ஒரு தேசம் எத்தனை ஆரோக்கியமானதென்பதை அந்த தேசத்தினருக்கு இருக்கும் வரலாற்று உணர்ச்சியிலிருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடியும். தமது அடையாளங்களையும், கலாச்சாரங்களையும் பொருட்படுத்தி கொண்டாடத் தவறும் சமூகத்தினர் தங்களது அடையாளங்களை முற்றாக இழக்கத் துவங்கிவிடுகிறார்கள். தனது கடந்த காலத்தின் வரலாற்றை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் கடந்து செல்லும் சமூகத்திற்கு எதிர்காலமும் ஆரோக்கியமாய் இருக்கப் போவதில்லை.
பனி சூழ்ந்த ஷில்லோங்கின் குளிரில் டான் பாஸ்கோ அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய இந்த மாலையில் வடகிழக்கு இந்திய மக்களுக்கு தங்களது அடையாளங்களின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் இருக்கும் பிடிப்பு ஆச்சர்யமூட்டுகிறது. வடகிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் உள்ள முக்கிய பழங்குடிகளின் வாழ்வைப் புரிந்து கொள்வதற்கான அத்தனை சிறப்புகளையும் கொண்டிருக்கிறது அந்த அருங்காட்சியகம். ஒரு அரசாங்கம் செய்திருக்க வேண்டிய இந்த காரியத்தை மிஷனிரியினர் செய்திருக்கிறார்கள். இதேவேளையில் பரந்து விரிந்த தமிழகத்திலிருக்கும் ஏராளமான பழங்குடிகளைப் பற்றி அறிந்துகொள்ள இதுபோலொரு அருங்காட்சியகம் இருக்கிறதா என்ற கேள்வி எனக்கு எழுகிறது? வரலாற்றை நாம் ஏன் பொருட்படுத்துவதில்லை?
தமிழகத்தில் 50,000க்கும் அதிகமான கோவில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. வெவ்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த பழமையான அந்தக் கோவில்கள் சரியான பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடக்கின்றன. யாராலும் கண்டுகொள்ளப் படாமல் புதர் மண்டிக் கிடக்கும் இந்தக் கோவில்களில் ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் உள்ளன. இந்தக் கலை பொக்கிஷங்களின் மதிப்பையும் மாண்பையும் தெரிந்துகொண்டு இதனை கடத்தி விற்பதற்கென சிலக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலும் கலைப் பொருட்கள் திருட்டு பெரும் வணிகமாக இருந்துவருகிறது. பணக்கார நாடுகளின் அருங்காட்சியகங்களை அலங்கரித்து வரும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொக்கிஷங்கள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டவைதான். பிரிட்டன், ஃபிரான்ஸ், ஸ்பெயின் மாதிரியான ஐரோப்பிய நாடுகள் தங்களது காலனி நாடுகளிலிருந்து களவாடிய கலைப் பொருட்கள் ஏராளம். அவை ஒருபோதும் சொந்த நாடுகளுக்குத் திரும்பக் கொடுக்கப்படவில்லை. கலைப்பொருள் சேகரிப்பதென்பது மேற்குலக சீமான்களுக்கு காஸ்ட்லியான பொழுதுபோக்கு. தங்களது வீட்டின் வரவேற்பரையில் ஆயிரம் இரண்டாயிரம் வருடப் பழமையான சிலைகளையும், வாள்களையும், சுடுமண் பொம்மைகளையும் காட்சிப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் தங்களுக்கென தனித்த மதிப்பைப் பெறுவதாக உணர்கிறார்கள். இந்த எண்ணம் தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல நாடுகளைச் சேர்ந்த அருங்காட்சியகங்களுக்கும் உண்டு. அதனால்தான் பெரும் தொகை கொடுத்து இதுபோன்ற கலைப்பொருட்களை வாங்கிச் சேகரித்து தங்களது அருங்காட்சியகத்தில் வைக்கிறார்கள். இவ்வாறு பழமையான பொருட்களை வாங்குவதற்குண்டான சர்வதேச சட்டவிதிமுறைகளைக்கூட பல சமயங்களில் அவர்கள் சரிவரக் கடைபிடிப்பதில்லை. நம் கற்பனைக்கு எட்டாத வியாபாரமும், மர்மங்களும் நிறைந்த இந்த கருப்பு உலகின் குரூரப் பக்கங்களைத் தேடிச்சென்று அந்த மர்மங்களுக்குள் தொலைந்துபோன நமது பாரம்பர்யச் சின்னங்களை மீட்டெடுப்பதற்கான சாகசப் பயணம்தான் எஸ்.விஜயகுமாருடையது.
