top of page
Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

நாடக நிலத்திலிருந்து ஓர் தொல்குடி பாடகன் – ச. முருகபூபதி




தமிழின் நவீன நாடக உலகில் தனித்த அடையாளங்களுடன் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருபவர் ச.முருகபூபதி. சடங்குகளையும் உடல் மொழிகளையும் மரபின் அடையாளங்களோடு நிகழ்த்திக் காட்டும் இவரது நாடகங்கள் பார்வையாளனை அதிர்ச்சிக்குள்ளாக்குபவை. கலை குறித்து ஒருவருக்கு இருக்கும் புரிதல்களுக்கு அப்பாற்பட்டது பூபதியின் நாடகங்கள்.

தமிழின் தலைசிறந்த நாடக ஆளுமையான மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் மகள் வழிப் பேரனான ச.முருகபூபதியின் குடும்பம் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படும் எழுத்தாளர்களையும் கொண்டது. ச.தமிழ்செலவன், கோணங்கி என்னும் இருபெரும் எழுத்தாளுமைகளுக்கு உடன்பிறந்த தம்பி ச.முருகபூபதி. கோவில்பட்டி இந்திரா நகரில் உள்ள அவர்களின் வீடு எப்போதும் கலைஞர்களால் நிரம்பியிருக்கும். எழுத்தாளர்கள், ஓவியர்கள், நாடகக் கலைஞர்களென அங்கு வந்து செல்லாதவர்கள் இல்லை. உரையாடல்களால் நிரம்பிய அந்தவீடு பொருளியல் வாழ்வை பொருட்படுத்தாத எளிய கலைஞர்களுக்கான புகழிடம். எனது பதிணெட்டாவது வயதில் கோணங்கியும் அவரது எழுத்துகளும் அறிமுகமாயின. கோவில்பட்டியில் உள்ள இந்திரா நகர் வீடு சில வருடங்கள் எனக்கும் புகழிடமாய் இருந்ததுண்டு.

நடிகர், நாடக இயக்குநர், இசைக் கலைஞர், எழுத்தாளரென முருகபூபதிக்கு ஏராளமான முகங்களுண்டு. நாம் எதையெல்லாம் கைவிட்டோமோ அவற்றின் குரலாக ஒலிப்பதுதான் பூபதியின் நாடகங்களும் எழுத்துகளும். அறிவின் அகங்காரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு பைத்திய நிலையின் தீவிரத்தைப் பேசவல்லவை அவரது நாடகங்கள். பைத்தியங்கள், நாடோடிகள், தெருப்பாடகர்கள், சபிக்கப்பட்டவர்கள், சொந்த நிலத்தில் வாழமுடியாமல் துரத்தப்பட்டவர்களின் ஓலங்களே அவரது நாடகங்கள். பூமி எல்லா உயிர்களுக்குமானதென்பதை நாம் திரும்ப திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அறிவியலின் அகங்காரம் மனிதனை பேராசை மிக்கவனாகவும், எல்லாவற்றையும் சுரண்டக் கூடியவனாகவும் மாற்றிவிட்டிருக்கிறது. அந்த சுரண்டலுக்கும் அகங்காரத்திற்கும் எதிராக உரத்துப் பேச நாடோடிகளாலும் பைத்தியங்களாலும் மட்டுமே முடியும்.

