2010 – தாஸ் சவோக் – தில்லி – பின் பனிக்காலம்.
வினோத்திற்கு இந்த மொத்த பயணமும் விளங்கிக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மூடிக் கிடந்த கடந்த காலத்தின் ரகசிய பக்கங்கள் இந்தத் தேடலின் ஒவ்வொரு தருணத்திலும் திறந்து செல்வதை கண்கூடாகப் பார்த்தான். ஜாவேத் அவன் தேடும் தனியொரு மனிதனாக அல்லாமல் ஒரு நூற்றாண்டின் ரகசியமாகவே மாறிவிட்டிருந்தார். புதிய புதிய சுவாரஸ்யங்களை தந்த அந்த ரகசியத்தின் எழுதப்படாத வினோத பாத்திரம் இவன். “தமிழ் சினிமா – நேற்றின் நிழல்” என்னும் பெயரில் சினிமாவின் கடந்த காலத்தைக் கொண்டாடும் விதமாக நடக்கும் நிகழ்வின் அபூர்வமானதொரு தருணத்தில் தான் ஜாவேதைக் குறித்து முதலில் தெரிந்துகொண்டான். ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்த அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரை கெளரவிக்கும் விதமாக அழைத்திருந்தனர். விழா மேடையில் வாழ்வின் மறக்க முடியாத படம் குறித்து கேட்ட பொழுது, பர்மா ராணி என்ற படம் குறித்தும் அதன் கடைசி நாள் படப்பிடிப்பில் நிகழ்ந்த ஒரு அசம்பாவிதத்தையும் வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார். துயரங்களையும் இழப்புகளையும் மறந்துபோக மனிதர்களுக்கு இரண்டு ஆயுள் தேவைப்படுகிறது. தன் காலத்தில் கடந்த காலத்தின் சந்தோசமான நாட்களையெல்லாம் துயர்மிக்க நாட்களை மறக்க முடிவதில்லை. அவருக்கும் அப்படித்தான். படத்தின் மீதிருந்த சுவாரஸ்யத்தை விடவும் அதன் நாயகனான ஜாவேதைக் குறித்துக் கேட்டதுதான் வினோத்திற்கு முக்கியமானதாய் இருந்தது. இளம் வயதில் லாஹூரிலிருந்து பிழைப்பிற்காக சென்னை வந்து ஸ்டுடியோக்களில் வேலை செய்து மொழியைக் கற்றுக் கொண்டு நடிகரகாவும் ஆகியிருக்கிறார். அப்படி நடித்த ஒரேயொரு படமும் வெளியாகவேயில்லை. அதன்பிறகு அந்த மனிதன் என்னவானான்? இந்த ஒற்றைக் கேள்வியிலிருந்துதான் அவரைத் தேடத் துடித்த இந்த நீண்ட பயணம் துவங்கியது.
எல்லோரும் மறந்தவொன்றை நினைவுபடுத்த வேண்டுமாயின் கடந்த காலத்தின் வினோத சுழல்களுக்குள் எளிதில் பயணிக்கத் தெரிந்திருப்பதோடு அசாத்தியமான பொறுமையும் வேண்டும். புத்தகங்கள், ஆய்வாளர்களென அவன் தேடிச் சென்ற எல்லோரும் சில குறிப்புகளை மட்டுமே சேமித்திருந்தார்களேயொழிய பொக்கிஷங்களையல்ல. ஒவ்வொரு குறிப்பும் பிறிதொரு குறிப்பிற்கான தூண்டுதலாக இருந்தது மட்டுந்தான் ஆறுதல். பர்மா ராணி படத்தின் ரீல்கள் இருப்பதைத் தெரிந்து தேடிச் சென்றபோது காலம் மறந்து போன ஏராளமான காட்சிகள் சிதறல் சிதறல்களாக பழைய குடோன்களில் குவிந்திருப்பதைப் பார்த்தான். ஒவ்வொரு ஃப்ரேமிலும் தேக்கி சேமித்த கனவுகள் துருவேறி பயனற்றுப் போயிருந்தது. அடுத்த வருட நிகழ்விற்குள் படத்தின் பிரதியையும் ஜாவேதையும் எப்படியாவது கண்டுபிடித்துவிடுவதென உறுதியோடு இருந்தான். பர்மா ராணியோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஜாவேதின் இருப்பு குறித்து சந்தேகமே கொண்டிருந்தனர். எல்லோருக்கும் முன்பாக இறந்து போவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அனேகமுண்டு. விடுதலைக்குப்பின் கொத்துக் கொத்தாக கொலை செய்து இந்த எல்லையிலிருந்து எதிர்ப் பக்கத்திற்கும் எதிர்ப்பக்கத்திலிருந்து இங்குமாக அனுப்பப்பட்ட பல்லாயிரம் உடல்களில் ஒன்றாக அவரும் போயிருக்கலாமென்பது சிலரின் அபிப்பிராயம். அப்படியே தப்பிப் பிழைத்தாலும் மூப்பின் காரணமாய் தவறிப்போயிருக்கலாம். உயிர் வாழ்தலுக்கான சாத்தியங்கள் வெகு குறைவாகவே உள்ள ஒரு மனிதனை எப்படியும் சந்தித்தே ஆகவேண்டுமென்கிற வினோத வைராக்கியம் அவனுக்குள். யாருக்குமே தெரியாமல் ரகசியங்களோடு ஒரு மனிதன் மறைந்துவிட முடியாது. ரகசியங்கள் மனிதர்களின் தேவைகளை தக்கவைத்தபடியேதான் இருக்கின்றன. ஹைதராபாத், மங்களூர், கோழிக்கோடு,மும்பை என நீண்ட அந்தப்பயணத்திற்கு கடைசியாக விடை கிடைத்தது, அவர் தில்லியில் இருக்கிறாரென. ஒரு மனிதன் தேடிக் கண்டடைய சாத்தியமில்லாததென எதுவுமில்லை. பழைய தில்லியின் தாஸ் சவோக்கில் அழுக்கடைந்ததொரு சந்தில் ஜாவேதின் வீட்டைக் கண்டுபிடித்தது பரவசமாக இருந்தபோதும் அவரிடம் என்ன பேசுவதெனக் குழப்பம்.