விருதாச்சலத்திற்கு அருகில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவருக்கு வரலாற்றின் மீதும் பண்பாட்டுச் சின்னங்களின் மீதும் சிறுவயதிலிருந்தே அளப்பெரிய காதலுண்டு. சென்னையில் கல்வியை முடித்தவர் கடந்த பதினைந்து வருடங்களாக சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்ததன் மூலம் வரலாற்றின் மீதான ஆர்வம் பிறக்க, கலைபொருட்கள் குறித்து வாசிக்கத் துவங்குகிறார். சிங்கப்பூரின் ஒரு பிரபல ஷிப்பிங் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலிருந்தபடியே தனக்கிருந்த கலையார்வத்தின் காரணமாய் நமது பாரம்பர்யச் சின்னங்களை ஆவணப்படுத்தத் துவங்குகிறார். 2007 ம் வருடம் poetry in stone என்றொரு வலைதளத்தைத் துவங்கி அதில் நமது கோவில்களில் இருக்கும் சிலைகளைக் குறித்தும் அவற்றின் வரலாறு குறித்தும் எழுதுகிறார். இந்தப் பதிவுகள் அவருக்கு பெரும் கவனிப்பைக் கொடுத்ததோடு அக்கறையான நண்பர்களையும் உருவாக்கித் தந்தது. அவரைப் போலவே பண்பாட்டின் மீது ஆர்வங் கொண்ட வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் இளைஞர்கள் அவரோடு இணைந்து பணியாற்ற முன்வருகிறார்கள். தனது வலைதளத்தில் ஆவணப்படுத்த வேண்டி வெவ்வேறு அருங்காட்சியகங்களுக்குச் சென்று வரத் துவங்குவதோடு ஏராளமான நூல்களையும் வாசிக்கத் துவங்குகிறார். இந்நிலையில்தான் தமிழகக் கோவில்களில் இருக்கும் சிலைகள் குறித்து முழுமையான ஆவணங்கள் எதுவும் நமது அரசிடம் இல்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் அவருக்குத் தெரிய வருகிறது. சின்னஞ்சிறிய கிராமங்களில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த கோவில்களைக் குறித்து எவரும் அக்கறைப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை. ஆனால் பாண்டிச்சேரியிலிருக்கும் ஐ.எஃப்.பி ஆவணக் காப்பகம் தமிழக் கோவில்களை முழுமையாக ஆவணப்படுத்தியிருப்பது தெரியவர, அந்த ஆவணக் காப்பகத்தின் உதவியோடு தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்கிறார்.