சடங்குகளை மறத்தலென்பது நமது அடையாளங்களிலிருந்து நம்மைத் துண்டித்துக் கொள்வதைப் போல துயரமானது. ஒரு இனத்தின் மொழி சடங்கின் வழியாகத்தான் உயிர்ப்போடு நிலைத்திருக்கிறது. கதைப்பாடல்களின் வழியாகத்தான் மகத்தான வரலாற்றை நாம் இன்றைக்கும் நினைவில் கொண்டுள்ளோம். பின்லாந்தியர்கள் தங்களின் விடுதலைப் போராட்டத்தின் பெரும் அடையாளமாகக் கொண்ட கலேவலா என்னும் வீரகாவியம் அவர்களது வாய்மொழி இலக்கியமே. செவ்வியல் கலைகளுக்கான புழங்கு வெளி ஒருபோதும் வெகுசன மக்கள் நெருங்குவதற்கானதாய் இல்லை, மாறாக நாட்டார் கலைகள் அந்த மக்களுடனேயே இருக்கிறது, பல சமயங்களில் அவர்களும் அதில் ஒரு பாத்திரமாய் மாறிவிடுகிறார்கள். இதனாலேயே மக்களுக்கான கலை வடிவங்களை உருவாக்க நினைப்பவர்கள் நாட்டார் கலைஞகளிலிருந்து தங்களை உருவாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். “அரங்கின் பகட்டற்ற தன்மையை ஏற்றுக்கொள்வதானது ( சார்புத் தன்மைகளை எல்லாம் உரித்தகற்றுவது. அதற்கு அடிப்படையானதாக இல்லாதபோது) அரங்க ஊடகத்தின் முதுகெலும்பை மட்டுமல்லாமல் கலை வடிவத்தின் மிக இயல்பானதாய் அமைந்த, மிக உள்ளார்ந்த வாய்ப்பு வளங்களையும் திரைநீக்கி வெளிப்படுத்துகிறது என்கிறார் குரோட்டோவ்ஸ்கி. பூபதியின் நாடகங்கள் இந்த பகட்டிலிருந்து துண்டித்துக் கொண்டவையய் இருக்கின்றன.




1999 ம் வருடம் கோவில்பட்டியில் துவங்கப்பட்ட மணல்மகுடி நாடக் குழு இன்று கண்டிருக்கும் வளர்ச்சியும், தமிழ் அறிவுசார் சமூகத்தில் நிகழ்த்திய உரையாடல்களும் அசாதாரணமானவை. வனத்தாதி, கூந்தல் நகரம், செம்மூதாய், குற்றம் பற்றிய உடல், மிருக விதூஷகம், சூர்ப்பணங்கு, குகைமரவாசிகள் என அவரது நாடகங்கள் ஒவ்வொன்றுமே பெரும் சலங்களை உருவாக்கியவை. ஏராளமான சர்வதேச கலைவிழாக்களில் பங்குகொண்ட பெருமை இவர்களுக்குண்டு. தமிழின் நவீன நாடகங்கள் ஐரோப்பியத் தன்மையோடும் சாயல்களோடும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மணல்மகுடியின் நாடகங்கள் நமது தொகுடி அடையாளங்களை மீட்டெடுப்பதாய் இருந்தன. நமது வேர்களிலிருந்துதான் நமக்கான பிரத்யேக அடையாளங்களை நாம் உருவாக்க முடியும், எழுத்து, இசை, நாடகமென கலைவடிவம் எதுவாகினும் அதன் வளமை வேர்களில் இருக்கிறது.

கலைக்கு வடிவம் தருவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே காலப்போக்கில் அக்கலையின் அடையாளங்களாக மாறிவிடுகின்றன. காலம் வீசும் பாசக் கயிற்றின் முடிச்சுகளை அவிழ்த்தெறியும் வல்லமை கலைக்கு மட்டுமே உண்டு. அதனாலேயே கலை படைக்கும் கலைஞன் பல நேரங்களில் தன்னை கடவுள் போல் உணர்வதுண்டு. அவன் முன் விரியும் பிரபஞ்சத்திற்கு அவன் பூசும் வண்ணங்கள்தான் உண்மைகள்.

முருகபூபதி பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத்தைப் பயின்றவர். தாத்தா பாஸ்கரதாஸின் மீது கொண்ட பெருமதிப்பின் காரணமாய் புதிய வகையிலான நாடகப் போக்கை உருவாக்க வேண்டுமென்கிற தீராத வேட்கை அவருக்கிருந்தது. தமிழ் இசை நாடகங்களில் இன்றைக்கும் மேடைகளில் பாடப்படும் மேயாத மான் பாடல் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியது. நூறு வருடங்களாகியும் அந்தப் பாடல் இன்றளவும் பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. முருகபூபதியை அவரது தாத்தாவின் தொடர்ச்சியாகவே எப்போதும் பார்க்கத் தோன்றும்.