வர்ணம் அடிக்கப்படாமல் சுவர் உதிர்ந்த பழைய வீட்டின் வாசலில் நாடகத்தின் வேஷ அலங்காரங்களுக்காக செய்யப்பட்ட உருவங்கள். வாசலைக் கடந்து உள்ளே சென்றவனுக்கு அந்த இடம் முகலாய காலத்தின் மிச்ச வாசனையை நினைவுபடுத்தியது. ‘என்ன சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள? உதவி இயக்குநர், ஆவணப்பட இயக்குநர், பத்திரிக்கையாளன், சினிமா ஆர்வலன்? இதில் எதுவாக இருந்தாலும் அவரைத் தேடிச் சென்றிருப்பதன் பிரதான காரணம்?’ கதவைத் திறந்த பெண்ணிற்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். பருவத்தின் மொத்த விளைச்சலாக தெரிந்தும் மிக சாந்தமாய் அவனிடம் யார் வேண்டுமெனக் கேட்டாள். “ஜாவேத் பாய்…” அவள் சிறிது யோசனைக்குப்பின் “சென்னைல இருந்து வர்றீங்களா?” ஆமென தலையசைத்தான். “உள்ள வாங்க…” வெளிச்சம் மிகக் குறைவாக பரவியிருந்த வீட்டிற்குள் அவளைத் தொடர்ந்து சென்றான். வியாபாரத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கும் ஜிலேபி வாசனை எங்கிருந்து வருகிறதெனத் தெரியாமல் எல்லா அறைகளிலும் நிரம்பியிருந்தது.
குளிருக்கு இதமாக அவள் கொடுத்துவிட்டுப் போன தேநீர் கோப்பையின் கதகதப்பு. பல்வேறு யோசனைகளில் இருந்தவன் தனக்கு எதிரில் ஒரு முதியவர் வந்து அமர்வதைக் கண்டுகொள்ள சில நொடிகள் பிடித்தன. நடிகனாய் இருந்ததற்கான சாயல்கள் அவ்வளவையும் இழந்திருந்த முகம். ”என்னயப் பாக்கவா இவ்ளோ தூரம் வந்திங்க?” அந்தக் குரலில் வியப்பிற்குப் பதிலாய் பெருகியிருந்த ஏமாற்றம். ”ஆமாங்க. என் பேர் வினோத். அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கேன். சென்னைல ஒவ்வொரு வருஷமும் பழைய சினிமாக் கலைஞர்கள கெளரவிக்கிற மாதிரியா ஒரு விழா நடத்திட்டு இருக்கோம். போன வருஷம் வந்த ஒரு கேமரா மேன் சொல்லித்தான் உங்களப் பத்தியும் பர்மா ராணி பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். இந்த வருஷ விழாவுக்கு உங்களக் கூப்ட்டு கெளரவிக்கனும்னு தோணுச்சு. அதான் தேடி வந்தேன்.” நிதானமாக பேசிய அந்த இளைஞனைப் பார்க்கையில் கடைசியாக சென்னையை நீங்கி வந்த தனது முகத்தை ஒத்திருப்பது போலிருந்தது. “என்னய கெளரவிக்கப் போறீங்களா? எதுக்குப்பா? எங்கிட்ட பேச என்ன இருக்கு?” வினோத் தனது முதுகுப்பையிலிருந்து ஒரு பழைய புகைப்படத்தை எடுத்து அவரிடம் நீட்டினான். பர்மா ராணி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படம். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரிடம் இருந்து அவன் வாங்கி வந்தது. கடைசி நாள் படப்பிடிப்புத் துவங்குவதற்கு முன்னால் எடுக்கப்பட்ட படம். கதாநாயகனாக தனது கடந்த காலத்தைப் பார்த்த நொடியில் கண்கள் அசைவின்றி அப்படியே நிலைகுத்திப் போயிருந்தன. ”ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனோட வாழ்க்கைல ஏதாவது ஒரே ஒரு விசயந்தான் ஆயுசுக்குமான லட்சியமா