top of page
Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

ஒரு துண்டு வானம்.


”வீழாதே என் தெய்வமே

வீழ்ந்து விடாதே

வீழ்ந்தவர் எவரும்

எழுந்ததில்லையே”

- Song of giants of the first age




”ப்ளூ மவுண்ட்டைன விக்கப் போறேன் அசோக். this will be her last race…”

முதலாளியிடமிருந்து இந்த வார்த்தைகளை அவன் கேட்டபொழுதுதான் அந்த நாளுக்கான சூரிய வெளிச்சம் மிக மெதுவாய் அடிவானத்தில் எழத் துவங்கியிருந்தது. இன்னும் பனி விலகாத புல்வெளியை ஒட்டியப் பந்தயச் சாலையை ஒருமுறைப் பார்த்தவன் முதல் முறையாய் அந்தக் குதிரையின் மீது ஏறிய நாளை நினைத்துக்கொண்டான். அன்றைய தினத்திற்கான பயிற்சிக்காக ப்ளுமவுண்டைனும் அவனும் கிரவுண்டிற்குள் தயாராகி இருந்தனர். தனது எல்லா சமிக்ஞைகளையும் புரிந்துக் கொள்ளக் கூடிய தன் குதிரையிடம் ’நீ கடைசியா இந்த வடத்தில் ஓடப்போவது இன்றுதான் என்பதையும் சொல்லிவிடலாமா?’ அதன் இடது கழுத்தில் தடவிக் கொடுத்தான். உற்சாகமாக தலையைக் குலுக்கிக் கொண்டது. ’இது ஒரு வேலைன்னு போறியேடா? அப்பிடி என்ன இருக்கு இந்த ரேஸ்ல?’


பயிற்சி முடிந்து முதல் சில வெற்றிகளுக்குப் பின்னால் அப்பா கேட்டதற்கு


பயிற்சி முடிந்து முதல் சில வெற்றிகளுக்குப் பின்னால் அப்பா கேட்டதற்கு uld guess its like being on the fastest, scariest, craziest roller coaster…” என சிரித்துக் கொண்டே சொன்னான்.


அப்படியாகத்தானே இந்தக் குதிரைக்கும் இருக்க வேண்டும். அந்தக் களிப்பு, கொண்டாட்டம் எல்லாம் இனியும் இருக்குமா? ட்ரெய்னர் நேரத்தை வீணாக்க வேண்டாமென இவனை அவசரப்படுத்திக் கொண்டிருக்க, குதிரையுமே கூட இன்று ஏன் இவன் இவ்வளவு தாமதப்படுத்துகிறான் என ஓடும் ஆர்வத்தோடு அடிக்கொரு தரம் கால்களை வாரிக் கொண்டிருந்தது.


ஏழெட்டு வருடங்களாய் குதிரைகளோடு குதிரைகளாய் வாழும் அவன் உடலும் ஒரு குதிரைக்குட்டியைப் போலத்தான். மெலிந்து தொடர் ஓட்டங்களால் வலுவேறிப்போன தசை. பந்தயத்தின் போது குதிரையின் மீது உட்காராது பயணித்து இப்பொழுது அவன் உடல் காற்றைப் போலாகி இருக்கிறது. பயிற்சி நேரம் முழுக்க இறுக்கமாகவே இருந்தான். இந்த ரேஸ் மைதானம் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் ஒரே நேரத்தில் இரக்கமின்றி மனிதர்களுக்கு தரும் குணம் கொண்டது. பத்து ரூபாய் போட்டு ஆயிரம் ரூபாய் எடுக்கிறவன் பிறிதொருநாள் லட்ச ரூபாய் போட்டு வெறும்கையோடு போவதும் நடக்கும். குதிரைகளை வளர்ப்பவர்களும், ஜாக்கிகளும், குதிரைகளும்கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் இல்லை. வெற்றிகள் இல்லாத காலங்களில் ஒரு ஜாக்கிக்குள் இருக்கும் வெறுமை கொடூரமானது. அவன் தோல்வி அவனது உணவில் பாதியைக் குறைக்கும். அத்தனை நாட்களும் அவனோடு ஓடிய குதிரையை அவனிடமிருந்து பிரிக்கும், அல்லது குதிரைக்குப் பதிலாக இவன் விற்கப்படுவான். இரண்டுமே சகிக்க முடியாத அவஸ்தைகள். தன் மீது பந்தயம் கட்டின எத்தனையோ ஆட்களை இவனின் குதிரையும் லட்சாதிபதிகளாய் மாற்றியிருக்கிறது. பந்தயத்தில் வெற்றி பெற்ற எவரும் இதுவரை அந்தக் குதிரைக்கு நன்றி சொன்னதில்லை. பணத்தின் மீதான மோகத்தில் அந்த ரேஸில் சம்பாதித்ததை இன்னொன்றில் போய் முன்பணமாய்க் கட்டக் காத்துக் கொண்டிருப்பார்கள். வெற்றிக்குப்பின் வெறுமனே குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு சுற்றுப்பாதையில் கொஞ்ச தூரம் நடப்பது அவனுக்குப் பிடித்தமான விசயம். கேலரியில் இருக்கும் ஆட்களின் ஆராவாரங்கள் எல்லாம் தனக்கானதென்கிற கர்வத்தில் குதிரை சில நிமிடம் தலையை சிலுப்பியபடி நடக்கும். இந்த மனிதர்கள் சம்பாதிப்பதில் துளியும் கிடைக்கப்பெறாவிடினும் விசுவாசத்தின் பொருட்டு தான் செய்த வேலைக்கு இந்த ஆராவரம் தான் அது பெறும் பெரும் பரிசு.