அவரது அண்ணன் கோணங்கியைப் போலவே பூபதிக்கும் அலைச்சல்களின் மீதும், நாடோடித்தனத்தின் மீதும் அலாதியான பற்றுண்டு. வெவ்வேறு நிலங்களில் இசைக்கப்படும் இசைக்கருவிகளைச் சேகரித்து வந்து அதனை தமது நாடகங்களில் இசைக்கும் வழக்கமுடையவர் பூபதி. நாடோடிகளின் புல்லாங்குழல், ஆஸ்திரேலிய பழங்குடியினரான அபாரிஜின்களின் டிஜிருடு, ஆப்பிரிக்க தோல் கருவியென வெவ்வேறு நிலங்களின் இசைகளை அவரது நாடகங்களில் நாம் கேட்கமுடியும்.

பல வருடங்களுக்கு முன் கைநிறைய கேள்விகளோடு மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த நாட்களில் சென்னை கவின் கலை கல்லூரியில் தஞ்சம் புகுவது எனது வழக்கமாக இருந்தது. அங்கு மனிதர்கள் இருந்தனர். மனிதர்களோடு சேர்ந்து ஏகாந்தமும் நிரம்பியிருந்தது. ஒவ்வொருவரும் ஏதோவொரு படைப்பை உருவாக்குவதில் மும்முரமாக இருந்தனர். சிலர் சிற்பம் வடித்துக் கொண்டும், வேறு சிலர் ஓவியம் தீட்டிக் கொண்டும், மற்றும் சிலர் மரத்தச்சு வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். படைப்பாளிகள் ஒன்று கூடி தனித்திருந்தனர். அங்கு நூலகம் செல்ல வேண்டியிருந்ததால் வழிகேட்டு ஒருவரை அணுகினேன். அவர் சிற்பம் வடித்துக் கொண்டிருந்தார். நாற்பது வயது இருக்கலாம் அவருக்கு. ஒரு முதிய உடலின் சிற்பம் அது. தலை மட்டும் வனையப்படாமலிருந்தது. உடல் முழுதும் கச்சிதமாக அமைந்திருந்தது. சிற்பி தலை குனிந்து அமர்ந்திருந்தார். நான் அவரை அணுகினேன். அவரிடம் பதிலில்லை. மீண்டும் அணுகினேன். அவர் பதிலளிக்கவில்லை. அவர் முதுகைத் தட்டி அழைத்தேன். சிவந்து கனிந்த கண்களால் என்னை ஏறெடுத்துப் பார்த்து "நான் தலையில்லாமல் அமர்ந்திருப்பதை நீங்கள் காணவில்லையா? தலை இருந்தால்தானே மூளை கண் காது மூக்கு வாய் இதெல்லாம் வேலை செய்யும், நான் தலையில்லாமல் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்றார். என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருகியது. அவரை முதுகுடன் அணைத்து மன்னிப்பு வேண்டிவிட்டு அவரை விட்டகன்றேன். அங்கு ஒரு படைப்பவன் தன் ஊன் உயிருருக்கி படைத்துக் கொண்டிருந்தான். அவன் படைத்தல் சடங்கை அரங்கேற்றிக் கொண்டிருந்தான். அவனை அணுகியது பெரும்பாவமென்று புரிந்தததால் அவனைத் தொழுது விடைபெற்றேன். கலையை உயிரெனும் நிலையில் வைத்து அணுகுபவர்களில் ஒருவரென ச.முருகபூபதியைக் கூறலாம். The Act என்று கூறப்படும் சடங்கு முறையை நாடகத் துறையில் பின்பற்றி வரும் இவரது படைப்புகளில் உயிர்களின் உடல் தான் களம்.

பல்லாயிரக்கணக்கான விந்தணுக்கள் ஒன்றையொன்று வீழ்த்தி போராடி கருவறைக்குள் புகுந்து கருவென சூல் கொண்டு ஊனுடல் தரித்து வடிவம் பெற்று வெளிவரும் உயிர்களுக்கு வலியும் போராட்டமும் வேர்க்குணமாகும். அதனை உணர்ந்து செயலாற்றும் மனிதன் வலியையும் போராட்டத்தையும் கூட்டுப்புழு மேற்கொள்ளும் மாற்றத்திற்கான வேட்கையாகவே பார்க்கிறான். தான் நிகழ்த்தும் கலைகளிலும் அவன் அவற்றையே நாடுகிறான். எப்படியாவது நான் செய்யும் கலைக்குள் என் உயிரைக் கடத்திவிட மாட்டேனா என்றே அவன் மனம் விழையும்.

