நாம் எந்தவொன்றைக் குறித்தும் அத்தனை தீர்க்கமாக ஒரு முடிவிற்கு வருவதில்லை. எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வது போலவே சந்தேகமும் கொள்கிறோம். எல்லாவற்றையும் சந்தேகிக்கச் சொல்லியே நமக்கு பழக்குகிறார்கள். கல்வி குறித்து வேலை குறித்து சிந்தனை குறித்து அரசியல் குறித்து, இப்படி எதையும் முழுமையாய் நம்ப தயாராய் இல்லாதவர்கள் நாம். யாரோ சிலர் வழிகாட்டிகளாய் இருக்க வேண்டும். ஒன்றின் சாதக பாதகங்களை அவர்கள் நமக்கு புரிய வைக்க வேண்டும். அப்போதும் கூட நம் புலன்கள் நம்பிக்கையின்மையின் தடம் பற்றியே செல்லும்.
விளையாட்டில் இதைத்தான் முதலில் நம்மிடமிருந்து பிரித்தெடுக்கிறார்கள். நல்ல விளையாட்டு வீரன் கண்மூடித்தனமாக தன் பயிற்சியாளரை நம்ப வேண்டும். பள்ளிக்கூடம் போன நேரம் போக நள்ளிரவு வரை வேலைக்கு செல்ல சின்ன வயதிலேயே நிர்ப்பந்திக்கப்பட்டதால் ஆற்றலும் ஆர்வமும் இருந்தும் நான் மைதானத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டவன். வெற்றிகள் குடும்ப வருமானத்தின் முன்பாக பொருட்டாக இருந்திருக்கவில்லை என்பதால் என்னை விளையாட்டுக்காரனாக அனுமதிக்கவில்லை. ஓடுவதிலிருந்த மூர்க்கத்தை தான் நான் எழுத்தில் காட்டுகிறேன். சமயங்களில் பெண்களிடமும். மைதானங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு இனி இதனோடு நமக்கு ஒருபோதும் இல்லை என்கிற நிலையை எதிர்கொண்ட தருணம் துயரமானது. ஆனால் அந்த சூழலில் இருந்து தப்பித்திருக்க முடியவில்லை.
தொண்ணுறுகளுக்குப் பிறகான தென் தமிழ் நிலத்தின் கதைகள் இப்போதுதான் எழுதப்படுவதாய்த் தெரிகிறது. என் ஊரில் இருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் தான் கோவில்பட்டி. எனக்கு பழக்கமான ஊர்தான். பழக்கமான மனிதர்கள் தான். கால்பந்து விளையாடுகிறவனாய் இருந்த போதும் ஹாக்கி வீரர்களுடன் எனக்கு கூட்டு உண்டு. கோவில்பட்டியில் இத்தனை இலக்கியவாதிகள் செழிப்பாக வந்ததற்குப் பின்னால் அந்த ஊரின் விளையாட்டும் முக்கிய காரணம். கவிஞர் அப்பாஸ் அற்புதமான ஹாக்கி வீரர். நாங்கள் கோவில்பட்டியை பாரிஸாகத்தன் பார்த்தோம்.
ஒரு கதையை அதன் முதல் பக்கத்திலிருந்தே வாசிக்கிறவனுக்கான பெர்சனல் குரலில் சொல்வது சரவணனின் இயல்பு. தனித்தன்மையும் கூட. சொல்வதற்கு ஏராளமான கதைகள் இருந்தும் அவர் நிறைய கதைகளை பிணைத்து குழப்புவதில்லை. எந்த இடத்திலும் வாசகனை கைவிடாத கச்சிதத்தன்மை அவருக்கு வாய்த்திருக்கிறது. முக்கியமாக அதீத உணர்ச்சிகளுக்கான இடங்களை அவர் இயல்பாக கையாள்கிறார். நான் அதீத உணர்ச்சிகளை தவிர்க்க நினைத்து முடியாமல் போகிற இடங்களை இவர் கச்சிதமாக சொல்கிறார். சமயங்களில் அதீத உணர்ச்சிகள் ஒரு கதையின் விஸ்தாரத்தை சுருக்கி விடுகின்றன.
பார்பியில் நிலம் இருக்கிறது, மனிதர்கள் இருக்கிறார்கள், வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவிலான மனிதர்களின் மன ஊடாட்டங்களும் தவிப்புகளும் இருக்கின்றன. சிறுநகரங்களில் இருந்து கிடைக்கும் சின்னதொரு வாய்ப்பை பற்றிக் கொண்டு மேலேறி வரத்துடிக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களின் ஆழ்மனக் குரல் இருக்கிறது. நாங்கள் வாய்ப்புகளுக்காக தவித்துக் கிடந்தவர்கள் தான். யாராவது ஒருவர் ஃபீஸ் கட்டி விடமாட்டார்களா? ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் சேர்த்து விடமாட்டார்களா என தவிப்பாய் இருக்கும். எங்கள் ஊரைச் சுற்றின கிராமங்களில் இருந்து இளஇளைஞர்கள் சாரை சாரையாய் மிலிட்டரிக்குப் போவார்கள். எந்த ஊரைக் கேட்டாலும் மிலிட்டரி வில்லேஜ் என்பார்கள். வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாத போது அதுதான் போக்கிடம்.