அசோக் இதற்கு முன்னும் சில குதிரைகளை ஓட்டியிருக்கிறான். ஆனால் இந்தக் குதிரையிடம் இருக்கும் அந்நியோன்யம் இருந்ததில்லை. ஒரு குதிரையை பழக்குவது அத்தனை எளிதல்ல, பந்தயத்திற்காக பழக்கப்படும் குதிரைகளுக்கு எப்பொழுதும் தனித்துவமான குணங்கள் உண்டு. நீண்ட பனிக்காலத்தில் வேட்டைக்குப் பழக்கும் ஓநாய்களை விடவும் கவனமாய் பழக்கப்படுத்தப்பட வேண்டியவை அக்குதிரைகள். குதிரை ஓடும் போது அதன் மேல் இருப்பவனின் சுமை தெரியக் கூடாது, காற்றை சுமந்து செல்கிற மனநிலை அதற்கு இருக்க வேண்டும். பந்தயத்தோடு முடிந்து போவதல்ல ஒரு ஜாக்கிக்கும் குதிரைக்குமான உறவு. ப்ளூ மவுண்ட்டைன் என்னும் இந்தக் குதிரையோடு இன்று அவன் போக இருப்பது பதிமூன்றாவது பந்தயம். பதிமூன்றில் பத்து வெற்றிகள். அதுவும் ஒரே சீசனில். இன்றைய பந்தயம் அவனைப் பொறுத்தவரை வெறுமனே பணத்திற்கானது மட்டுமல்ல, இந்த நாளும் அத்தனை சாதாரணமானது அல்ல.

பந்தயத்திற்குத் தயாராகும் ஒவ்வொரு நொடியும் இறுக்கமானதாய் இருந்ததுடன் இதற்க்குப் பின் வரும் புதிய குதிரையை எப்படி பழக்கப்படுத்துவது என குழம்பிக் கொண்டிருந்தான். சில நாட்களுக்கு முன்பாக ஆஷா வாங்கித் தந்திருந்த புது ஸ்கின்னியை அன்று அணிந்து கொண்டான். ”இன்று ப்ளூவின் கடைசி ரேஸ்” என அலைபேசியில் சொன்ன அடுத்த கனமே அவளும் கலங்கிப் போனாள். இன்னும் சில நிமிடங்களில் அவள் வரக்கூடும். இவனைப் போலவே அவளுக்கும் ‘ப்ளூ’வின் மீது அபரிமிதமான காதல். தனியாக இருந்ததால் குதிரையைப் பற்றின எண்ணங்கள் கட்டுப்படுத்த முடியாதபடி பெருகிக் கொண்டிருந்தன. மனதிற்குள்ளாகவே அந்த தினத்தின் ரேஸை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். பல சமயங்களில் அவன் மனவோட்டம் தப்புவதில்லை. ஓடப் போகும் ட்ராக், அன்றைய தினம் வரும் சக ஜாக்கிகள், குதிரைகள் எல்லாம் என்ன மாதிரி இருப்பார்கள் என எல்லாவற்றையும் அடிப்படையாய்க் கொண்டு அமையும் இந்த மனவோட்டம். எந்த மைதானத்தில் ஓடினாலும் அவனுக்கு நாலாவது ட்ராக் ராசி, அதில் ஓடின பெரும்பாலான பந்தயங்களிலும் அவனே முதலில் வந்திருக்கிறான். பரிசுப் பணத்தில் பத்து சதவிகித வருமானம் என்பதன் சந்தோசம் என்னவென்பது பந்தயத்தில் முதலில் வரும் நாட்களில்தான் அவனுக்குத் தெரியும். ‘இவ்ளோ பணத்த எடுத்துட்டுப் போயி என்னடா செய்யப்போற?’ அவன் சக ஜாக்கிகள் விளையாட்டாகக் கேட்பதாகக் காட்டிக் கொள்ளும் முகபாவனைகளுக்கு பின்னால் தாங்கள் தவறவிட்டுவிட்ட ஏமாற்றம் இருப்பதை கவனித்திருக்கிறான். ”ரெண்டு கிலோ சத போட்டாலும் முதலாளி வீட்டுக்கு அனுப்பிருவாரு. நம்ம ஆயுசுகாலம் ரொம்பக் கம்மி ப்ரோ. இருக்கற நாள்ல ஸ்பிரிட்டா இருந்தாத்தான நாலு காசு சேக்க முடியும்? என சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போவான்.