இருக்கும். அது தோத்துப் போன பின்னால வாழ்ற ஒவ்வொரு நாளும் நரகம் தம்பி. நான் சாக முடியாம வாழ்ந்துட்டு இருக்கேன்.” கையிலிருந்த புகைப்படத்தை மடியில் வைத்துக் கொண்டார். “நீங்க ஏன் அதுக்கு அப்பறம் வேற படத்துல நடிக்கல?” “நடிக்க முடியல. யாரும் கூப்டல. வெளிய போகவே பயமா இருந்துச்சு. அத்தன வருஷமா ஜாவேத் லாஹூர்ல இருந்து வந்தவங்கறது யாருக்கும் தொந்தரவா இல்ல. முத்தப்பா கைல துப்பாக்கி இருந்த மாதிரி இன்னும் யார் கைல என்ன இருக்குமோன்னு பயம். அதான் போராடிப் பாத்துட்டு முடியாம மெட்றாஸ விட்டுக் கெளம்பி வந்துட்டேன்.” தொடர்ந்து பேசமுடியாமல் குரல் தழுதழுக்க, தலையைக் குனிந்து கொண்டார். இரண்டு மனிதர்களுக்கு நடுவில் நிலவும் கலைக்க முடியா மெளனம் மூர்க்கமானது. யாரோ ஒருவரை காயப்படுத்திவிடுவதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்ட அந்த கனத்தில் முதலில் வந்து விழும் சொற்களுக்கு சற்று நிதானம் தேவை. “அதுக்கப்பறம் இத்தன வருசம் என்ன செஞ்சீங்க? சொந்த ஊருக்குப் போகலையா?” வினோத் வெளிச்சம் குறைவாயிருந்த அவர் முகத்தின் உணர்ச்சிகளைத் தெரிந்து கொள்ளத் தவித்தான். ஜாவேத் வேறெங்கோ பார்த்தபடி சிரித்தார். “நாம எங்க வாழறமோ எங்க சந்தோசமா இருக்கமோ அதானப்பா சொந்த ஊர். என் வாழ்க்கைல நான் சந்தோசமா இருந்ததும் துக்கமா இருந்ததும் இங்கதான். எங்கங்கயோ சுத்தினேன். கல்யாணத்துக்கு அப்பறம் தில்லி வந்துட்டேன்.” வினோதிற்கு ஒவ்வொரு சொற்களுக்கும் நடுவே ஜாவேத் விட்டுச் சென்ற இடைவெளி நிரப்பிக் கொள்ளமுடியாததாய் இருந்தது. அவர் மறந்து போக விரும்பிய ஒன்றை நினைவுபடுத்தி துயரங் கொள்ளச் செய்கிறோமோவென குற்றவுணர்வு. “எனக்கு புரியுதுங்க? ஆனா இப்பிடி ஒரு நடிகன் இருந்தாங்கறத பதிவு பண்ணனுமே. அதுக்காக கேக்கறேன். நீங்க இந்த வருஷம் விழாவுக்கு வரனும். நா ரொம்பக் கஷ்டப்பட்டுத் தேடி பர்மா ராணி படத்தோட ரீல்கள கூட எடுத்து வெச்சிருக்கேன். இப்பவே அதெல்லாம் தேஞ்சு போச்சு. நீங்க ஒருமுறையாச்சும் அந்தப் படத்தப் பாருங்க…” ஜாவேதின் கண்களில் அதுவரையில்லாத பிரகாசம் பரவியது. “நெஜமாவா சொல்ற தம்பி?” “ஆமாங்க…” அவர் மீண்டும் தான் வேஷங்கட்டியிருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டார். அந்தக் கனவு இந்த உலகம் மறந்து போன செய்தியல்ல. காலங்கடந்து போனாலும் யாரோ சிலருக்குத் தெரியத்தான் போகிறது. மனம் பூரிப்பு கொண்டதைக் காட்டிக்கொள்ளாது, “எந்த தேதின்னு சொல்லுப்பா நான் கண்டிப்பா வர்றேன்.” ஆறுமாத காலத் தேடல் வீணாகவில்லையென்கிற உற்சாகம் அவனுக்கு. தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டபோது ரகசியத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே அவன் பிரித்துப் பார்த்திருந்தான். ஜாவேதின் மடியிலிருந்த புகைப்படத்தில் மறைந்து கிடந்தது வேறு யாருக்கும் தெரியாத அந்த மற்றொரு ரகசியம்.
