நாவல் எழுதுவதிலிருக்கும் சவாலும் சுவாரஸ்யமும் அதன் முதல் பகுதியையும் இறுதிப் பகுதியையும் எழுதுவதில்தான் இருக்கிறது. எனது இந்த சிறிய வாசிப்பில் மிகச் சிறந்த நாவல்களாக அடையாளப்படுத்தப்படுபவை அத்தனையிலும் அதன் முதல் மற்றும் இறுதிப்பகுதி தனித்தன்மை மிக்கதாக இருப்பதாகவே இப்பொழுது புரிந்துகொள்கிறேன். ஒரு கதையின் நுழைவாயில் என்பது புதிய வாழ்வை ஒரு வாசகன் தெரிந்து கொள்வதற்கான ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அந்த நிகழ்வின் அபூர்வமான தருணத்தை கச்சிதமாக எழுதவாவது முயற்சித்தல் அவசியம்.
க்ளாசிக் கால ரஷ்ய நாவல்கள் கதையைத் துவங்குவதற்கு முன்னால் நமக்கு பெரும் பீடிகையுடன் அந்த ஊர் மற்றும் கதாப்பாத்திரங்களின் பின்புலங்களை விலாவாரியாகத் தருகின்றன. எந்தவிதமான திருப்பங்களோ அதிர்ச்சிகளோ இல்லாமல் குளிருக்கு ஒடுங்கியிருக்கும் மனிதனின் அமைதியிலேயே நகரும். செவ்வியல் பிரதிகள் எல்லாவற்றிலும் இந்தத் தன்மையை நாம் காணமுடியும். ஆனால் சமகால கதை சொல்லல் முறையில் இந்த வியாக்கியானங்கள் தேவையற்றதாய் ஆகிவிட்டன. கதையைத் துவங்குவதிலும் சரி, முடிப்பதிலும் சரி... கச்சிதத்தன்மையை எல்லோரும் எதிர்பார்க்கும் சூழலில் தேவைக்கு அதிகமாய் ஒரு பாராவை எழுதுவது கூட வீண் செயல்...
கதையைக் கண்டடைவது தானாக நிகழும் ஒரு பயணம். எல்லாவற்றையும் முடிவு செய்துகொண்டு நாம் அமர முடியாது... சில நிகழ்வுகள், காட்சிகள் இவை மட்டுமே மனதிலிருக்கும். இந்தக் காட்சிகளை எவ்வாறு நாம் விரித்தெடுத்துச் செல்கிறோம் என்பதில்தான் எழுத்தாளனின் ஆளுமை வெளிப்படுகிறது. எல்லாவற்றையும் ப்ளூப்ரிண்ட் போட்டு வைத்து மொத்த நாவலையும் எழுதுகிற சில எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் காலத்தால் மட்டுமல்லாமல் தங்களாலேயே மறக்கப்படுவார்கள். எழுத்தாளனுக்கு பயணங்களும் ஆய்வும் தனது கதையுலகிற்கான துணை மட்டுந்தான். என்னளவில் நாவலின் துவக்கமும் முடிவும் சரியாக அமைந்த எனது நாவல்களில் எனக்கு விருப்பமானவை என்றால் கானகன், ரூஹ், கொமோரா இவைதான்.... இந்த நாவல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமானவை என்றாலும் கதை சொல்லலின் அடிப்படையிலும் கதை கட்டமைக்கப்பட்ட விதத்திலும் இவை கச்சிதமானவை என்பது என் அபிப்பிராயம்.