பிற்பகலுக்கு முந்தைய இளம் சூரிய வெளிச்சத்தில் ப்ளூ மவுண்ட்டைன் தனது பிரகாசமான கண்களுடன் பந்தய மைதானம் வந்துவிட்டிருந்தது. அசோக்கின் கைகளை இறுக்கமாகப் பற்றியிருந்த ஆஷா சமாதானம் சொல்வதற்கான வார்த்தைகளின்றி தவித்தாள். அசோக்கிற்கு ப்ளூதான் முதல் காதலி. அவளை பிரிவதை எந்த வார்த்தையில் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்த இயலும். ”சியர் அப் அசோக். இது ஃபேர்வெல். நாமதான் சந்ந்தோசமா அனுப்பி வைக்கனும்..” அவன் கண்களை உயர்த்தி அவளைப் பார்த்து ஆம் என்பது போல் தலையை ஆட்டினான். ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து வந்த அவன் தலைக்கு மேலிருந்த வானம் விஸ்தாரமானது, அதன் எல்லை எதைக் குறித்தும் அக்கறை கொள்ளாதவனுக்கு தன் முன்னால் விரிந்து கிடக்கும் ஒரு துண்டு வானத்தைக் கடந்து செல்வதுதான் இப்பொழுது இலக்கு. அவன் கண்களுக்குள் ஓடி முடிக்க வேண்டிய தூரம் ஒரு அசைவற்ற நிழலைப் போல் ஊன்றிக் கிடக்க, இரண்டு நீளமான வெள்ளிக்கம்பிகளைப் போல் அவன் குதிரையின் வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. தனது கடைசிப் பந்தயத்திற்கு நிற்கும் எந்த அவசங்களும் இல்லாமல் வழக்கமான உற்சாகம் அதன் உடலில். இனி ஒருபோதும் பந்தயத்தில் ஓடப்போவதில்லை என்கிற உண்மை குதிரைக்கு மேல் உட்கார்ந்திருப்பவனுக்கு மட்டும் தானே தெரியும். பந்தயத்தில் ஓடிய இத்தனை நாட்களும் அதைத் தன்னுடையக் குதிரையாகத்தான் நினைத்திருக்கிறான். இந்தப் பந்தயம் முடியும் அடுத்த நொடியில் தன்னிலிருந்து பிரியப் போகும் அந்த ஜீவன் ஏதாவதொரு கனத்தில் தனது அருகாமையை எண்ணி ஏங்கினால் என்ன செய்வது? உரிமையாளனை விடவும், வளர்க்கிறவனிடம் தான் எல்லா மிருகங்களும் நெருக்கமாக இருக்கின்றன. இந்த நாளுக்குப் பிறகு இந்தக் குதிரை என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். விற்கவோ, கொல்லவோ பரிசளிக்கவோ நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. கடைசியாக அதை வெற்றியுடன் அனுப்பி வைக்க வேண்டுமென்பதுதான் அவனின் விருப்பம். ஒரு நண்பனுக்கு நடக்கும் கெளரவமான வழியனுப்பதலாக இருக்க வேண்டும்.



அடைக்கப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் ஆறு குதிரைகளும் தயாராக இருந்தன. அவனுக்கு இரண்டாவது ட்ராக் கொடுத்திருந்ததில் கொஞ்சம் சங்கடப்பட்டான். காட்டிக் கொள்ளாதிருந்தவனின் உடலெங்கும் வழக்கமற்ற பதற்றம். வரிசையிலிருந்த குதிரைகளின் கால்களில் அக்கினி சுழன்று கொண்டிருக்க வழக்கமாக சக ஜாக்கிகளைப் பார்த்து புன்னகை செய்வதைக் கூட இன்று அவன் செய்திருக்கவில்லை. சமயங்களில் பந்தயங்களின் முடிவு முந்தின தினமே தீர்மானிக்கப்படுவதுண்டு. பந்தயங்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சூதாட்ட முதலாளிகள் குதிரைகள் ஓடத் துவங்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னால் கேலரியில் இருக்கும் மீடியேட்டர் ஒருவன் மூலமாக எந்த நம்பர் என்று சைகை மட்டும் செய்வார்கள். சம்பந்தப்பட்ட ஜாக்கியோடு மற்ற ஜாக்கிகளுக்கும் அந்த சைகை ஒரு உத்தரவு. இன்று ஒருவேளை முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் இவன் ஜெயித்துதான் ஆக வேண்டும். குதிரையில் ஏறுவது இதுவே கடைசி முறையானாலும் கூட அவனுக்கு சம்மதம் தான். கேலரியில் எப்போதும் இல்லாத கூட்டம். பாதிக்கும் மேல் பெரும் முதலாளிகள். வார இறுதியில் இது அவர்களுக்கு சுவாரஸ்யமான விளையாட்டு. ஆனால் பெரும் லாபமிருப்பதால் இதை வெறும் விளையாட்டாக மட்டும் அவர்கள் நினைப்பதில்லை.