லாஹூர் எக்ஸ்பிரஸ்
ஏதாவதொரு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாமென நினைத்து ஒன்பது வயதில் லாஹூரிலிருந்து கிளம்பியபோது உலகம் இத்தனை விசாலமானதென்பதும், குரூரமானதென்பதும் ஜாவேதிற்கு தெரிந்திருக்கவில்லை. ஹிந்துஸ்தானத்தின் தெற்கு எல்லை வரை செல்லக்கூடிய க்ராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸில் ஏலக்காய் வியாபாரத்திற்காக வந்திருந்த மலையாள வியாபாரிகளோடு ஒட்டிக்கொண்ட ஜாவிதும் அவர்களோடு ஒருவனாய் பயணப்பட்டான். மங்களூர், கோழிக்கோடென கழிந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு மதறாஸிற்கு வந்தவன் இங்குதான் முதன் முதலாக ‘சீதா கல்யாணம்’ என்றொரு சினிமா பார்த்தான். கனவை நிஜமாக்குவதின் உச்சபட்ச சாத்தியங்கள் அவ்வளவையும் அந்தத் திரை நிகழ்த்திக் காட்டியதில் மலைத்துப் போனவன், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்ப பார்த்தான். சினிமா சொல்ல முடியாத ஏதோவொரு பரவசத்தைக் கொடுக்க, ஜாவேதுக்கு மதறாஸை விட்டுச் செல்ல மனம் ஒப்பவில்லை. சேத்துப்பட்டிலிருந்த ஒரு வியாபாரியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தவன் தன் செலவுகள் போக மிஞ்சும் எல்லாக் காசிலும் சினிமா பார்ப்பதை வழக்கமாக்கினான். கனவுகளை விதைக்கும் வினோத உலமாயிருந்த அதற்குள் வேகமாய் தொலைந்து போயின அவன் கிழமைகள்.
1934 சித்திரை மாதம் சேத்துப்பட்டில் உருவான சவுண்ட் சிட்டி ஸ்டுடியோவில் முதலாளியின் மூலமாக வேலைக்கு சேர்ந்த போது அவனுக்கு முன்பாகவே அங்கு முத்தப்பாவும் எடுபிடி பையனாக வேலை செய்து கொண்டிருந்தான். இருவருக்கும் நடிப்பதுதான் கனவென்றாலும் காலம் அவர்களுக்கான கதவை அத்தனை எளிதில் திறப்பதாயில்லை. முத்தப்பா சில காலம் இசை நாடகங்களில் நடித்தவன். அதனால் சிறப்பாக பாடக்கூடியவன், தனக்கு எந்தத் திறமையும் இல்லையே என தவித்த ஜாவேதிற்கு தமிழை ஒழுங்காகப் பேசக் கற்றுக் கொடுத்தது முத்தப்பாதான். ”முத்தப்பா நீ எப்பிடியும் பெரிய நடிகனா வருவ. அப்பிடி வரும்போது பழைய சிநேகிதத்த மறக்காம அந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் வாங்கிக் குடுடா…’ ஜாவேத் தவிப்போடு கேட்பான். ஏழெட்டு வருடங்கள் அந்த ஸ்டுடியோவில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து வளர்ந்த அவர்களுக்கு ஒரு காலத்திற்குப் பிறகு தெரியாத வேலைகளே இல்லை. முதலாளிக்கும் அவர்கள் இருவரின் மீதும் அலாதிப் ப்ரியமிருந்தது.
“உங்களுக்கு ஏதாச்சும் செய்யனும்னு தோணுதுடா… நான் கொஞ்சம் பணம் தர்றேன், நீங்க தனியா படம் தயாரிக்கிறீங்களா?” முத்தப்பாவும் ஜாவேதும் அமைதியாக அதை மறுத்தனர். “மொதலாளி நீங்களே படம் தயாரிங்க. நாங்க நடிகனாகனும்தான் இத்தன வருஷமா காத்துட்டு இருக்கோம். நீங்கதான் அதுக்கு ஒரு வழி பண்ணனும்.” அவர்களின் நம்பிக்கையும் உறுதியும் பிடித்துப் போயிருந்ததால் முதலாளி சம்மதம் சொன்னார். படத்திற்கான கதை முடிவானபோதே முத்தப்பாதான் நாயகனாக நடிப்பான் என எல்லோரும் நினைத்தனர். படத்திற்கு இயக்குநராக நியமிக்கப்பட்டவர் ஒத்திகைக்காக முத்தப்பாவை நடிக்க சொன்னபோதுதான் அவன் குரல் அதீத பெண் தன்மையோடு இருப்பதைப் பார்த்து ஏமாற்றமடைந்தார். ”மொதலாளி இது தைர்யமான ஒரு ராஜாவோட கதை. இதுல கம்பீரமான குரல் இருக்க, கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆள் நடிச்சாத்தான் சரியா இருக்கும்.’ என இயக்குநர் சொல்ல, எதிர்பாராதவிதமாக ஜாவேத் தேர்வுசெய்யப்பட்டான். சில எதிர்பாராத திருப்பங்கள் மனிதர்களை அவர்களின் இயல்பிலிருந்து முற்றிலுமாக மாற்றிவிடுகின்றன. தான் எல்லோராலும் வஞ்சிக்கப்பட்ட வேதனை முத்தப்பாவிற்கு, அதை வெளிக்காட்டவும் முடியாமல் தவித்தான்.