எல்லோரும் குறிப்பிடுவதுபோல் கானகனில் ஒரு திரைக்கதைத் தன்மை இருப்பதை நானே பல சமயங்களில் ஆமோதித்திருக்கிறேன். ஒரு வேட்டையில் துவங்கி அதே போலொரு வேட்டையில் முடியும் இந்த உத்தியானது பெரும்பாலான திரைக்கதைகளில் பயன்படுத்தப்படும் ஒன்று. இந்த ஒற்றுமையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கானகனின் துவக்கம் சிறப்பானதொன்றாகவே இப்பொழுது தோன்றுகிறது. எனக்கு அந்த நாவலின் முடிவுப்பகுதி நிறைவைத் தரவில்லை. ஆனால் ரூஹும் கொமோராவும் அப்படியல்ல... இரண்டிலுமே கதை துவங்கும் விதமமும் முடியும் விதமும் கச்சிதமானவை. நான் எந்தத் திட்டமிடல்களும் செய்யாமல் கதையின் போக்கில் தானே நிகழ்ந்தவை. அதிலும் குறிப்பாக ரூஹ் எழுதிய நாட்களில் இருந்த கொந்தளிப்புகள் அவ்வளவும் அந்த நாவலை எழுதி முடித்தபின் பெரும் ஆறுதலாக மாறியது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் கடும் வெக்கையான அந்த இரவில் கடைசி பக்கங்களை எழுதி முடித்தபின் அதனை திரும்பவும் ஒருமுறை கூட நான் வாசித்திருக்கவில்லை. கிண்டில் பதிப்பிலிருந்து அச்சிற்கு செல்லும் போதுகூட கார்கியும் எனது நண்பர்கள் சிலரும் மட்டுமே அதனை வாசித்திருந்தனர்.
நீண்ட நாட்களுக்குப்பின் நேற்றிரவு உறக்கமில்லாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன் ரூஹின் இறுதிப் பகுதியை எடுத்து வாசித்தேன்.... மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி எழுதியவன் மட்டுமே உணர முடிகிற மகிழ்ச்சி.... ஒருவன் தனது அகவெளியின் முழுமையைப் புரிந்துகொள்வதால் உருவாகும் மகிழ்ச்சி...
அந்த இறுதிப் பகுதி...
கடல்.
கடலுக்குள் கலந்த பிறகு
உபநதிகளைப் பற்றி
ஒரு வார்த்தையும் தேவையில்லை.
கடலை ஆச்சர்யமாகப் பார்க்கிறவர்கள் ஏதோவொரு வகையில் அற்புதங்களை
நம்புகிறவர்களாய் இருக்கிறார்கள். கடலென்பது அற்புதங்களின் நிதர்சனம். எல்லா சாகசகாரர்களுக்குள்ளும் கடலோடி ஒருவன் உறங்கியபடியே இருக்கிறான். கரையேற விரும்பாத நீண்ட கடல் பயணங்கள் அனேகமானோருக்குப் பால்யத்தின்
பெருங்கனவாய் இருக்கிறது. அவன் பல்லாயிர மனிதர்களின் மரணங்களைப் பார்த்துப்பழகிய நாடோடி. உப்பு நிலத்தின் வறண்ட உடலில் மிகுந்திருக்கும் வாழ்விற்கான நம்பிக்கைகளை நிலத்தில் விதைப்பவன். நாடோடிகள் விதைப்பதோடு சரி, அறுப்பதில்லை. விளைச்சல் குறித்து அக்கறை கொள்வதில்லை.
ஏர்வாடியின் மாலைநேர வெயில் ஒரு பேயைப் போல் மனிதர்களின் முதுகில் தாக்கியது. ஊரிலிருந்து சற்று தூரத்தில் சிதிலமடைந்த கட்டிடங்களினூடே கொஞ்சம் குடிசைகளில் ஒன்றின் வாசலில் நின்றிருந்த அவனின் கண்ணெதிரில் பரந்து விரிந்த கடல். எது தன் அசலான துவக்கம், எது தன் அசலான முடிவு, எது தன் அசல் என எந்தக் கேள்விகளும் இல்லாமல் கடல் பார்த்து நின்ற அந்த மனிதனின் வயது இன்னதென்று ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. பக்கீர் என்றும் சுல்தானென்றும் கீழக்கரை, ஏர்வாடி வாழ் மக்கள் வெவ்வேறாக அழைத்தாலும் அவனொரு கடல். ஏதோவொரு காலகட்டத்தில் எங்கிருந்தோ துவங்கி இந்த கரையை வந்தடைந்திருக்கும் கடல்.