ப்ளூ மவுண்ட்டைனைப் போலவே அவனுக்கும் பந்தயத்தில் இருந்து விலகிக் கொள்ளும் நேரம். வெற்றிகள் சலித்துப்போய் சராசரி மனிதர்களில் ஒருவனாய் வாழ விரும்பினான். இந்த வெற்றிகளை எல்லாம் அழித்துவிட்டு தன்னைப் புத்தம் புதிய மனிதனாய் சூரியனைப் போல் மாற்றிக் கொள்ள நினைத்தான். ஒவ்வொரு சூரியனும் இருளால் குருடாக்கப்படுகிறான், காற்றால் அடித்துச் செல்லப்படுகிறான், நெருப்பால் சுட்டெரிக்கப்படுகிறான், நீரில் மூழ்கிப் போகிறான். ஒவ்வொரு முறையும் சூரியன் தன்னை அழித்துக் கொண்டுதான் பிரகாசிக்க முடிகிறது. அவனுக்கும் இப்போது வேண்டியதெல்லாம் புத்தம் புதியதான ஒரு காலை, அதை எதிர்கொள்ள புதிய மனிதனுக்கானதொரு முகம். குளிர் உடலுக்குள் மெல்லிய ஊசிகளென இறங்கிக் கொண்டிருக்க, குதிரையும் அடிக்கொருதரம் தும்மியது. கண்களை மூடி சில நொடிகள் பிரார்த்தித்துக் கொண்டான்.


துப்பாக்கியின் வெடிச்சத்தத்திற்காகக் காத்திருக்கும் நொடி. ஒரு ஜாக்கியும் குதிரையும் முதலில் பழக வேண்டியது இந்த சத்தத்திற்குத்தான். துப்பாக்கி சத்தம் கேட்டதும் உடலில் ஏற்படும் சின்ன அதிர்ச்சி ஒரு ரேஸின் முடிவை மாற்றக் கூடும். ஆக ட்ரிகரில் வைத்திருக்கும்போதே குதிரையின் கால்களை ஓடுவதற்கு தயார்ப்படுத்தி வைத்துவிடுவார்கள். நல்ல ஜாக்கி குதிரையை வழிநடத்துவதோடு அதன் வழியில் தானும் போக நினைப்பான். அசோக் தன் குதிரையின் கழுத்தில் முத்தமிட்டான், “நீ ஓடப்போற கடைசி ரேஸ், உன்னையும் என்னையும் மறந்துட்டாலும் இந்த ரேஸ யாரும் மறந்துடக் கூடாது. எங்க நம்பிக்கை இருக்கோ, அங்கதான் எப்பவும் அற்புதங்கள் நடக்கும். நம்ம ரெண்டுபேரோட வாழ்க்கையிலயும் இது அற்புதமான நாள்…” அதன் வயிற்றில் தட்டிக் கொடுத்தவன் தன்னைச் சுற்றி இருந்த எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கத் துவங்கினான். முடிவுப்புள்ளி ஒரு நெருப்புச் சுவாலையென அவனுக்குள் பிரதிபலிக்க அதைக் கடந்து விடும் நொடிக்காக பரபரத்தது மனம்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ஆறு குதிரைகளும் தடுப்பை விலக்கி பாய்ந்து வந்தன. அவன் கைகள் குதிரையின் கழுத்து வார்களை கொஞ்சம் கொஞ்சமாய் பிடி விலக்கின. தான் ஓடவில்லை மிதக்கிறோம் என்கிற உணர்வு குதிரைக்கு வர வேண்டும். அதன் மூர்க்கத்தை காலால் வயிற்றில் உதைத்து அதிகப்படுத்தினான். மூர்க்கங்கொண்டு வேகம் அதிகரித்து குதிரை ஓடத் துவங்கியபின் வார்களை இறுகப்பிடித்தான். அக்கனமே அக்குதிரையின் கால்கள் எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டது போலிருந்தன. வர வர அவற்றின் எண்ணிக்கை மிகுந்து கொண்டே போயிற்று. முடிவில் கால்களே இல்லாது போய்விட்டன. இயக்கம் மட்டுமே எஞ்சியிருந்தது. இந்த இயக்கம் கால்களின் உதவியின்றி ஏதோவகையில் செய்யப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் இப்பொழுது தீச்சுவாலையைப் போல் பறந்து சென்றது ப்ளூ மவுண்ட்டைன். கேலரியிலிருந்த எல்லோரும் தகிக்கும் நெருப்பு உருவமொன்று ஓடிவருதைத்தான் பார்த்தார்கள். ‘என் அன்பே, நீ மகத்தானவள் இந்த வெற்றியின் சந்தோசம் உனக்கு என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கட்டுமென’ அவன் மனம் நினைத்துக் கொண்டிருந்த நொடியில் மூன்றாவது ட்ராக்கில் ஓடிவந்து கொண்டிருந்த குதிரை லேசாக உடலை சிலுப்பியது. இந்த ட்ராக்கில் பனியின் லேசான ஈரம் இன்னுமிருந்ததால் குதிரையின் கால்கள் இடறின. அவன் எவ்வளவு முயன்றும் தன் கட்டுக்குள் அதனைக் கொண்டு வரமுடியாமல் கயிறுகளைத் தளரவிட்டான். ஓடிவந்த வேகத்தில் முன்னங்கால்கள் நிலத்தில் தடுமாற விழுந்த குதிரை அவனை ட்ராக்கிற்கு வெளியே தூக்கி எறிந்தது. அவனிடமிருந்த அலறலுக்கு அப்பால் எந்தச் சலனமுமில்லை, அசைவுமில்லை. தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்கிற நினைப்பில் கீழே விழுந்தும் குதிரை ஆவேசமாய் கால்களை ஆட்டிக் கொண்டிருந்தது. அசோக்கின் ட்ரெய்னரும், ஆஷாவும் இன்னும் சிலரும் வேகமாய் ஓடிவந்து அவனைத் தூக்கிய போது நினைவு தப்பிப் போயிருந்தான்.