“உங்களுக்கு ஏதாச்சும் செய்யனும்னு தோணுதுடா… நான் கொஞ்சம் பணம் தர்றேன், நீங்க தனியா படம் தயாரிக்கிறீங்களா?” முத்தப்பாவும் ஜாவேதும் அமைதியாக அதை மறுத்தனர். “மொதலாளி நீங்களே படம் தயாரிங்க. நாங்க நடிகனாகனும்தான் இத்தன வருஷமா காத்துட்டு இருக்கோம். நீங்கதான் அதுக்கு ஒரு வழி பண்ணனும்.” அவர்களின் நம்பிக்கையும் உறுதியும் பிடித்துப் போயிருந்ததால் முதலாளி சம்மதம் சொன்னார். படத்திற்கான கதை முடிவானபோதே முத்தப்பாதான் நாயகனாக நடிப்பான் என எல்லோரும் நினைத்தனர். படத்திற்கு இயக்குநராக நியமிக்கப்பட்டவர் ஒத்திகைக்காக முத்தப்பாவை நடிக்க சொன்னபோதுதான் அவன் குரல் அதீத பெண் தன்மையோடு இருப்பதைப் பார்த்து ஏமாற்றமடைந்தார். ”மொதலாளி இது தைர்யமான ஒரு ராஜாவோட கதை. இதுல கம்பீரமான குரல் இருக்க, கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆள் நடிச்சாத்தான் சரியா இருக்கும்.’ என இயக்குநர் சொல்ல, எதிர்பாராதவிதமாக ஜாவேத் தேர்வுசெய்யப்பட்டான். சில எதிர்பாராத திருப்பங்கள் மனிதர்களை அவர்களின் இயல்பிலிருந்து முற்றிலுமாக மாற்றிவிடுகின்றன. தான் எல்லோராலும் வஞ்சிக்கப்பட்ட வேதனை முத்தப்பாவிற்கு, அதை வெளிக்காட்டவும் முடியாமல் தவித்தான். ியை எப்படி இயக்குவதெனக் கற்றுக் கொண்ட முத்தப்பா கடைசி நாள் படப்பிடிப்பிற்கு சென்றதை முற்பகல் வரை யாரும் கவனித்திருக்கவில்லை.
1948 இலையுதிர் காலம் – ஜூபிடர் ஸ்டுடியோ – மதறாஸ்.
பாதி விளக்குகள் அணைந்த நிலையில் அடுத்தக் காட்சிக்கான ஒத்திகையிலிருந்த ஜாவேதின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் பூர்ணத்துவம் நிறைந்த புன்னகை. இந்த உணர்வுகாகத்தான் சொந்த நிலம் மறந்து வெவ்வேறு ஊர்களில் இத்தனை காலம் நாடோடியாய் அலைந்து திரிந்திருந்தான். சகிக்கவியலா இன்னல்கள் துயரங்களைத் தாண்டி முதல் முறையாக அவன் கதாநாயகனாய் நடிக்கும் பர்மா ராணி படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு. எதிர்பட்டுச் செல்லும் எல்லோருக்கும் நன்றி சொல்லவேண்டுமென பரபரத்தது மனம். வேஷமே கட்டாது போனாலும் தானொரு ராஜாவென்கிற கர்வம் கூடியிருக்கும் தருணமொன்றில் எல்லோருக்கும் தலைவணங்கி நிற்க தவித்த மனதின் புதிர் அவனாலேயே விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. “இந்தாப்பா புதுமுகம், டயலாக் பேசிப் பாத்துட்டியா? நான் வசனத்த இன்னொருமுற பேசிக்காட்டவா?” அவசரத்தோடு வந்த மூத்த உதவி இயக்குநர் கேட்டதும் “வன்மத்திற்கு வன்மம் தான் பதிலென்றால் மிஞ்சுவது யாரோ? மனிதர் வாழ்வில் கருணைக்கும் இரக்கத்திற்கும் இல்லாது போகும் மனம் என்ன மனம்? தேவியே நான் செய்த பிழையை மன்னிக்கத்தான் சொல்கிறேன், மறக்கவல்ல.”
புருவங்கள் நெற்றியின் எல்லைவரை உயர்ந்து இறங்கும் ஆவேசத்தோடு பேசியவனை மலைத்துப்போய் பார்த்த உதவி இயக்குநர் “உன்னய என்னவோன்னு நெனச்சன்யா, போறும். இது போறும். பிரகாசமா வருவ…போ…” எனத் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனார்.