தமிழகத்தில் சிலைத் திருட்டு வழக்குகள் குறித்த செய்திகள் பரவலாக அதிகரிக்கத் துவங்கியிருந்த நேரத்தில் களவாடப்பட்ட சிலைகள் குறித்த விவரங்களை எல்லாம் சேகரித்து எழுதத் துவங்குகிறார். தமிழக சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு மட்டுமில்லாமல் அமெரிக்காவில் இந்தக் கடத்தலைக் கட்டுப்படுத்தும் காவல்துறையின் முக்கிய அதிகாரியோடும் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றத் துவங்குகிறார். முன்பே குறிப்பிட்டதுபோல் பல கோவில்களிலிருக்கும் சிலைகள் குறித்த எந்த பதிவும் இல்லாத சூழலில் அவை எங்கிருந்து யாரால் எப்படிக் கடத்தப்பட்டு எங்கு விற்கப்பட்டிருக்கும் என்கிற வலைப்பின்னலை கண்டறிவது சுலபமான காரியமல்ல. பழைய ஆவணங்கள், வெவ்வேறு அருங்காட்சியங்களின் புகைப்படங்கள் இவற்றையெல்லாம் தேடி எடுத்து ஆய்வுசெயதிருக்கிறார். இவரது தொடர் முயற்சியின் காரணமாகத்தான் சுத்தமல்லி மற்றும் ஸ்ரீபுரந்தன் கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு முக்கியச் சிலைகள் இந்தியாவிற்கு மீட்டுவரப்பட்டன. இந்தச் சிலைகள்தான் அதன்பிறகு ஏராளமான சிலைகள் மீட்கப்படுவதற்கான துவக்கமாகவும் அமைந்தன.
2014 ம் வருடம் India pride project என்ற அமைப்பைத் தனது நண்பர்களோடு ஒருங்கிணைந்து துவங்கியவர் இன்றளவும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருவதற்கான வேலைகளைத் தொடர்ந்து செய்துவருகிறார். இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் எதுவும் பெரும்பாலும் மீட்கப்பட்டதில்லை என்கிற துயரவரலாறு நமக்கு நீண்டகாலமாய் இருக்கிறது. 1980 ம் வருடம் தமிழகத்தில் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு அமைக்கப்பட்ட பிறகுதான் சிலைத் திருட்டுகள் ஓரளவு குறைந்திருக்கின்றன. 1970 ம் ஆண்டிற்கு பிற்பாடு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கு மட்டுந்தான் நமது சட்ட அமைப்பு வழி செய்துள்ளது, அதற்கு முந்தைய காலத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க எந்த வழிவகைகளும் இல்லை. பிரிட்டிஷாரின் காலத்தில் ஏராளமான கலைப் பொக்கிஷங்களோடு நமது கோவில் சிலைகளும் பெருமளவில் திருடப்பட்டன. குறிப்பாக 1930 ம் வருடங்களில் இருந்து இந்த சிலைத் திருட்டுகள் பெருமளவில் நடைபெற்று வருகின்றன. வீட்டிலிருக்கும் ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்டால் புண்ணியம் என்ற அளவிலேயே வரலாறு அக்கறை கொண்ட நமக்கு பாழடைந்த கோவில்களில் அனாமத்தாய் இருக்கும் சிலைகளின் மீது கவனமோ அக்கறையோ இருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். மக்களைப் போலவே அரசும் அசட்டையாக இருந்ததால்தான் சிலைகளைத் திருடும் கும்பல்களின் எண்ணிக்கை காலப்போக்கில் பெருமளவில் அதிகரிக்கத் துவங்கிவிட்டது.
சுற்றுலாப் பயணிகளைப் போல் வரும் தரகர்கள் கோவில்களில் இருக்கும் சிலைகளை படமெடுத்துச் சென்று அவற்றைக் குறித்து ஆய்வு செய்து அதன் மதிப்பை உறுதிசெய்தபின் உள்ளூரிலிருக்கும் கடத்தல் கும்பல்களின் உதவியை நாடுகிறார்கள். கடத்த வேண்டிய சிலைகளைப் போல் போலியான சிலைகளை உருவாக்கி அதற்கான ஆவணங்களைப் பெற்றுவிடுகின்றனர். போலி சிலைகளை கோவில்களில் வைத்துவிட்டு நிஜசிலைகளை கப்பல்கள் மூலமாக வெளிநாடுகளுக்குக் கடத்தி விடுகிறார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான பெரிய சிலைகள் கடத்தப்படுகின்றன. அதில் ஒரு பத்தோ பதினைந்தோ சிலைகள் குறித்துதான் புகார்கள் வருகின்றன. பல சமயங்களில் சிலைகள் திருடப்பட்டதைத் தெரிந்து கொள்ளவே உள்ளூர்க்காரர்களுக்கும் அரசாங்கத்திற்கும் பலமாதங்கள் ஆகிவிடுகின்றன.