குடிசைக்குள் படுத்திருந்த நோய்வாய்ப்பட்ட முதியவர் ஒருவர் "உணமையான ஊர் கடலுக்குள் உறங்கிட்டு இருக்கு" என்று சொன்னதை அமைதியாய் ஆமோதித்தான். அசாத்தியமான அந்நிலத்தின் மெளனம் மிச்சமிருக்கும் சிறுசிறு நினைவுகளையும் அவனிலிருந்து அழித்தது. காற்றை விடவும் அவனுடல் லேசாக, மெல்ல கடலை நோக்கி நடந்தான். தூரத்தில் கரையில் மனநலம் பிசகிய மனிதனொருவன் கடலின் இன்னொரு கரைக்குக் கேட்கும் மூர்க்கத்தோடு தென் திசை நோக்கிச் சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தான். ‘நான் திரும்பி வந்துருவேன், நான் திரும்பி வந்துருவேன்’, என அலறின. அவன் குரல் எதிர்க்கரையில் இருக்கும் எவனோ ஒருவனுக்கு நிச்சயம் கேட்கக் கூடும். வெறி கொண்ட நாய்கள் கடற்கரையில் மிஞ்சி வெயிலில் உலர்ந்து போன மீன்களையும் நண்டுகளையும் மண்ணுக்குள் தலையை விட்டுத் துழாவிக் கொண்டிருந்தன. எப்போதோ திசை மாறி பறந்த பறவைகள் எல்லாம் பெருங்கூட்டமாய் இவன் நின்ற திசை நோக்கி பறந்து வந்தன. பகலின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து அஸ்தமனம் துவங்கியது.
பல காலங்களாய் ஒரேபோலிருக்கும் கடலும் மணலும் ஒருபோதும் இல்லாத புதிய மாற்றத்தைக் கண்கூடாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மழை பெய்தது, அந்த நாளின் பகல் நேர வெக்கையைப் போக்கி ஆசிர்வதிக்கும் இதமான மழை. எல்லா ஜன்னல்களையும் சாத்தி வைத்த ஆகாயத்தை மழைத் துளிகளினூடாய் ஒருவரும் பார்க்க முடியவில்லை. மழையும் கடலும் சங்கமிக்கும் இடைவெளியில் நின்று இரு கைகளையும் விரித்து ஆகாயத்தைப் பார்த்தான். அவன் விரலின் அழிந்து போன ஒவ்வொரு ரேகையிலும் காலம் புதைத்து வைத்திருந்த வினோத நினைவுகள் நீரில் கரைந்து ஓடின. அவன் மழையும் கடலுமாய் மாறத் துவங்கினான். தன் வழித்துணைக்கு இத்தனை காலங்களில் ஒருவரையும் எதிர்பார்த்திராத அவனுக்கு நீர் என்பது அற்புதம். அதனால்தான் அவன் நீராய் இருக்கிறான். அற்புதமாய் இருக்கிறான். அவன் இப்பொழுது மாபெரும் கடலின் துளி. அந்த துளியே கடல். கடலை நோக்கி அவன் கால்கள் நகர்ந்தன. அவனுடலில் இருந்து அந்த பிரதேசத்தை மொத்தமாக ஸ்வீகரித்துக் கொள்ளும் ஆவேசத்தோடு பச்சை நிற ஒளி கசியத் துவங்கியது. மாலை நேரத் தொழுகைக்கான பாங்கொலி பள்ளிவாசலில் இருந்து எதிரொலித்த நிமிடத்தில் அவன் கழுத்து வரையிலும் கடல் ஆக்ரமித்திருந்தது. அவனுடல் இப்பொழுது ஒளியாய் மாறியிருந்தது.
கடல் நிறம் மாறிப் பச்சையாய் பூக்க, வலுத்துப் பெய்த மழை நீர்த்துளிகளும் பச்சை நிறத்தில் தெறிக்க அந்த ஒளி கடலோடு கலந்து கடலானது. கடல் ஒளியானது.
இனி அவன் தாகம் கொண்டவர்கள் அருந்தும் நீராக, பசி கொண்டவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவாக, காற்றைப் பிரசவிக்கும் மரமாக, இருளில் ஒளி தரும் வெளிச்சமாக இந்தப் பூமியோடு என்றென்றைக்குமிருப்பான். வசந்தகாலத்தில் பூக்கத் துவங்கும் செடிகளில் அவன் உதிரத்தின் ஒவ்வொரு துளிகளும் வசீகரமான மலர்களாய்ப் பூக்கும்.