”கேமராமேன் டேக் எடுக்கலாமா? வாயில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டோடு இங்கும் அங்குமாக நடந்த இயக்குநரின் கழுத்திலிருந்த வியூ ஃபைண்டர் இடது வலதாக ஆடியது. ”எப்பா யாராச்சும் ஒருத்தர் போயி ஹீரோயின வரச் சொல்லுங்க…” களைத்துப் போன குரலுக்கு வலிய கொஞ்சம் வலுசேர்த்து கத்திய இயக்குநருக்கு ஒரு ஆள் சேர் கொண்டு வந்து போட்டான். விளக்குகள் போடப்பட்டதும் அவ்வளவு நேரமும் மங்கலாகி மறைந்திருந்த மலை, வனம் நீர் நிலைகளின் செட் வெளிச்சத்தில் வெவ்வேறு நிறம் காட்டின. ட்ராலியில் வைக்கப்பட்டிருந்த கேமராவை ஒன்றுக்கு இரண்டு முறை நகர்த்தி எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். சற்றுமுன் மீண்டும் ஒழுங்குசெய்த ஒப்பனையோடு வந்த ஆனந்தி தான் தயார் எனச் சொல்லுவது போல் பொதுவாக இயக்குநரைப் பார்த்து தலையை மட்டும் ஆட்டினாள். அருகிலிருந்த அவளின் மேக்கப் மேன் அவளுக்கு வியர்க்கக் கூடாதென்பதற்காக இடைவிடாமல் விசிறிக் கொண்டிருந்தான். பர்மா ராணியின் காதலனான வன ராஜா அவளிடம் மண்டியிட்டு மாலையிட காதலுடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். யதார்த்தத்தின் விருப்பம் கதைகளாகும் போது அதன் நிஜத்தோடு சம்பந்தப்பட்டவன் கதாப்பாத்திரமாவது பாக்கியமல்லாது வேறென்ன? அந்தக் காட்சியை எடுத்து முடித்துவிடுவதற்கான பரபரப்போடு எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்க, ஒருவன் மலைக்காக போடப்பட்டிருந்த செட்டில் சற்றே கரைந்திருந்த வர்ணத்தை மேலாக பூசி சரிசெய்தான். “யோவ் இவ்ளோ நேரம் என்னய்யா செஞ்ச அதெல்லாம் வேணாம், விட்டுட்டு வா… கிளாப் இன், கிளாப் இன்” கத்திய இயக்குநரின் குரல் “சவுண்ட்… கேமரா…. ஆக்ஷன்..” அந்த தளம் முழுக்க எதிரொலித்த நொடியில் பர்மா ராணியின் முன் மண்டியிட்ட வனராஜா முகமெங்கும் வழிந்தோடிய கண்ணீரோடு காதலைச் சொல்லத் துவங்கினான். ட்ராலியின் இடது பக்கத்திலிருந்து மெதுவாக கேமரா நகரத் துவங்கியது. “வன்மத்திற்கு வன்மம் தான் பதிலென்றால் மிஞ்சுவது யாரோ? மனிதர் வாழ்வில் கருணைக்கும் இரக்கத்திற்கும் இல்லாது போகும் மனம் என்ன மனம்? ராஜா உணர்ச்சி வெள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் நொடியில் அவனை விலக்கி நடக்க வேண்டி கடந்த பர்மா ராணியின் உடல் மீது அதிர்ந்து வெடித்தது ஒரு துப்பாக்கிக் குண்டின் சத்தம். எந்த ஒத்திகையிலும் வராத அந்த திடீர் மாற்றம் இன்னும் நம்ப முடியாததொரு நிஜமென ஆனந்தி தன்னுடலில் இருந்து வழிந்த குருதியை கையால் தொட்டுப் பார்த்தாள். அதற்குள்ளாக இன்னொரு குண்டும் வெடிக்க அது ஜாவேதின் வலது கையில் பட்டுத் தெறித்தது. கேமரா இயங்கிக் கொண்டிருப்பதையும் மறந்து எல்லோரும் உறைந்து போயிருந்தனர். படப்பிடிப்புத் தளத்தின் சுவர்களெங்கும் எதிரொலித்த ஜாவேதின் அலறல் பர்மா ராணிக்காக அல்ல, ஆனந்திக்காகவும் தனக்காகவும்.
