நூறு வருடங்களுக்கு முன் ரஷ்யாவில் டால்ஸ்டாயைக் குறித்து ஒரு மூன்று நிமிடப் படம் எடுத்தார்கள். புதிதாக வந்திருக்கும் அக்கலைவடித்தைக் கண்டு வியந்துபோன தால்ஸ்தாய் அது குறித்து ஏராளமாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். இறுதியாக இந்த கலைவடிவம் எல்லோருக்கும் பரவலாக்கப்பட்டிருக்கிறதா? சாதாரண மனிதர்களும் சினிமா எடுக்க முடியுமா? என்று கேட்க, “இல்லை இது வசதிபடைத்தவர்களின் வசம்தான் இருக்கிறதென சொல்கிறார்கள். ‘அது ஆபத்தான போக்காகிவிடும். எல்லோரும் கையாள்கிற மீடியமாக மாறுகிற போதுதான் இந்தக் கலைவடிவம் சுதந்திரமாக சிந்திக்கும்” என்கிறார் தல்ஸ்தாய். இத்தனை காலத்திற்குப் பின்னும் சினிமாவின் நிலை இன்னும் அப்படியேதானிருக்கிறது.
வேறு எந்த தேசத்தவர்களை விடவும் சினிமாவை வாழ்வோடு அதிகமும் இணைத்துப் பார்த்துக் கொள்வது இந்தியர்கள்தான். அதிலும் நாம் நம் ஆட்சியாளர்களையே சினிமாவலிருந்துதான் உருவாக்கியிருக்கிறோம். அதற்கு முக்கியமான காரணம் திரையரங்குகள் சில காலங்களுக்கு முன்பு வரையிலும் எல்லாத் தளத்திலிருப்பவர்களையும் ஒன்று சேர்க்கும் இடமாக இருந்ததும், திரையில் பார்த்த எல்லாவற்றையும் நிஜமென நம்பியதும்தான். மீனவர்களாக, கூலிக்காரர்களாக,விவாசயிகளாக, சைக்கிள் ரிக்ஷா ஓட்டுகிறவர்களாகவென தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்ற எல்லா நாயகர்களும் அடித்தட்டு மக்களின் வாழ்வை பிரதிபலிக்கிறவர்களாக நடிக்கவே விரும்பினர். இது தற்செயலாக நடந்ததல்ல. படம் பார்க்க வருகிறவர்களின் மனதில் நாயகன் தன்னைப் போன்ற ஒருவன் என்ற எண்ணத்தை இக்கதாப்பாத்திரங்களே உருவாக்கின. திரையரங்கம் எளிமையான செலவில் கொண்டாட்டத்தின், பொழுதுபோக்கின் வடிவமாய் இருந்தது.
கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் மால்கள் படம் பார்க்க வருகிறவர்களை கணிசமாக கட்டுப்படுத்துவதாக மாறியிருக்கிறது. திரையரங்கம் பணக்காரர்களுக்கானதாக மாற்றப்பட்டிருக்கிறது. லுங்கி அணிந்த ஒருவரை இந்த திரையரங்கிற்குள் பார்க்க முடியாது. பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் இருந்த டிக்கட் விலை இன்று நூற்றி இருபது ரூபாயாகி இருக்கிறது. ஒரு மாதம் முழுக்க படம் பார்க்க ஆகும் செலவில் ஒருவர் ஒரு படத்தை மட்டுமே இப்பொழுது பார்க்க முடியும். இந்த மால்களில் காட்சிகளுக்கான நேரங்களுக்கும் ஒழுங்குகளில்லை. நண்பகல் பணிரெண்டு மணிக்கும், மாலை நான்கு மணி, இரவு ஏழு மணியென இப்படி வெவ்வேறு நேரங்களை வைப்பதில் நமது உணவுக்கும் அங்கேயே செலவு செய்ய வைக்கிற தந்திரம் இருக்கிறது. குடும்பத்தோடு ஒரு படம் பார்க்க மதுரை போன்ற நகரங்களிலேயே இன்று 1000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய தேவை இருப்பதால் பெரும்பாலனவர்கள் இணையம் மற்றும் திருட்டு விசிடிக்களையே நம்பியிருக்கிறார்கள். ரிக்ஷாக்காரர்களும், விவசாயிகளும் வராத தியேட்டரில் இப்பொழுது நிரம்பியிருப்பது நடுத்தர மற்றும் மேல்த்தட்டு வர்க்கத்தினரே. ஆக படங்களின் உள்ளடக்கமும் நாயகர்களும் அவர்களுக்கானவர்களாக மாறியிருக்கிறார்கள். தியேட்டர் வருகிறவர்களுக்காக படமெடுத்தால் போதுமென்கிற நிலை சினிமாவிற்கான கதைகளையும் மாற்றியிருக்கிறது.
வாழ்விற்காக எதை வேண்டுமானாலும் செய்யவும் அதை நியாயப்படுத்தவும் முனைகிறவனாக நாயகன் பெரும்பாலான படங்களில் வருவதை இந்த கலாச்சார மாற்றம் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. மேலோட்டமான இந்தப் படங்கள் பொருளாதார ரீதியாக கூறுபோட பட்டிருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வைப் பதிவு செய்ய விரும்புவதில்லை. திரையரங்கம் வருகிற எவரும் அதை ரசிக்கத் தயாராயில்லை என இத்திரைப்படங்களை உருவாக்குகிறவர்கள் திடமாக நம்புகிறார்கள். ஒவ்வொரு வாரமும் வெளியாகிற திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமானபடியேதான் இருக்கின்றன, ஆனால் நம்மைப் பற்றியோ நமக்கு அருகிலிருப்பவர்களைப் பற்றியோ இனி ஒருபோதும் பேசப்போவதில்லை என்பது கசப்பான உண்மை.
(2018 ம் வருடம் அந்திமழை இதழில் வெளியான கட்டுரை )