ஒருபோதும் குதிரையேற முடியாதவனாய் மருத்துவமனையில் இருந்து திரும்பியவனை அதிகமும் அச்சுறுத்தியது வீட்டின் வெறுமைதான். ரேஸ் கோர்ஸ் பக்கமாக போகவே கூடாதென சொல்லியிருந்தனர். தன் மார்பில் இருந்து ரத்தம் பொங்கி வழிந்ததைப் போன்ற வேதனை அவனுக்கு. முதலாளி இரண்டொரு முறை வந்து பார்த்துவிட்டுப் போனார். விசுவாசமான வேலைக்காரனை இழுந்துவிட்டத் துயரம் அவரின் குரலில். ”அந்தக் குதிரையால எந்த அதிர்ஷ்டமும் இல்லடா, பத்து ரேஸ்ல ஜெயிச்சத ஒரு நாள்ல அழிக்க வெச்சிடுச்சே. உயிருக்கு ஒன்னுன்னா என்ன ஆகி இருக்கும்?” அவரைப் போலவே குதிரையைக் குறித்து யார் சொன்னதற்கும் எந்தப் பதில்களையும் அவன் சொல்ல விரும்பியிருக்கவில்லை. தனித்து விடப்பட்ட அவனுக்குள் சதாவும் குதிரைகள் ஓடிக்கொண்டே இருந்ததை அவன் மட்டுமே அறிவான். முதுகெலும்பிலும் கழுத்துக்குக் கீழுமாக பலத்த எலும்பு முறிவு என்பதால் உடல் சரியானாலுமே கூட அவன் மீண்டும் ரேஸில் குதிரை ஏறக் கூடாதென்பது மருத்துவர்களின் அறிவுரை. குதிரையைத் தவிர்த்து வேறு எதையும் யோசிக்க முடியாதவனாய் ஆள் இல்லாத நேரங்களில் குதிரையின் மீது உட்கார்திருப்பது போல் கற்பனை செய்து கொண்டு ஜன்னலுக்கு வெளியில் இருக்கும் தெருவைப் பார்ப்பான். இரவுகளில் அவன் அறையிலிருந்து குதிரைகளின் கனைப்பொலியும் ரேஸில் ஓடும் சத்தமுமாய் எதிரொலிப்பதாக ஆஷாவிடம் அம்மா குறைப்பட்டுக் கொண்டாள். அசோக்கின் கண்களை ஊடுருவி உண்மையை அறிந்து கொள்ள நினைத்த ஆஷாவிற்கு அவன் கண்கள் குதிரையின் கண்களைப் போல் மாறிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. ”நைட்ல தூங்கு அசோக். நீ முழிச்சு உன்ன வருத்திக்கிறதோட பெரியவங்களையும் வருத்தனுமா?...ஹம்ம்ம்…” அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். அவன் சிரித்தான். “அப்போ எனக்கு ஒரு ஹெல்ப் பன்றியா? என்னோட பழைய ரேஸ் வீடியோஸ் என் ட்ரெய்னர் கிட்ட இருக்கும் வாங்கித் தர்றியா?” அவன் கண்களுக்குள் தேடியதன் விடையைத் தெரிந்து கொண்ட ஆஷா இதை மறுப்பதன் மூலம் அவன் தன்னையே குதிரையாக மாற்றிக் கொள்ளும் சாத்தியம் இருப்பதால் வாங்கித் தர சம்மதித்தாள்.