எல்லோரும் நடந்த விபரீதம் புரியாமல் இங்கும் அங்குமாக ஓடியபோது இயக்குநரின் சேருக்குப் பின்னால் அத்தனை நேரமும் மறைந்திருந்து துப்பாக்கியோடு வெளிப்பட்டிருந்த முத்தப்பா உடல் அதிர நின்றுகொண்டிருந்தான். அவன் குறிவைத்தது அவளையல்ல. ஜாவேதை சுடவே அந்த துப்பாக்கியை இத்தனை நாட்களாய் காத்து வந்திருந்தான். ஆனால் இப்பொழுது எல்லாம் பிசகாகிவிட்டது. ஜாவேதை சுடுவதற்கு முன் வரையிலும் அவன் மீதான வன்மம் சிறிதும் குறைந்திருக்கவில்லை. குண்டு மாறி உடன் நடித்த ஆனந்தியின் மீது பட்டபோது அப்படியே நிறுத்தாமல் இன்னொருமுறை சுட, அந்தக் குண்டு ஜாவேதின் வலது கையில் பட்டது. தனக்கு முன்னால் மனிதர்களின் அலறலைக் கேட்ட பிறகு அவனுக்குள்ளிருந்த வன்மம் காணாமல் போய் அச்சம் பரவியது. இதை தான் செய்திருக்கவே கூடாதென மனம் வலிக்க, இனி தான் மன்னிப்புக் கேட்பதென்றாலும் முடியாதென்பது புரிய அங்கிருந்து தப்பித்தான்.
செய்தித்தாள்களின் வழியாகத்தான் ஆனந்தி இறந்து போனதும், பர்மா ராணி என்ற அந்தப்படம் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு ஒருபோதும் இனி வெளியாகவே போவதில்லை என்றானதும் தெரிந்தது. முத்தப்பா தனது அடையாளங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டான்.
தமிழ் சினிமா நேற்றின் விழா – ஒரு மழை நாளின் மாலை.
முற்றிலும் மாறிப்போயிருந்த இந்நகரில் கடந்த காலத்தின் சுவடுகள் எதையும் அவரால் பார்க்க முடியவில்லை. எந்த இடத்திலும் தன்னைப் பொருத்திக் கொள்ள விரும்பாது நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு பேத்தியுடன் வந்து சேர்ந்தார். பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த வினோத் அவரை பத்திரமாக ஒரு அறையில் அமர வைத்தான். அந்த அறையின் இன்னொரு மூலையில் கண்ணாடிக்குமுன் சிலர் ஒப்பனை போட்டுக் கொண்டிருந்தனர். கலை நிகழ்ச்சிகளுக்கான ஆயத்தம். கண்ணாடியையும் அதற்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்தபடியே இருந்தவர் மெதுவாக எழுந்து சென்று அவர்களுக்குப் பின்னால் நின்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டார். எண்பத்தியேழு வயதின் முதுமை அவ்வளவும் மறைந்து கடைசியாக ஒப்பனை போட்டிருந்த இருபத்திமூன்று வயது மனிதன் அவருக்குள் தனக்கான வசனங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டான். கை தானாகவே சென்று ப்ரஷ்ஷை எடுத்து பேன் கேக்கின் மீது பரவி முகத்தில் ஒப்பனை போடத் துவங்கியது. ஒப்பனை போட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் ஆச்சர்யமாகப் பார்க்க, அவரை அழைத்துப் போக வந்த வினோத் கண் இமைக்காமல் பார்த்தான். ஒப்பனை முடிந்ததும் அவராகவே திரும்பி “போலாமா தம்பி” என சிரித்தபோது புதிய மனிதராக தெரிந்தார். வினோத் முன்னால் நடக்க, அவனைத் தொடர்ந்து ஒரு அரங்கத்திற்குள் நுழைந்தார். நிறைய பேர் அவருக்காக காத்திருந்தார்கள். அரங்கத்தின் இரண்டு பக்கங்களிலும் அவரின் பழைய புகைப்படங்கள் ராஜா வேஷத்தோடு அலங்கரித்தபடியிருந்தன. மேடையில் அமர்ந்த போது இந்த நாள் 1948 ல் கடந்த ஒரு நாளாக இருந்திருக்கலாமோவென மனம் தவித்தது. மேடையில் பேசிய ஒவ்வொருவரும் அவரைக் குறித்து தங்களுக்குத் தெரிந்ததை தெரியாததை எல்லாம் பேசியபின் அவரை சில வார்த்தைகள் பேச அழைத்தனர். உடல் முழுக்க முன்னெப்போதும் இல்லாத பரவச உணர்வு. நடையிலிருந்த தளர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் மைக்கின் முன்னால் சென்றவருக்கு அந்தக் கூட்டத்தைப் பார்த்து எந்த வார்த்தைகளும் எழவில்லை. “இத்தன வருஷத்துக்கு அப்பறம் என்னய ஒரு நடிகன்னு நினைவுபடுத்தி இருக்கீங்க. நன்றி. எல்லாருக்கும் ரொம்ப நன்றி. லாஹூர விட்டு வரும்போது எங்கிட்ட எதுமில்ல. மெட்றாஸ்தான் எல்லாத்தையும் குடுத்துச்சு. குடுத்த வேகத்துலயே எல்லாத்தையும் எடுத்துக்கிடுச்சு. இப்ப இந்த சந்தோசம் இதையும் இந்த ஊருதான் குடுக்குது. உங்க எல்லாருக்குமே நன்றி. உங்கள மாதிரியே நானும் படத்தப் பாக்கனும்னுதான் ஆசையா இருக்கேன். வணக்கம்…” திரும்பி தனது இருக்கையில் சென்று அமரப் போனவருக்கு மாலை மரியாதை செய்து நினைவுப்பரிசு வழங்கினர். அவர் மனம் முழுக்க படம் பார்க்க காத்திருக்கும் ஆவலில் தவித்தது.