ஆதி மனிதன் தொடர்பாடலை குறியீட்டுக்

குறிகள் கொண்டே நிகழ்த்தினான். ஒலி ஒளி வடிவங்களுக்கு முன்னரே மனதில் தோன்றிய உணர்வுகளைக் கொண்டு பாறைகளில் குறியீடுகள் பொறித்தான். அக வெளிப்பாடுகள் அப்படியே நிகழ்ந்தன. இப்படி எழுத்துப்பொறிப்புகளின் வழி தொடர்பாடுதல் சாத்தியமான பிறகு ஒலி வழியாகவும் பனுவல் வழியாகவும் மனிதன் கூத்துச் சடங்குகளை இயற்றினான். ச.முருகபூபதி இன்றளவும் தனது நாடகங்களில் ஆதி மனித மனத்தின் தொடர்பாடலை மையமாகக் கொண்டே காட்சிகள் புனைகிறார்.

முருகபூபதியின் படைப்புகளைப் பற்றி விவரிப்பதைக் காட்டிலும் அவரது கலை அணுகுமுறையே என்னைப் பெரிதும் கவர்ந்தது எனலாம். ஒரு கதைக்கு படைப்பவன் கோணம் மட்டுமல்லாது பார்வையாளனின் கோணம், வரலாற்றுக் கோணம் என்று பல்வேறு கோணங்களுண்டு. அவ்வனைத்து கோணங்களிலிருந்தும் ஒரு கதையை அல்லது ஒரு நிகழ்வை அணுகும் பொழுது அதன் முழுமையில் அக்கதை ஒரு சடங்காக உருமாறுகிறது. நடிகர்கள் சாதனங்களாக மாறுகின்றனர். மேடைச் சாதனங்கள் உயிர்பெறுகின்றன. இதனையே collective conscious act என்று நாடகத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். முருக பூபதியின் நாடகங்களும் அக்கூற்றை பிரதிபலிக்கும் படைப்புகளாக இருக்கின்றன.

நாடகங்கள் மட்டுமில்லாமல் மரபுசார் தொல் சடங்குகளை, இசை வடிவங்களை கலை பன்பாட்டு நிகழ்வுகளை ஆய்வுசெய்து புதிய நாட்கமொழியை உருவாக்கி வருகிறார்கள். நாடக வரலாறு, நாடகக் கல்வி, பன்பாடும் நாடகமும், நாடகக் கலையின் இன்றைய தேவை, பார்வையாளர் பண்பாடு போன்ற நாடகம் தொடர்பான வெவ்வேறு கருத்தாக்கங்களில் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்கள். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நாடகக் கலைஞர்களைக் கொண்டு கதை சொல்லும் கலை, கதை வழிக் கற்பித்தல், ஓவியம் இயற்கைச் செயல்பாட்டு வழிக் கற்றல் குறித்த பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் எப்போதெல்லாம் நான் சோர்வுறுகிறேனோ அப்போதெல்லாம் யோசிக்காமல் செல்வது கோவில்பட்டிக்குத்தான். கலையின் கரங்களை பற்றிக்கொண்டு ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாமென்கிற நம்பிக்கையை எனக்குள் விதைத்தது கோணங்கியின் எழுத்துகளும் பூபதியின் நாடகங்களும்தான். சில நாட்களுக்கு முன்பு, நீண்ட ஊரடங்கு காலத்தின் அழுத்தம் தாளாமல் கோவில்பட்டிக்குச் சென்றபோது பூபதியின் குழுவினர் ‘இடாகினி கதாய அரத்தம்’ என்னும் தங்களது புதிய நாடகத்திற்கான ஒத்திகையில் இருந்தனர். அந்த நாடகக் காட்சிகளும் அடுத்தநாள் அந்தக் கலைஞர்களோடு உரையாடியதும் பெரும் ஆறுதலாயிருந்தது. கலையிடம் தஞ்சம் புகும் மனிதன் ஒருபோதும் சோர்வடைவதில்லை, வீழ்ந்துவிடுவதில்லை.

89 views

Recent Posts

See All
bottom of page