட அவர்களால் வகுப்பெடுக்க முடியும். இப்படியானவர்கள் பயணத்தைத் திட்டமிட்டால் சொல்லவா வேண்டும். நான் அடிப்படையில் யாரோடும் இணக்கமாக இருக்கமுடியாதவன் என்பதால் இந்த சூதுவாதுகள் கைவரப் பெறுவதில்லை.
எனது நண்பர்களில் ஒருவரான செந்தில் முன்பு திருவணந்தபுரத்தில் வசித்தார். கேரளாவில் தனித்தனியாக நிறைய பயணித்திருந்தாலும் தென் எல்லையிலிருந்து வட எல்லைக்கு தரைமார்க்கமாக நீண்டதூரப் பயணம் மேற்கொண்டதில்லை. அப்படி பயணம் செல்ல வேண்டுமென செந்திலிடம் கேட்டபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டு என்னோடு பத்து நாட்கள் பயணித்தார். அந்தப் பயணத்திற்குப்பின்புதான் கொமோரா நாவலை எழுதினேன். பல சமயங்களில் ஊர் சுற்றுவதற்கு நான் இலக்குகள் வைத்துக்கொள்வதில்லை. சொல்லப்போனால் பயணங்களில் படம் எடுத்துக் கொள்வதுகூட அரிதானதுதான். அடிப்படையில் ஊர் சுற்றுகையில் இருக்கும் விடுதலையுணர்வும் பராரரித்தனும் பிடிப்பதனால் மட்டுமே சிந்தனை எப்போதும் சாலைகளிலேயே இருக்கிறது. நமது எழுத்தை வாசிக்கிறவர்கள் அதனைப் புரிந்துகொள்வார்களென நினைத்து நாம் ஏமாந்துபோகும் தருணங்களை என்ன சொல்ல?
யாரும் பயணம் குறித்து எதுவும் சொல்லாத காரணத்தால், திங்கள் கிழமை ஒரு அரசுப் பேருந்திலேறி எலக்ட்ரானிக் சிட்டி வந்து அங்கு நண்பர்களைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து ஓசூருக்குச் சென்று இரவு உணவை உண்டபின் திருச்சியை நோக்கி பயணித்தேன். ஒரு காரணமும் இல்லை. எழுத வேண்டிய கதை மனதிற்குள் அலைபாய்ந்தபடியே இருக்கிறது. பாதையின் ஒரு பக்கத்தை கடந்து வந்தாகிவிட்டது, இன்னொரு பக்கத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம். திருச்சியில் இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு உடல் முழுக்க சோர்வுடனுடனும் இடது கையில் சிறிய காயத்துடனும் நேற்று சென்னை வந்தேன். எதிர்பாராதவிதமாக இந்த குழப்பமான பயணம் ஒரு புதிய கதையை எழுதுவதற்கான முன் தயாரிப்புகளை தந்திருக்கிறது, முந்தைய கதைக்கும் இதற்கும் தொடர்பே இல்லாத உலகம். முந்தையக் கதை தேடிக் கண்டடைவதைப் பேசும், இப்பொழுது எழுத உத்தேசித்திருப்பது கண்டடைந்ததை கைவிடுவது குறித்து பேசக்கூடிய நாவல். அனேகமாக புதிய நாவலொன்றை எதிர்பார்க்கலாம். நாவலின் தலைப்பு - ஆம்பர்க்ரீஸ்.