விளக்குகள் அணைக்கப்பட்டு, படம் ஓடத் துவங்கியது. சீனிவாசா சினி டோன் வழங்கும் “பர்மா ராணி’ என டைட்டில் போடப்பட்ட போது அரங்கம் முழுக்க எழுந்த கைதட்டை கண்கள் மூடி கேட்டார். அத்தனை வருட துயரங்களை இந்த சில நொடிகள் அவரிடமிருந்து மீட்டுக்கொண்டன. முன் வரிசையில் அமர்ந்திருந்தவரைத் தேடி வந்த வினோத் அவருக்கு குடிக்க தண்ணீர் குடுத்தான். அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவர் “எனக்காக நெறைய செரமப்பட்டுட்டப்பா… உனக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல. இனி நான் நிம்மதியா சாவேன்.” அவர் கைகள் இயல்பைவிட அதிகமாக நடுங்கின. வினோத் வெறுமனே புன்னகைத்தான். நாம் செய்யும் சில செயல்களுக்கான காரணங்களையோ பிரதிபலன்களையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கத் துவங்கினான். திரையில் படத்தின் முதல் காட்சி ஓடத் துவங்கியது. அந்தப் படத்தில் ஒரேயொரு காட்சியில் மட்டும் நடித்திருந்த முத்தப்பா தனது வசனங்களை பெண்மையான குரலில் பேசியதைக் கேட்டு அரங்கத்திலிருந்தவர்கள் சிரித்தனர். வினோத் திரும்பி திரையைப் பார்த்தான். கண்களிலிருந்து நீர் கசிந்தது. இந்த நிமிடத்திற்காகத்தானே இந்த அலைச்சல், காத்திருப்பு, துயரம். இரண்டு தலைமுறையாய் காத்திருப்பது அந்த ஒரு வார்த்தைக்காகத்தானே? இருளுக்குள் மெதுவாக காற்றுக்கு வலிக்காமல் கையைக் கொண்டு போய் முதுகிலிருந்து பழையத் துப்பாக்கி ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான். மிகப் பழையது. துரோகத்தின் வலியை காலங்காலமாக குடித்து துருவேறிய துப்பாக்கி. அந்தரங்கமாக ஜாவேதிற்கும் அவனுக்குமான உறவிற்கான அடையாளம். கையில் வாங்கிப் பார்த்தவரின் மனம் படபடப்போடு அடித்துக் கொள்ள, தனக்கருகில் அமர்ந்திருக்கும் இளைஞனின் முகத்தில் கடந்த காலத்தின் சாயல்களைத் தேடினார். “உங்க கிட்ட மன்னிப்புக் கேக்கனும்னு தாத்தா சாகற வர சொல்லிட்டு இருந்தாரு. முடியல. ஒரு கொல பண்ணிட்டு எல்லா அடையாளத்தையும் மாத்திக்கிட்டு கடைசிக் காலம் வரைக்கும் ஒளிஞ்சு ஒளிஞ்சுதான் வாழ்ந்தாரு. நீங்க அதுக்கப்பறம் நடிக்கவே இல்ல, தாத்தா கடைசி காலம் வரைக்கும் நாடகத்துல நடிச்சாரு… ராஜபார்ட்டாவே நடிச்சாரு.. ஒவ்வொரு நாள் நாடகம் முடிஞ்சு வேஷம் கலைக்கிறப்பவும் உங்க கிட்ட தோத்துப்போன வேதனையோடதான் வேஷத்த கலைச்சாரு… மன்னிப்புக் கேக்கறதுக்காக உங்கள தேடினோம்… இத்தன வருஷத்துக்கு அப்பறம் நான் கண்டுபிடிச்சிட்டேன். மன்னிக்கிறதும் தண்டிக்கிறதும் உங்களோட விருப்பம்.” திரையில் முத்தப்பாவின் காட்சி முடிந்து போனது. ஜாவேத் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டார். நெற்றியில் முத்தமிட்டார். அவர் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தவிர்த்த வினோத் முகத்தை படம் ஓடிக் கொண்டிருந்த திரையின் பக்கமாகத் திருப்பிக் கொண்டான். அங்கு வனராஜா தன் காதலியைத் தேடி பர்மியத் தேசத்திற்குள் நுழைந்துவிட்டான்.