இரவு பகலென நேர வித்யாசமின்றி டிவியில் ரேஸ் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பழைய வெற்றிகளிலிருந்து தன் சந்தோசங்களை மீட்டெடுத்துக் கொண்டான். சேமித்து வைத்திருந்த பணமும், காதலும் ஆறுதலாய் இருக்க, பயிற்சிகள் உணவுக் கட்டுப்பாடு எதுவும் இல்லாத சராசரி மனிதனாய் வாழப் பழகினான். பல வருடங்களுக்குப் பின் ஐம்பது கிலோவைத் தாண்டிய உடல் எடை முகத்தையும் உடலையும் கொஞ்சம் பூசினாற்போல் மாற்றியிருப்பதைப் பார்க்க சிரிப்பு வந்தது. எல்லாவற்றுக்கும் பின்னால் இனி ஒருபோதும் திரும்பவும் பார்க்க வாய்ப்பில்லாத தன் குதிரையின் நினைவு மட்டும் என்னசெய்தும் அவனிலிருந்து அகலுவதாக இல்லை. அதனை முத்தமிட்டு வழியனுப்பக்கூட முடியாத துரதிர்ஷ்டம். ”யார் வாங்கினாங்கன்னு தெரியாதா ஆஷா?” அவள் பதில் சொல்வதற்குப் பதிலாகக் கோபப்படவே செய்தாள். “தெரிஞ்சு என்ன செய்யப் போற? வருசம் முழுக்க அந்தக் குதிரையோடவேதான் இருந்திருக்க, ஜெயிக்காட்டியும் உன்னய பத்ரமா தூக்கிட்டு ஓடியிருக்கலாம்ல. என்ன இருந்தாலும் அது மிருகந்தான் அசோக். அதுக்கு நம்மளோட எந்த உணர்ச்சிகளும் புரியாது. லீவ் இட்…”

“புரியாமப் பேசாத ஆஷா, ரொம்ப பதட்டத்துல இருந்ததால நான் செஞ்ச தப்பு அது. அதுக்கு குதிர என்ன செய்யும்? என்னோட எல்லா உணர்ச்சியும் அதுக்குப் புரியும் ஆஷா. கடைசியா நான் கழுத்துல முத்தம் கொடுத்தப்போ சின்னதா சிலுத்துக்கிட்டு ஒரு தட தலை ஆட்டுச்சே அது அன்பு இல்லாம என்ன?” அந்தக் கடைசித் தலையாட்டல் இன்னும் அவன் நினைவில் இருந்தது. ”என்னவோ போ, பட் இனிமே நமக்கு ரேஸ் வேணாம், குதிர வேணாம், ஒன்னும் வேணாம்.” ஆஷாவின் கண்களில் அவன் பார்த்த அச்சத்தை தன் வீட்டில் எல்லோரிடமும் பார்த்தான். தன் மீது அவர்கள் கொண்டிருக்கும் கரிசனமும் அன்பும் வாஸ்தவம் தான், ஆனால் குதிரைகளைத் தவிர எதுவுமே தெரியாத ஒருவன் இனி என்ன செய்ய இயலும்? வீட்டைச் சுற்றி வாக்கிங் போகும் சதைப்பிண்டமாய் தன்னைப் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. மனித உடலின் ஆற்றல்கள் என்றும் வற்றுவதில்லை. சில சமயங்களில், தடுக்க முடியாதவையாகத் தோன்றும் நோய்களைக் கூட நெருங்க விடாமற் செய்கின்ற வலிமை வாய்ந்தவை. அந்த ஆற்றலைத் தான் வீணாக்கிவிடக் கூடாதென உறுதியாய் இருந்தான்.


கொஞ்சம் எழுந்து நடக்க முடிந்த பின் பழைய முதலாளியிடமே மீண்டும் போய் நின்றான். “நான் கொஞ்ச நாள் ட்ரெய்னரா இருக்கேன் ஸார், சம்பளம் நீங்க பாத்து குடுங்க. ரேஸ விட்டா எனக்கு என்ன தெரியும்?..” அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் இப்போது அவனிருக்கும் உடல் நிலையில் எங்கனம் குதிரையையும், ஜாக்கியையும் அவனால் ட்ரெய்ன் பண்ண முடியுமென சங்கடப்பட்டார். அவனை கைவிடும் எண்ணமுமில்லை. ”ஒன்னு பண்ணலாம் அசோக் புதுசா கொஞ்சம் குதிரைங்க வாங்கி இருக்கேன். கொஞ்ச நாளைக்கு அதுங்க எல்லாத்தையும் ட்ரெய்ன் பண்ணு. உனக்கு உடம்பு இன்னும் கொஞ்சம் செட் ஆனதும் நம்ம கிட்ட இருக்க ஜாக்கிங்களையும் சேர்த்து ட்ரெய்ன் பண்ணலாம்.” உற்சாகமாகச் சொன்னர். அசோக் சந்தோசமாக சம்மதம் சொன்னான். தனக்கும் குதிரைகளுக்குமான உறவு அத்தனை எளிதல் முடியக்கூடியதல்ல. குதிரையின் ரோம வாசனையும், தும்மும் சத்தமும் அவனைச் சுற்றி நிறைந்து வர புதிய குதிரைகளின் மீதான ஆர்வம் அவனுக்குள் பரிபூர்ணமாய் நிரம்பியது.