சரவணனோடு உரையாடுவது ஊரில் சிறுவயதிலிருந்து பழகிய ஒருவருடன் பேசுவது போலத்தான் இருக்கும். ஏனெனில் அவர் எழுதுகிற பேசுகிற அனேக விஷயங்களை நானும் பார்த்திருக்கிறேன். சாட்சியமாய் இருந்திருக்கிறேன். அஜ்வாவில் வரும் விஜிக்கும் கொமோராவில் வருகிற விஜிக்கும் ஏதோ ஒருவித தொடர்பு இருக்கிறது. ஊர்க்கலவரங்களின் சாதிகளின் வன்முறைகளை அவரும் எழுதுகிறார். நான் என் ஊரின் சாதிய வன்முறைகளை எழுதுகிறேன். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக எங்களது கதைகள் இங்கும் அங்குமாய் இருக்கின்றன. ஆனால் நான் திட்டமிட்டுத் தவிர்க்கும் அனேக இடங்களை அவர் கவனமாக எழுதுகிறார். தமிழர்களுக்கு பேச்சில் இருக்கும் வீரம் விளையாட்டில் இல்லை என்பது நிதர்சனம். வீரத் தமிழன் ஜல்லிக்கட்டு தமிழன் என்பதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு யதார்த்தத்தை கவனுத்தால் நாம் உடல் அளவில் பலவீனமானவர்கள். படிச்சு ஏதாச்சும் நல்ல வேலைக்கு போயிரனும்டா என்றுதான் சொல்லி வளர்க்கிறார்களே தவிர நல்ல வேலை என்றால் என்னவென்று ஒருவருக்கும் தெரிவதில்லை. விளையாட்டுக்கு விரோதமான சோம்பேறித்தனமுன் நம்மிடம் உண்டு.
எங்கள் ஊரில் இருந்த கான்பார்க் க்ரவுண்ட் இப்பொழுது கட்டிடங்களாய்ப் போனது. ஒரு காலத்தில் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய மைதானம். பி.கே.என் பள்ளி மைதானத்தில் வேறு யாரையும் அனுமதிப்பதில்லை. இருபது பேராவது அந்த மைதானத்திலிருந்து மாநில கால்பந்து அணிக்காக விளையாடியவர்கள் இருப்பார்கள். ஊருக்கு வரும் நாட்களில் எல்லாம் சுற்றி பார்க்கிறேன் கால்பந்து விளையாடுகிற இளைஞர்களைப் பார்ப்பதே அரிதாகிப் போய்விட்டது. 2001 உலகக் கோப்பையில் ஜெர்மனி பிரேசிலிடம் தோற்றபோது ஆலிவர் கானுக்காக கதறியழுத ஆட்கள் எங்கு போனார்கள்? அதற்குப் பிறகு அவர்களைத் தொடர்ந்து ஏன் ஒருவரும் வரவில்லை. அங்கு விளையாட்டிலும் ஜாதி இருந்தது. நம்மாளுக பயல விட அவன் நல்லா விளையாடறான் என்கிற காழ்ப்பு ஒரு தூரத்தை உருவாக்கியது.
பார்பி கோவில்பட்டியின் கதை மட்டுமல்ல திருமங்கலத்தின் கதையும் தான். ஸ்போர்ட்ஸை மையமாக வைத்து நாவல் எழுதுங்கள் என்று சரவணன் சொல்லும் போதெல்லாம் “நான் மைதானத்திலிருந்து துரத்தப்பட்டவன். என்னால் அங்கு மீண்டும் என்னைப் பொறுத்திப் பார்த்துக் கொள்ளமுடியா”தென பதிலுரைப்பேன்.
ஒரு நாவல் வாசிக்கிறவனிடத்தில் அந்தரங்கமாக சில உரையாடல்களை உருவாக்கும் போது முக்கியமானதாய் ஆகிறது. வாழ்விற்கும் கதைக்குமான தூரத்தை குறைத்து ஒரு இடத்தில் வந்து நிறுத்தும் போது நாம் மறந்து போனவற்றை எல்லாம் வேகமாய் நினைவுபடுத்திக் கொள்கிறோம். பார்பி ஒரு தலைமுறையின் கனவுகளையும் அதற்காக அவர்கள் இழந்த சந்தோசங்களையும் சுவாரஸ்யமாய் சொல்லி இருக்கும் நாவல்.