சர்வதேச அளவில் சிலைத் திருட்டின் முக்கியப் புள்ளியான சுபாஷ் கபூரையும் அவரது கூட்டாளிகளையும் அடையாளங் கண்டதோடு அவர்கள் கைதாக முக்கியக் காரணமாய் இருந்தது விஜயகுமாரும் அவரது நண்பர்களும்தான். 2012 ம் வருடம் ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டில் வைத்து சுபாஷ் கபூர் கைதுசெய்யப்பட்ட பின் நியூயார்க்கிலிருக்கும் அவரது வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டனர். 900 கோடி ரூபாய்க்கும் அதிகமான கலைப் பொருட்களை அவரது வீட்டிலிருந்து கைப்பற்றியதோடு பல நூறு கோடி ரூபாய்க்கு உலகின் வெவ்வேறு அருங்காட்சியகங்களுக்கு அவர் கலைப் பொருட்களை விற்றதற்கான ஆவணங்களும் கிடைத்தன.
1971 ம் வருடம் தஞ்சை நடராஜர் சிலை புன்னைநல்லூர் கோவிலிலிருந்து காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டது வேறு சிலையைக் கொடுத்து அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அந்தச் சிலையின் புகைப்படத்தை வைத்து கோவிலில் இருப்பது உண்மையான சிலையல்ல, கடத்தப்பட்ட சிலை நியூயார்க்கின் ஒரு அருகாட்சியகத்திலிருக்கிறது என்பதை விஜயகுமார் உறுதிசெய்கிறார். இதோடு அமெரிக்காவில் மட்டுமே 250 க்கும் மேற்பட்ட கடத்தப்பட்ட சிலைகள் வெவ்வேறு இடங்களில் இருப்பதை உறுதிசெய்து அமெரிக்க காவல்துறைக்குத் தகவல் கொடுக்கிறார். புன்னைநல்லூர் நடராஜர் சிலை உட்பட 57 சிலைகள் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளன.
இணையத்தின் வழியாக ஒரு சாதாரண மனிதன் எத்தனை பெரியக் காரியத்தைச் சாதித்திருக்கிறார் என்பதை நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோவில்களின் நிலை, அங்கிருக்கும் சிலைகளின் பராமரிப்பு இவற்றையெல்லாம் மிகுந்த சிரத்தையோடு நாம் கவனிக்கவேண்டியது அவசியம். இந்து அறநிலையத்துறையிடமிருக்கும் கோவில்களைத் தனியாருக்குக் கொடுக்க வேண்டுமென்கிற கோஷங்கள் அதிகரிப்பதை நாம் சந்தேகம் கொள்ளவேண்டும். சுத்தமல்லி கோவிலிலிருந்து திருடப்பட்ட சிலை மட்டுமே 8.4 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது என்றால் தமிழ்நாட்டிலிருக்கும் 50000 கோவில்களில் இருக்கும் சிலைகளின் மதிப்பென்ன? கோவில்களை தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கச் சொல்கிறவர்களின் அக்கறை எதன்பொருட்டு என்பதையும் நாம் கேள்வி கேட்க வேண்டும்.
சிலைகள் மட்டுமல்ல, கலைபொருட்கள், ஓவியங்கள், ஓலைச்சுவடிகளென ஏராளமாய் நம்மிடமிருந்து களவாடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தஞ்சாவூரில் திருடப்பட்டு ஜெர்மனியில் பதிணெட்டு கோடி ரூபாய்க்கு சமீபத்தில் விற்கப்பட்ட ஓலைச்சுவடிகளை மறக்கமுடியுமா? ஓலைச்சுவடிகளைச் சேகரிக்கிறோம், ஆவணப்படுத்துகிறோம் என்று வருகிற தனியார் அமைப்புகளையும் கண்கானிக்க வேண்டியது அவசியம்.