சரியாக நூற்றி எண்பது நாட்களுக்குப்பின் பழைய மனிதனாய் முதலாளியின் பண்ணைக்கு ஜீப்பில் வந்து சேர்ந்தான். அவனோடு இன்னும் இரண்டு பேர் அந்தப் பண்ணையில் இருந்தாலும் அசோக்கின் மீதிருந்த மரியாதை காரணமாக அவர்கள் இவனை எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை. ”என்ன செய்யனும்னு நீங்க சொல்லுங்க தம்பி, நாங்க பாத்துக்கறோம்” என சொன்னவர்களுக்கு நன்றி சொன்னவன் குதிரைகளைப் பார்க்கப் போனான். எல்லாமே திருத்தமானவை, பந்தயத்திற்கென்றே வளர்க்கப்பட்ட திமிர் அதன் உடலெங்கும் பொங்கி ஒளி வீசியது. புதிய குதிரைகளோடு துவங்கிய அந்த நாள் அவனை புது மனிதனாய் மாற்றியிருந்தது. ப்ளூவின் நிறத்தில் அதைப் போலவே ஒரு குதிரை இந்தக் கூட்டத்திலும் இருந்தது. அன்று குதிரைகளை குளிக்க கூட்டிச் சென்ற நேரத்தில் இளமையான அதன் உருவம் நீரின் விளிம்பில் அசைவற்று நின்றிருப்பதை சந்தோசமாய்ப் பார்த்தான். சோப்பைக் கடிப்பதற்காக வரும் சிறிய மீன்களுக்கு மத்தியில், ஆற்றின் மணல் நிறைந்த அடிப்பரப்பில் பிரதிபலிக்கும் குதிரையின் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒருவேளை இது ‘ப்ளூ’வின் ஆன்மாவாகக் கூட இருக்கலாமெனத் தோன்றியது.


குதிரைகள் பந்தயத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த நாட்களில் அவன் ஆன்மா மட்டும் மைதானத்தையே சுற்றிக் கொண்டிருந்தது, அந்த மைதானத்தை விட்டு எங்கு செல்ல முடியும் அவனால்? பந்தயத்திற்காக மட்டுமே மைதானத்திற்குப் போனவனுக்கு வெறுமனே போய் நின்று வேடிக்கை பார்க்கும் விருப்பமில்லை. தான் பராமரிக்கும் குதிரைகளை சிரத்தையோடு பார்த்துக் கொண்டான். ஆஷாவுக்கு ஒதுக்கிய நேரங்களை விடவும் அதிகமான நேரம் அவன் பண்ணையில் ஒதுக்கியதில் முதலில் சில நாட்கள் அவளுக்கு வருத்தம் தான். பின்பு அவளுமே பழகிவிட்டாள். தன்னை முத்தமிட வரும்போது “குதிரக்காரா. உன்மேல முழுக்க குதிர வாசனதான், என் பக்கத்துல வராத. நீ மனுஷனா? குதிரையான்னு சதேகமா இருக்கு? என விளையாட்டாய் மல்லுக்கட்டுவாள்.

இன்னொருமுறை அவன் ரேஸ் கோர்ஸுக்குள் இறங்கி நின்ற நாளில் அவன் பராமரித்த குதிரை தனது முதல் வெற்றியின் மூலம் மீண்டும் எல்லோரையும் இவன் பெயரை உச்சரிக்க வைத்தது. யாரோ ஒருவரின் வெற்றியில் கூட தன் உழைப்பும் இருக்க முடியும் என்கிற நிறைவு அவனுக்கு. புதிய எதிர்காலத்தின் மீதான அவனின் கள்ளங்கபடமற்ற ஆர்வத்திற்குக் கிடைத்த வெற்றி, அந்த நாளைக் கொண்டாடினான். ஆஷா அவனுக்கு விருப்பமான ‘ஸ்காட்ச்’ வாங்கிக் கொடுத்திருந்தாள். முன்பெல்லாம் உணவுக்கட்டுப்பாடு கருதி மிகக் குறைவாய்க் குடித்தவன் இப்பொழுது தனது ஆவி குளிரக் குடிக்கிறான். மூன்றாவது ரவுண்ட் விஸ்கியை குடித்து முடித்தபின் தவிர்க்க முடியாமல் அவனுக்கு ‘ப்ளூ’வின் நினைவு வந்தது. குடிக்கிற நாளில் எல்லாம் அதன் நினைவு வரத் தவறுவதில்லை. தான் இல்லாத வெறுமையை எங்கனம் அந்த ஜீவன் கடந்திருக்கும்? தனது வெற்றிகள், சந்தோசங்கள், வலி, தனிமை எல்லாவற்றையும் கேட்க ஆஷா இருக்கிறாள். மனிதர்களால் தனது வாழ்க்கையைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாய் இருக்க முடியாது, அந்தக் குதிரை யாரிடம் சொல்லும்?

சில மாதங்கள் போனது. முதலாளிக்கு இப்பொழுது எல்லாமும் அவன் தான். குதிரைகள், ஜாக்கிகள், குதிரைகளின் மீது கட்டப்படும் பெட்டிங் என எல்லாவற்றையும் அவர் இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். ரேஸ்கோர்ஸில் சரிபாதி ஆட்கள் இவனை சின்ன முதலாளி என்றுதான் கூப்பிட்டார்கள். பெங்களூரில் அதிகமான ரேஸ்களில் வென்ற ஒரு ஜாக்கியை தனக்காக பேசிக் கூட்டி வரும்படி முதலாளி அவனை அனுப்பி வைத்தார். நீண்ட நாட்களுக்குப்பின் செல்லும் வெளியூர் பயணம் என்பதால் ஆஷாவுடன் கிளம்பிப் போனான். ரேஸுக்காக எத்தனையோ முறை வந்திருந்த அதே ஊரில் சாதாரணமாக வந்திருப்பதில் சின்னதொரு வருத்தம் அவனுக்கு. அறையில் இருக்கப் பிடிக்கவில்லை. அவன் அவஸ்தையைப் புரிந்து கொண்ட ஆஷா சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றுக்குப் கூட்டிப் போனாள். வாழ்க்கையில் அவன் பார்க்கும் முதல் சர்க்கஸ் நிகழ்ச்சி. முதல் சில வித்தைகள் முடிந்து திடீரென ஒரு குதிரை மையமாய் வந்து நிற்க அவனுக்கு அந்தக் குதிரையை எங்கோ பார்த்திருக்கிறோமே என பொறி தட்டியது. அது ப்ளூ மவுண்டைன் என்பதைக் கண்டு கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. அடர்த்தியான பிடரி மயிர்கள் கத்தரிக்கப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டிருந்தது. முன்னிலும் கொஞ்சம் பருத்திருந்தது, ஓடுவதற்கான அவசியம் இல்லாது போனதால் ஏற்ப்பட்ட பெருக்கமாக இருக்கலாம். ஆனாலும் இப்போது அதற்கிருந்த லட்சணம் வேறு எந்தக் குதிரையிடமும் காணமுடியாதது. அது வால்ட்ஸ் நடனம் ஆடியபோது அதன் பருத்த உடலின் எல்லா அங்கங்களும் – கால்களும் காதுகளும், மூஞ்சியும், முதுகும் எல்லாம் அதற்குக் கீழ்ப் படிந்தன. அதற்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ, ஏதேனும் குழப்பம் ஏற்பட்டுவிடுமோ என்று ஓயாமல் பயந்து கொண்டிருந்தான். ஒன்றும் நேரவில்லை. தன் குதிரையை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சியடைவதா வருத்தமடைவதா என்றே அவனுக்குத் தெரியவில்லை. கடைசியில் மகிழ்ச்சியடைந்தவன்போல் காட்டிக்கொண்டதன் மூலம் தனது வருத்தத்தை அவனால் மறைத்துக் கொள்ள முடிந்தது. அது நடனம் ஆடி முடிக்க, ஜனங்கள் கைதட்டிப் பாராட்டினார்கள். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அது மறுபடி நடனம் ஆடிக் காட்டியது. பிறகு அரங்கின் நடுவில் நின்று எல்லாப் புறங்களிலும் திரும்பிப் பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்தது. மறுபடியும் உற்சாகமாக கைதட்டினார்கள் ஜனங்கள். மீண்டும் ஆடுமாறு கோரினார்கள். ஆனால் அது மேலும் நடனமாட விரும்பவில்லை. பார்வையாளர்களுக்கு மட்டுமீறி இடங்கொடுக்க அது தயாராயில்லை. இசைக்குழுவிற்குத் தலை வணங்கிற்று. இசைக்குழுவினர் அதற்கு பதில் வணக்கம் தெரிவித்தனர். இயக்குநன் அரங்கை விட்டுப் போகும்படி அதற்குத் தலையசைப்பால் சைகை செய்தான். பின்பு புன்னகையுடன் அதன் பின்னால் நடந்தான். அசோக் சத்தமாக அதைக் கூப்பிட முயன்றான். மக்களின் ஆராவாரத்தில் நிச்சயமாய்க் அதற்குக் கேட்க வாய்ப்பில்லை. “ப்ளூ…” அவன் குரல் சின்ன பிசிறாகக் கேட்டிருக்கலாம், சில நொடிகள் அது அவனைத் திரும்பி அவனைப் பார்த்தது. ஆனாலும் அவன் யாரென அடையாளம் தெரியாதது போல் தன் பாதையில் திரும்பி நடந்தது. அவனுக்கு முன்பாகவும் பின்பாகவும் நிறைய பேர் அதனைப் பராமரித்திருப்பார்கள், எப்படி எல்லோரையும் நினைவில் வைத்திருக்க முடியும்? தன் புதிய எசமானனின் கட்டளைக்குக் கொஞ்சமும் பிசிறில்லாமல் கீழ்பணிந்து நடந்த அதன் அழகை இப்பொழுதும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான். இன்னொரு முறை கூப்பிடலாமா என யோசித்து அம்முயற்சியைக் கைவிட்டவன் ஆஷாவோடு அங்கிருந்து வேக வேகமாய் வெளியேறிவிட்டான்.


( 2017 ம் வருடம் சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்ற கதை.)

532 views

Recent Posts

See All

Fake

bottom of page